நான்கு மணிநேர சுற்றிவளைப்பு; 3,871 சந்தேக நபர்கள் கைது | தினகரன் வாரமஞ்சரி

நான்கு மணிநேர சுற்றிவளைப்பு; 3,871 சந்தேக நபர்கள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3,871 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பொலிஸ் மாஅதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவின் ஆலோசனைக்கமைய, கடந்த வியாழக்கிழமை மாலை 06.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரை விசேட சுற்றிவளைப்பு நடைபெற்றது. இதன் போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 1,430 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 562 பேரும், ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் 552 பேரும் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்தமை தொடர்பில் 556 பேரும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 607 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய 146 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கவனமின்றி வாகனம் செலுத்திய 126 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர வாகனம் சார்ந்த வேறுவகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 6,047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் சமாதானத்துடன் எந்தவித அச்சமுமின்றி வாழ்வதற்கான நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய எமது இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments