மூக்குக்கண்ணாடி வழியாக... | தினகரன் வாரமஞ்சரி

மூக்குக்கண்ணாடி வழியாக...

சமீப காலமாக அவன் மற்றவரை உற்று கவனிப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தான். எதிரே இருப்பவர் யாராயினும் அவர்களது உடல் முழுதும் தன் பார்வையை அலைய விடுவது அவனுக்கு பழக்கமாகிப் போனது.முதலில் தன் வேலை நேரங்களை தவிர்த்து மீதி நேரங்களை இதற்காக செலவிட்டவன் போகப் போக இதையே வேலையாக முழுநேரமும் பார்க்கும் அளவில் வந்துவிட்டான். அது அவனுக்குள் ஏதோ ஒன்றை திருப்திப்படுத்திக் கொண்டிருந்தது.

பல நேரங்களில்  அவன் தன்னை ஒரு நொண்டியாய் நினைத்து கொள்வான். காலை இழுத்து  இழுத்து நடந்து பார்ப்பான். சில நேரங்களில் தன்னை ஒரு கை இல்லாதவன் போல் கருதி ஒரு கையை கொண்டே எல்லா வேலைகளையும் செய்வான்.கூன் விழுந்த ஒரு ஆசாமியை போல நடக்க முயற்சிப்பான், ஒரு ஊமையைப் போல வார்த்தைகள் ஏதும் வாயிலிருந்து தெளிவாக வரவிடாமல் உளறிக் கொண்டிருப்பான். பல்வேறு அவதாரங்களை எடுப்பதில் அவனுக்கு சுவாரஷ்யம் தொற்றிக்கொண்டது .குருடனாக மட்டும் தான் அவனால் இன்னும் இருக்க முடியவில்லை .அதை செய்ய வீட்டில் யாருமில்லாத ஒரு நாள் வரும் வரையும் பொறுமை காக்க வேண்டும்.

இல்லையேல் அவன் நாள்முழுதும் கண்களை கட்டிக்கொண்டிருப்பதை பார்த்து யாரும் அவனை பைத்தியகாரனென்று விளித்து விடலாம்.பிறகு அவன் பைத்தியக்காரனொருவனாய் இருந்து பார்க்கவும் ஆசைப்பட்டு விடலாம்.

தனிமையாய் இருக்கும் நேரம் அதிலும் அதிகமாய் தூக்கம் வராத பின்னரவுகளில் தான் அவன் ஊமைகளையும், நொண்டிகளையும், குருடர்களையும், முடங்களையும் தேடிச் செல்வான். இருந்த இடத்திலிருந்தே அங்கவீனர்களையும் உடல் குறைபாடுடையவர்களையும் தேடிச்செல்ல அவனால் மட்டும் தான் முடியுமாயிருந்தது. இந்த நகரத்தில் உடம்பில் குறைபாடுடைய அனைவரையும் அவனுக்கு தெரிந்திருந்தது. யாரும் அவனிடமிருந்து அவ்வளவு எளிதில் தப்ப முடியாது.புதியவர்கள் தேவைப்பட்டார்கள். இப்போது அவன் நினைவில் பதிவு வைத்திருப்பவர்கள் அவனுக்கு போதுமானவர்களாக இருக்கவில்லை.

செய்னம்பு என்று ஒருத்தி இருந்தாள். அவனது வயதின் இருமடங்கிருக்கும். கை, கால் எல்லாம் நன்றாக தான் இருந்தது. உடல் வளர்ச்சி தான் அவளது உடல்  குறைபாடு. அவனது இடுப்பளவு கூட இருக்க மாட்டாள். பாவாடை தாவணி கட்டிக் கொள்வாள். வலது தோளில் துணியாலான ஒரு நீண்ட கைப்பை இருக்கும்.

ஊரின் ஒவ்வொரு பகுதிக்கென்றும் அவள் நாட்களை வகுத்து வைத்திருந்தாள். அதன் படி அந்த பகுதி வீடு வீடாக சென்று யாசகம் கேட்பாள்.  யாராவது இல்லை என்றாலும் அவள் முகம் மாற்றங்கள் ஒன்றையும் காட்டாது.வீட்டு பெண்கள் கூடி நின்று அவளிடம் தான் ஊர் கதை கேட்பார்கள் .ஒரு பத்து ரூபாயை கொடுத்து விட்டால் அவளும் பல இரகசியங்களை அவர்களது காதில் ஊதிவிடுவாள். வார்த்தைகளின் பின்பு "கா" போட்டு பேசுவாள். அவனிடமும் வா"கா" போ"கா" என்று பல முறை அப்படி பேசியிருக்கின்றாள். அதனாலே  மறக்க முடியாத பேர்வழியாக திகழ்ந்தாள்.

இன்னொருத்தி இருந்தாள்.ஊமை. பட்டப் பெயர் ஒன்றை கொண்டு கூப்பிட்டு கூப்பிட்டு அவளின் உண்மையான பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவளுக்கு அப்படி கூப்பிடுவது பிடிக்காது. யாராவது அவளை அப்படி விளித்துவிட்டால் அவளது பாஷையை கொண்டும் சரமாரியாக சத்தமாக ஏசுவாள்.

சின்ன பையன்கள் வேண்டுமென்றே அவளை சீண்டிவிட்டு ஓடிவிடுவார்கள். அவள் அடித்தொண்டையால் வாய் கிழிய கத்திக்கொண்டிருப்பாள். அவளது ஏச்சுகளும் வார்த்தை தெளிவில்லாத பேச்சுகளும் அடங்க மணித்தியாலத்தை அண்மித்த நிமிடங்கள் தேவைப்படும். செய்னம்புவை போல இவளிடத்தில் சில்லறைகள் செல்லுபடியாகாது. பழைய துணியையோ, பாத்திரங்களையோ, தின்பண்டங்களையோ தான் அவள் எதிர்பார்ப்பாள்.கை நீட்டி கேட்டால் இல்லையென்ற பேச்சுக்கே இடமில்லை  தனக்கு ஏதாவதொன்று தந்தே ஆகவேண்டுமென நினைப்பாள்.

லாபிரையும் அவன் நினைவில் கொண்டு வராத நாட்களில்லை.நன்கு படித்த மனிதர். எப்போதும் சுத்தமாக உடை அணிந்து நேர்த்தியாய் இருப்பார்.வேலை பார்க்குமிடத்தில் கையை இயந்திரத்திற்கு கொடுத்துவிட்டாராம். இடது முழங்கைக்கு மேலாக கை துண்டாகி போயிருந்தது.

கனமான பிளாஸ்டிக்காலான போலி கை ஒன்றை பொருத்தியிருந்தார். அதை முழுநீள கை சட்டை அணிந்து மறைத்துகொள்வார்.  தூரமாய் இருந்து பார்த்தால் எவ்வித குறையுமில்லாத நல்ல கட்டுமஸ்தான ஆள் போல தெரியும். அவனுக்கு லாபிரை அவரது ஊனத்தை விடவும் அவர் அணிந்து கொண்டிருக்கும் மூக்குக் கண்ணாடி தான் அதிகமாய் நியாபகப்படுத்தும். அச்சு அசலாக அவனது தாத்தாவின் கண்ணாடியே தான்.

சின்ன வயதில் இந்த மூக்குக்கண்ணாடி மேல் அவனுக்கு ஆசை இருந்தது.அவனது தாத்தா அந்த காலத்து பெரிய சதுர வடிவான தடித்த  மூக்குகண்ணாடியை பாவித்தார். முகத்திற்கு அளவான அந்த பெரிய கண்ணாடியை திருட்டு தனமாக போட்டுக்கொள்வதில் அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தாத்தா பார்த்தால் திட்டுவார். மருந்து கண்ணாடி இதை நீ போடக்கூடாது என்பார். மூக்குக்கண்ணாடி அணிந்திருப்போர் யாவரும் அழகானவர்களாகவும் அறிவாளிகளாகவும்  இருப்பதாக அவனுக்கு தோன்றிற்று. வருங்காலத்தில் தானும் அப்படி இருப்பேன் என அவன் அப்போது நினைத்தும் பார்த்திருக்க மாட்டான்.அவனுக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை எழுத்துகளை பார்க்க மட்டும் மூக்கு கண்ணாடி தேவைப்பட்டது.

இபோது மனிதர்களை நோட்டமிடுவதற்கும் மூக்குகண்ணடியை பயன்படுத்த துவங்கிவிட்டான். அவனது வெற்று கண்களுக்கு அகப்படாத சாமிநாதனின்  இடது கையின் ஆறாவது விரலினை அவனது மூக்குக்கண்ணாடியே காட்டிக்கொடுத்தது. அதிலிருந்து மூக்குக்கண்ணாடி வழியாக பார்க்கையில் அது மனிதர்களிடத்தில் தனக்கு தேவையானதை இலகுவில் கண்டுபிடித்து கொடுக்க உதவியாய் இருப்பதாக அவன் நம்பத்தொடங்கினான்.

அநேகமாய் புதியவர்கள் யாரையாவது சந்திக்க நேர்ந்தாலோ அல்லது  யாரிடமாவது உடல் குறைபாடொன்றை கண்டுபிடித்தே ஆகவேண்டுமென முனைந்தாலோ கண்ணாடியை அணிந்து கொள்வது தான் அவன் செய்யும் முதல் காரியமாய் இருக்கும்.

அவனது வீட்டிற்கு இரு வீடு தள்ளி நெட்டை என்று ஒருவன் இருந்தான். அவனது இடது கால் சாதாரணமாக தான் இருந்து.அவனது வலது காலோ ஏதோ கால் எலும்புகளை ஒன்றிணைத்து அதன் மேல் தோலை சுற்றிவிட்டது போல் இருக்கும்.கையினால் சுற்றி பிடிக்கக் கூடிய அளவான ஒரு தடியைப் போல் அது ஒடுங்கி நலிவடைந்திருந்தது.நடக்கும் போது குனிந்து கையினால் வலது காலை பிடித்துக்கொண்டு நடப்பான்.

அவன் உன்னிப்பாக பார்த்த போது தான் விளங்கிற்று நெட்டை நடக்கையில் கையால் தூக்கி தான் காலை எட்டு வைக்கின்றான்  என்று.ஊரில் ஒரு கதை பரவியிருந்தது. நெட்டையின் அந்த ஊனமான வலது கால் சாதாரண மனிதனின் காலை விடவும் பலம் வாய்ந்ததாம்.ஒரு தேங்காயை அந்த கால் கொண்டு மிதித்து நொறுக்கிக் காட்டினானாம். அவன் அதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. எனினும் அந்த கதையை உண்மை என்று நம்பும் நிலையில் தான் இருந்தான்.

நெட்டையின் சகோதரர்கள் எல்லோருமே நல்ல சம்பாத்தியகாரர்கள் .அவனும் பணத்திற்கு கஷ்டப்படும் ஆள் போல் விளங்கவில்லை. நெட்டை என்ன தொழில் செய்கிறான் என்று அவனுக்கு இது வரை தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் நெட்டை கை நீட்டி காசு கேக்க மாட்டான்.

அதனாலே அவனுக்கு நெட்டையை பிடித்திருந்தது.லாபிரையும்  அவனுக்கு பிடிக்கும்.ஆனால் செய்னம்புவையும் அந்த ஊமையையும் அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.அவர்கள் தன் குறைபாட்டை காரணம் காட்டி பிச்சை எடுக்கிறார்கள்.ஊனமானவர்களையும் அங்கவீனர்களையும் மக்கள் மனதில் பிச்சைக்காரர்களாக  பதிய வைக்கிறார்கள். உடல் குறைபாடுடைய எல்லோரையும் அவர்கள் அவமானப்படுத்துவது போல் அவனுக்கு தோன்றிற்று.அது அவனுக்கு அவ்வளவு உவப்பதாகவும் இருக்கவில்லை.

அவனது அப்பா முன்பொரு கதை சொன்னார். அவர் ஒரு முறை பிரயாணத்திலிருக்கும் போது அவர் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது இளைஞன் அமர்ந்திருந்தானாம்.

வகுடு வைத்து தலைமுடி வாரி குருந்தாடி வைத்து நன்கு ஆடை அணிந்து அழகாக இருந்தானாம்.ஆனால் அப்பா அவன் கைகள் இரண்டையும் காணவில்லையாம்.முதலில் கைகள் இரண்டும் இல்லை என்று தான் அப்பா நினைத்தாராம். பிறகு தான் அவனுக்கு கைகள் இருக்கிறது என்றும் ஆனாலும் அதன் வளர்ச்சி பாதியிலேயே நின்று போய் இருக்கிறதென்றும் தெரிய வந்ததாம். முழங்கை இருக்க வேண்டிய இடம் வரைக்கும் தான் அந்த இளைஞனின் முழு கையும் இருந்ததாம். அப்பா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கும் அந்த இளைஞனை பார்க்க வேண்டும் போலிருந்தது.

அவன் அவனது மனதால் அந்த இளைஞனுக்கொரு உருவம் கொடுத்திருந்தான். அந்த உருவத்திலேயே  அவன் மற்ற அங்கவீனர்களையும் ஊனர்களையும் தரிசிப்பதை போல அந்த இளைஞனையும் தரிசித்து வந்தான். அப்பா இன்னொன்றையும் கூறியிருந்தார். அந்த பயணம் முழுதும் அந்த இளைஞன் தனித்து தான் வந்தனாம். உதவியாக கூட யாரும் வந்திருக்கவில்லையாம். அவன் அவனுக்கு தெரிந்த அங்கவீனர்களையும் உடல் ஊனமானவர்களையும் வரிசையாக நினைத்துப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் தனித்து விடப்பட்டிருந்தார்கள்.தனியே விடப்பட்டிருந்தார்கள். அதை நினைக்கையில் ஏதோ ஒன்று அவன் தொண்டையையும் இலேசாக அடைத்தது.

அவன் தான் அமர்ந்திருக்கும் கட்டிலின் நேர் எதிரே இருக்கும் ஜன்னலினூடாக பார்வையை வீசினான். வீதிக்கு நிழல் விட்டபடி வைத்தியசாலை வளாகத்திற்குலிருக்கும் அந்த பெரிய வாகை மரத்தின் கீழாக எப்போதும் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பார். அவரும் அவன் நினைவில் பதிவு வைத்திருந்த ஒருவராக இருந்தார் .இடது முழங்காலின் சற்று கீழாக அவரது கால் துண்டாகியிருந்தது. அங்கிருந்த படியே போவோர் வருவோரிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருப்பார். ஆனாலும் கொஞ்ச நாட்களாக அவரை அங்கு காணவில்லை. இனி ஒரு போதும் அவரை பார்க்க இயலாமலும் போகக்கூடும் என அவன் நினைத்துக்கொனடான்.

அவனருகே ஒரு வைத்தியர் தன் கைகளில் ஏந்திக்கொண்டிருக்கும் காகிதங்களை பார்ப்பதும் பிறகு அவன் காலை பார்ப்பதுமாக நின்றிருந்தார். அவன் தனது காலைப் பார்த்தான். அதில் ஆங்காங்கு புண்கள் வந்து வெந்துபோயிருந்தது. புண்களிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது.

வைத்தியர் பார்க்க சீழ் வடிந்து கொண்டிருப்பது அவனுக்கு அசூசையாக இருந்தது. ஒரு துண்டைக்கொண்டும் வைத்தியர் காகிதங்களில் மூழ்கிருக்கும் வேளைகளில் அதை துடைத்தபடியிருந்தான்.வைத்தியர் அருகே வந்து அவன் தோளில் கைவத்தார்.பின் மெதுவான குரலில் சொன்னார்.

"காலை எடுக்க வேண்டி வரலாம்.எதற்கும் கொஞ்சம் பொறுமையாக இருந்து பார்ப்போம்".அவன் வாய்க்குளிருந்த ஒரு மிடறு தண்ணீர் அவனது தொண்டைக்குழியை விட்டும் கீழிறங்க மறுத்தது.அவன் வைத்தியரைப் பார்த்தான்.அதை தவிர வேறு எதனையும் செய்யமுடியுமான நிலையில் அவனிருக்கவில்லை.அவர் தனது முகத்தின் சுருக்கங்களை தளர்த்தி அவனை சோகமாக பார்க்க முயற்சித்தவாறே அடுத்த கட்டிலை நோக்கி நகர்ந்தார்.

அவன் தனது வலது காலில் கைகளை படரவிட்டு தடவிக்கொண்டான்.

ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததால் அவனுக்கு அதிர்ச்சிகரமான கவலைகளேதும் கிடையாது. இருந்தாலும் காலில் இருந்த புண்கள் அனைத்தும் தற்காலிகமாய் மனதிற்கு இடம்மாறிக்கொண்டது போலிருந்தது. அவன் தன் பார்வையை மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வீசினான்.

அங்கு அந்த பெரியவர் வழமையாக அமர்ந்திருக்கும் இடத்தில் வேறு யாரோ அமர்ந்திருந்து பிச்சை கேட்பது தெரிந்தது.அவன் தன் பார்வையை மறைத்து கண்களில் தேங்கி நின்ற நீர்ப்படலத்தை துடைத்துக் கொண்டு கண்களை சுருக்கிப் பார்த்தான்.இருந்தாலும் அந்த உருவம் சரிவர தெரியவில்லை.அவனுக்கு திடிரென்று ஏதோ நியாபகம் வந்தது.அவன் அவசரமாக தன் மூக்குக்கண்ணாடியை தேடியெடுத்து அணிந்துகொண்டான்.

பாஹிம் எம்.பரீட் 

Comments