கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு -1

என் பன்னிரண்டாம் அகவையில், அன்றைய ரேடியோ சிலோனும் இன்றைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானமுமாகிய டொரிங்டன் கட்டட வாசல் படிகளை, “ரேடியோ மாமா” சரவணமுத்து அவர்களது சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒரு குட்டிக் கதை வாசிப்பதற்காக மிதிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.  

அதன் பிறகு வாலிப வயதில் முஸ்லிம் நிகழ்ச்சிக்குக் கட்டாயமாகத் தேவைப்பட்ட தமிழ்த்தட்டெழுத்தாளச் சேவையில் பத்தாண்டுப் பணிகள்.  அதன் பின்புலத்தில் – திரைமறைவில் பற்பல ஊழியங்கள் தேசிய ஒலிபரப்புக்கும், முஸ்லிம் சேவைக்கும். அதே சமயம் ‘ஊடகத் துறையிலும் ஊடாட்டம் (தினகரன்) ஆட்சியாளர் அனுசரணையில்.  

இந்தப் பின்னணியில் மூப்பான வயதில், கடந்த 17.02.2021ல் அந்நிலையக் கட்டடத்திற்குள் நுழைகிற வாய்ப்பு ஏற்பாடு ஒரு நிகழ்ச்சி பற்றிய பிரதிப்பணிப்பாளர் ஒருவருடன் கலந்துரையாடச் சென்றிருந்தேன்.  

அந்தப் பிற்பகலில் அக்கட்டடத்தையும் சுற்றுச் சூழலையும் கண்ணோட்டம் இட்ட போது அதிர்ச்சி.  

ஆளரவம் அற்று, பாழ் பட்டுப் பரிதாப விழி விழித்தது நிலையம்.  
நுழைவாயிலில் ஓரிரு பாதுகாவலர்கள். ஒருவர் உஷ்ண மானியால் உடம்பைச் சோதிக்க தயார் நிலையில் அதற்கு முன் உடம்பில் ஊடாடக் கூடிய கிருமிகளை கைகளைத் துப்பரவு செய்து கொள்ள வேண்டுமே.  

ஸ்டெரிலைஸர் (Sterilizer) எங்கே என்று தேடினால் இல்லை! இல்லவேயில்லை! ஓர் அரைத்துண்டு ரெக்ஸோனா சவர்க்காரக் கட்டி இருந்தது. தடுமாறிப் போய் அதைக் கொண்டு சமாளித்து கழுவ பைப்பைத் திறந்தால், கொட்டுது சொட்டுது மழைத்துளிகள்! (டி.ஆர். மகாலிங்கம் பாடியது)  

என்ன இது கேவலம்? நாளொன்றுக்கு மும்மொழிகளிலும் கைகளைக் கழுவ கத்தோ கத்தோ என்று கத்தும் வானொலி நிலைய வாயிலில் இப்படியொரு காட்சியா? சவர்க்கார கட்டிகளையும் கிருமி நாசினித் திரவத்தையும் அன்பளிப்புச் செய்யவா எனக் கேட்டும் வைத்தேன்!  

இச் சமயமே இளவயதில் அனுபவித்த இலங்கை வானொலி நிலைய கோலாகலக் காட்சிகள் கண்ணெதிரே தோன்றின. அதனையே ஆரம்பத்தில் பகிர்ந்தேன்.  
கடுமையான கசப்பை விழுங்கியவாறு தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடல் நடத்தி விட்டு சத்தம் கித்தம் போடாமல் வந்தது அதிசயம்!  

கசப்பு -2

கடந்த ஞாயிறு (21.02.2021) ‘தாய் மொழித்தினம்’ உலகெங்கும். அந்தந்த நாட்டவர் அவரவர் அன்னை மொழியை நினைத்துப் போற்றிய நிலையில்- –  

இங்கும் அங்கும் (தமிழகம்) அன்றையத் தினம் எப்படி என்று ஒரு கழுகுப்பார்வை இட்டால்... ஊஹூம்! அப்படியொன்றும் அழகழகாக வர்ணிக்கும்படியாக இல்லை.  

Zoom என்கிற வலைத்தளத்திலோ கொழும்பில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவின் போதோ ஏதும் விசேடமாக என அறிந்தேனில்லை.  

நமது வார மஞ்சரி உட்பட, வாரவெளியீடுகள் மட்டும் தன் கடமைகளைச் செய்தது நெஞ்சினிக்கச் செய்தது.   எவ்வாறாயினும் ‘தாய் மொழிக் கொலைகள்’ மட்டும் நம் மண்ணில் குறைவின்றி நாளும் பொழுதும் நடக்கின்றன என்பதற்கு இங்கே வழங்கியுள்ள படங்கள் காட்சியே சாட்சி!  

தமிழகம், தஞ்சாவூர், ஒரத்த நாடு ஊரைச் சேர்ந்த கவிஞர், கனடாவில் வாழும் ஏ. புஹாரி என்பார் தாய்மொழி பற்றிப் பதித்திருப்பதை அர்ப்பணிக்கிறேன் அபிமானிகளுக்கு.  

* ஒரு மனிதனின் அடையாளம் அவன் கைரேகைகளில்... ஓர் இனத்தின் அடையாளம் அதன் தாய்மொழியில்....  

கசப்பு -3

ஒரு பெரும் தேசத்தின் ஒரு பகுதியை (மாநிலம்) ஆட்சிபுரியும் அரசு ஒன்று, குடிகெடுக்கும் குடிக் கடைகளை எக்கச் சக்கமாக நடத்தி, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறது. அந்த அரசுக்குப் பெயர் என்ன கேட்டால் அபிமானிகள் சொல்வீர்களா? சட்டெனச் சொல்பவர்களைப் பாராட்டுவேன்.  

கசப்பு கசப்பான விவரங்களை அறிய புகழுக்குரிய நடிகரும், தற்சமயம் ‘மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி நடத்தும் கமல்ஹாசனே அபிமானிகளுக்கு உதவுகிறார்.  

மதுபோதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளை தாக்குவது வரை சென்று விட்டது.  

மது விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரிகளை நியமித்து இலக்குகளை நிர்ணயித்து பெருக்க வேண்டிய தொழிலும் அல்ல.  

கல்வி, சுகாதாரம் மருத்துவம், குடிநீர், சட்டம் ஒழுங்கு, தொழில் வளர்ச்சி, விவசாயத்துறை வளர்ச்சி என்று அரசின் கவனமும் ஆற்றலும் செலவிட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.  

கொரோனாவினால் வருவாய் இழந்த ஏழை மக்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாட அரசின் மூலம் ரேஷன் கடை வாயிலாக கொடுக்கும் பணத்தை மீண்டும் மதுக்கடைகளின் மூலமாக திரும்ப வசூலித்து விடுகிறோம் என்று அமைச்சரே பேசும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இழிந்து போய் கிடக்கிறது.  

எப்படி, எப்படிப் பார்த்தாலும் கணித்தாலும், மதுவால் வரும் வருமானம், அரசுக்கு அவமானம்.  

தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் கமல்ஹாஸன் அரசியல்வாதியாக மாறி குரல் கொடுத்தாலும் குடிகாரர்கள் பெருமளவில் பெருகிப்போய் குடிப்பழக்கம் அளவுக்கதிமாகப் போய் விட்ட நிலையில் அவர்கள் அத்தனை பேரின்தும் வாக்குகளும் மதுக்கடைகள் நடத்துபர்களான இப்போதையத் தமிழக அரசுக்கே போய்ச்சேரும் என்பது என் பேனாவின் கணிப்பு.  

ஏனெனில், புதிதாக ஆட்சிக்கு வருவோர் மதுக்கடைகளை இழுத்து முடிவிட்டால் குடிப்பது எப்படி?  

இதில் பாவப்பட்ட ஜன்மங்கள் தாலிக் கொடிகளைப் பறிகொடுக்கும் பெண் திலகங்களே..  

இனிப்பு
 
கடந்த (21.02.2021) வாரமஞ்சரியின் 18ஆம் பக்கம் பலரது கவனத்தையும் குறிப்பாக நாடகத்துறைச் சார்ந்தோரை ஈர்த்தது போல் என்னையும் கவர்ந்தது.   என் நிழற்படமும் இடம்பெற்றது என்பதல்ல காரணம், (நியாயப்படி எனக்கு முன்னோடிகளானவர்களின் முகங்களும் காட்டப்பட்டிருக்க வேண்டும்) நான் மெய் மறந்து லயித்தது, ஓர் அறுபதாண்டு காலத்திற்கு முந்திய நிகழ்வுகளை ஆய்வு ரீதியில் அள்ளித் தெளித்திருந்ததே!  

எழுதியிருப்பவரோ ஒருபுது முக எழுத்தாளர். பேராசிரியரோ, கலாநிதிலோ அல்லர். அவர்கள் செய்திராத பணி அவருடையது. தகவல்களைத் தேடி எங்கெல்லாம் முக்குளித்தார் என்பது வியப்பிலும் வியப்பு. விசாரித்ததில், “எம்.எஸ். அப்துல் லத்தீப்” என்பார் வானொலி நாடகக் கலைஞர் என்பதும், 1992ல், 29 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தேர்வில் வெற்றி பெற்றவர் என்பதும், இப்போது கனடாவில் வாழும் என்னரும் உடன்பிறவாச் சகோதரர் எம். அஷ்ரப் கான் தயாரிப்பில் ஒலிபரப்பான பெரும்பாலான நாடகங்களில் பங்கெடுத்தவர் என்பதும் தெரிந்தது.  

நிதிப் பற்றாக்குறை காரணமாக முற்றாக புதிய நாடகங்களுக்கு சந்தர்ப்பமின்றி நடிக்கக் கிடைக்காமல் மூலையில் முடங்கிப் போயிருக்கும் அப்துல் லத்தீப் போன்ற கலைஞர்கள் ஆய்வெழுத்தாளர்களாகப் பரிணமித்திருப்பதும் ‘வாரமஞ்சரி’ இடம் வழங்கியிருப்பதும் இனிப்பு இனிப்பான செய்திகள்.  

கட்டுரையைப் பின் காணப்படும் குறிப்புகளுடன் முடிந்திருப்பது முத்தானது.  நாடாளாவிய ரீதியில் நாடகப் போட்டியொன்று நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதுவே எழுத்தாளர்களையும், நேயர்களையும் வானொலியின் பால் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.  

அதற்கான பரிசுகள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கு வானொலி நிர்வாகம் எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. இதற்காக அனுசரணையாளர்கள் பெருமனதோடு உதவக் காத்திருக்கிறார்கள்.  

அட! முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவுக்கு அடித்ததே அதிர்ஷ்டம்! கலைஞர் அப்துல் லத்தீப் எந்த நிச்சயத்துடன் இதைப் பதித்தாரோ புரியவில்லை.  

எவ்வாறாயினும் ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்ற தமிழ் வழக்குப்படி அவர் பின்னே வானொலி நாடகங்களுக்குப் புத்துயிர் ஊட்ட ஒரு சிலர் உள்ளதாகவே என் பேனா பேசுகிறது.  

நல்ல இனிப்பைத்தானே ஒரு கலைஞர் ‘வாரமஞ்சரி’ வாயிலாக வழங்கியிருக்கிறார். வாழ்த்துவோம்.  

இந்த வகையில் அந்தக் கலைஞருக்கு வானொலி மேலிடமும், அரசினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஆலோசனை சபையும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து, உடனடியாகவே செயல்படவேண்டும் என்பது இனிப்பை வழங்குபவரது உள்ளார்ந்த ஆசை. ஆசை கொள்வதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. ‘அவர்’ தேசிய ரீதியில் அரசினால் ‘நாடக கீர்த்தி’ யாகத் தாமரைத் தடாக அரங்கில் கௌரவிக்கப்பட்டவர்.  

மேலும் 1955இல் அமைக்கப்பெற்ற Royal commission of Broadcasting வழிகாட்டு அறிக்கை – ஜனரஞ்சக, பல்சுவை, கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு நேரம் அவசியமாக ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது.  இதைக் கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.  

ஒரு காலத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்த முஸ்லிம் நிகழ்ச்சி ஒலிபரப்பு படிப்படியாக மிகுந்த சிரமத்துக்கும், போராட்டத்துக்கும் மத்தியில் அரை மணித்தியாலமாகவும், பின்னர் ஒரு மணி நேரமாகவும் அதிகரிக்கப்பட்டது. இப்போது காலையில் இரண்டரை மணி நேரமும், இரவு ஒலிபரப்பு ஒரு மணித்தியாலமாகவும் இடம்பெறுகிறது.  

இந்தக் கலை நெடுநேர நிகழ்ச்சி, ஆன்மிக ஒலிபரப்பு என்ற போர்வையில் கூட்டுத்தாபன கஜானாவை நிரப்பும் ஒரு வர்த்தக விளம்பர நிகழ்ச்சி எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், நாடக, பல்சுவை, கலை நிகழ்ச்சிகள் (விசேடமாக மாதமொரு தடவை நேயர்கள் முன்னிலையில) எதிர்காலத்தில் நடக்க வேண்டியது கட்டாயம். அதற்கு வெளியிலிருந்து உதவும் கரங்களையும் மேலிடமோ, ஆலோசனை சபையோ உதாசீனம் செய்யக் கூடாது. செய்யமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்த இனிப்பை நிறுத்துகிறேன்.  

 

Comments