மகளிர் தினம் வெறும் கொண்டாட்ட நாள் அல்ல | தினகரன் வாரமஞ்சரி

மகளிர் தினம் வெறும் கொண்டாட்ட நாள் அல்ல

நாளை உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. நீண்ட காலமாகவே உலக நாடுகள் இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இவ்வாறு கொண்டாடப்படுவதால் மகளிர் விவகாரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்ற ஒரு கேள்வியுடன், சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கவே செய்கிறது. இந்த மகளிர் தினத்துடன் மற்றொரு சர்வதேச தினத்தையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். அடுத்த மே முதலாம் திகதி வரவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தன்று முன்நிறுத்தப்படும் உலகத் தொழிலாளர் சமூகமும் சிக்காக்கோ போராட்ட காலம் முதல் இன்றுவரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நிகழ்த்தி வருகின்ற போதிலும் முதலாளித்துவத்தின் அலுங்குப் பிடியில் இருந்து தொழிலாளர் சமூகம் எப்படி இன்றளவும் மீள முடியாது தவிக்கிறதோ அதேபோலத்தான் ஆணாதிக்க கோரப்படியில் இருந்து சர்வதேச மகளிர் சமூகமும் விடுபடும் வழி தெரியாது தவித்து வருகிறது என்பதே உண்மை.

பெண்கள் எதிலிருந்து முதலில் விடுபட வேண்டுமென்றால் தம்மைப் பற்றி அவர்களே உருவாக்கி வைத்திருக்கும் தவறான சிந்தனைகளில் இருந்துதான். ஆண் உரிமைகளை பகிர்ந்து கொள்ளவோ அல்லது விட்டுத்தரவோ முன்வந்தாலும் பெண்களே அதை விரும்புவதில்லை. தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படும் சில நம்பிக்கைகள், சமய மற்றும் கலாசார ரீதியான சடங்குகள் என்பனவற்றுக்கு ஆண்கள் அவசியமில்லை எனக் கருதினாலும் பெண்கள் அவை எல்லாம் இருக்கத்தான் வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதை பார்க்க முடிகிறது. விதவைகள் தொடர்பான தமிழ்ப் பெண்களின் நம்பிக்கைகள் பெரும்பாலான பெண்கள் அப்படியே பின்பற்றப்படுவதையே விரும்புகிறார்கள். பெண்கள் பெரிய பட்டங்கள் பெற்று உயர் பதவிகளில் வீற்றிருக்கலாம். இலங்கையின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருமளவு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஏராளமானோர் கைநிறைய சம்பாதிக்கின்றனர். இலங்கையின் பிரதான தொழில் துறைகளான ஆடைக் கைத்தொழில் துறை மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகிய இரு துறைகளிலும் பெருமளவில் பணியாற்றி வருபவர்கள் பெண்களே.

இவை மகிழ்ச்சிக்குரிய தகவல்களானாலும் இவ்விரு துறைகளிலும் பணியாற்றி வருபவர்கள் பெருமளவு சுரண்டல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கடுமையான உழைப்பின் பின்னரும் வாழ்வதற்கான வருமானம் கிட்டாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அனைவருமே அறிந்த உண்மையாக இருந்தாலும் இந்நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வாரமஞ்சரி இதழின் இன்னொரு பக்கத்தில் வெளியாகி இருக்கும் மலையகப் பெண் தொழிலாளர்கள் தொடர்பான கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பல்வேறு தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தாம் மலைகளில் பணியாற்றும்போது இயற்கை உபாதைகளில் இருந்து விடுபடுவதற்கான எந்த வசதிகளும் மலைகளில் செய்து தரப்படாத சூழலே காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர். பணியாற்றும் தேயிலை மலைகளில் மலசல கூடங்கள் கிடையாது. என்றைக்குமே இருந்ததில்லை. உபாதை ஏற்பட்டால் பற்றைக்காட்டுப் பக்கமே ஒதுங்க வேண்டும். கழுவுவதற்கு தண்ணீர் கிடையாது. மாத விடாய் காலமானால் பெரும் அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டும். வேலையைத் தொடர முடியாத நிலை என்றால் அரைநாள் விடுமுறை கேட்கும்போது கங்காணி அல்லது சுப்பர்வைசர்மார் நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஏன், எதற்கு என பல கேள்விகளைக் கேட்பார்கள். பகல் உணவு அருந்துவதற்கான ஒரு தனி இடம் தண்ணீர் வசதியுடன் கிடையாது. மழைகாலம் என்றால் நனைந்தபடியே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது என்றெல்லாம் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவை மிகவும் அவசியமான நிறைவேற்றி வைக்க வேண்டியவை என்பது நம்மில் பலர் சிந்தித்தும் பார்க்காதவை. எத்தனையோ கோலாகலமான மே தினங்களும் மகளிர் தினங்களும் கடந்து சென்ற பின்னரும் அரசாங்கமும் வேலை கொள்வோரும் இத் தேவைகளை நிறைவேற்றி வைத்தமாதிரித் தெரியவில்லை.

ஆடைத் தொழிற்சாலைகளில் கழிப்பிட வசதி உள்ளதாயினும் அவசியமான வேளைகளில் எல்லாம் அவற்றை உபயோகிப்பதில் கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் கண்காணிப்பாளர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே கழிப்பறைகளை உபயோகிக்கலாம் என்றும் தெரிகிறது.

எனவே தொழிலாளர் உரிமைகளும் பெண் உரிமைகள் மற்றும் சமத்துவமும் என்றைக்கும் தீர்க்கப்படுவதாக இல்லாமல் ஓயாத கயிறிழுப்பாகவே இருந்து வருகிறது. எனவே இரண்டு விடயங்களிலும் ஓயாத போராட்டங்கள் நிகழ்த்தப்படுவதன் மூலமே உரிமைகளைப் பெற முடியும் என்பதே நடைமுறை உண்மை. ஆண்களின் உலகமாக, ஆண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குவதாக சமூக வாழ்க்கை அமைந்திருப்பதால் மகளிர் முதல் கட்டமாக தமது தவறுகளையும் நம்பிக்கைகளையும் திருத்திக்கொண்டு ஆண்கள் வசமிருக்கும் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். பெண்கள் தமது பல உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு கணிசமான ஆண்களின் ஆதரவு இருந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பெண்கள் உரிமைகளைப் பெறுவதில் ஆண்கள் அல்ல; பெண்களே முன்நின்று குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

இலங்கையில் உள்ள பெண்கள் அமைப்புகளை எடுத்துக் கொண்டால் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவையாக அவை இல்லை. பெருந்தோட்டங்களில் மலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு கழிப்பறை மற்றும் உண்ணும் இடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதன் பேரிலான கலகக்குரல்களை தமிழ் மற்றும் சிங்கள பெண் அமைப்புகள் குரல் கொடுக்க முன்வருமா? பெரும்பாலான பெண் அமைப்புகள் ஒன்று கூடிக் கலையும் அமைப்புகளாகவும் பெயருக்காக நற்பணி செய்பவையாகவுமே உள்ளன. எவை எல்லாம் பெண் உரிமைக்கும், விடுதலைக்கும் குறுக்காக நிற்கின்றனவோ அவை மதமாகவோ, கலாசாரமாகவோ அல்லது பாரம்பரியமாகவோ, எவையாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து நிற்கும் பண்பை நாம் தமிழகத்தில் காண்பதுபோல இலங்கை தமிழ்ப் பெண்ணுலகில் காண முடிவதில்லை என்பது வருத்தத்துக்குரியது. மகளிர் உரிமை, விடுதலை என்பது மேம்போக்கானது அல்ல. ஒரு நாள் கூத்துமன்று. இலங்கை தமிழ் மகளிருக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. வாழ்வாதார பிரச்சினைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு பெண்களை நெட்டித்தள்ளும் பிரச்சினைகள் என சொல்லி மாளாத பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். இத்தினத்தை ஒரு நாள் கொண்டாட்டமாகக் கருதாது, வசதியும் வாய்ப்பும் சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் இப்பெண்களின் விடுதலைக்காக பரந்த அளவில் சேவையாற்ற முன்வர வேண்டும். பெண்கள் களத்தில் இறங்கினால் ஆண்களும் கை கொடுப்பார்கள்.

Comments