கொரோனாவால் மரணிப்போர் நல்லடக்கம்; நீண்டகாலம் இழுத்தடித்தாலும் அரசின் தீர்மானத்தால் நிம்மதி | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவால் மரணிப்போர் நல்லடக்கம்; நீண்டகாலம் இழுத்தடித்தாலும் அரசின் தீர்மானத்தால் நிம்மதி

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களையும்அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம்.

இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது விட்டிருந்தால், அவ்வாறே உறுப்பு நாடுகள் சிலவற்றால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சேர்க்கப்படாது விட்டிருந்தால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட மக்களின் ஒருசாராரை மனவேதனைக்குள்ளாக்கிய இத்தகைய எரியூட்டும் அவலத்திற்கு தீர்வு கிட்டியிருக்க மாட்டாது.

அமர்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குரல் எழுப்பியதன் பயனாகவும், அநேகமான மேற்குலக நாடுகள் கருத்துப் பறிமாற்றங்கள் நடத்தி கண்டன எதிர்ப் பலைகளைத் தோற்றுவித்ததன் விளைவாகவும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியது.

தனிப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றினதும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கின்ற விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் எங்கள் நாடும் ஓர் அங்கம் என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை முன்வைக்கப்படும் அறிக்கைகள் மீது கரிசனை செலுத்தி அவற்றை அணுக வேண்டும்.

அத்துடன் இந்த விடயத்தில் எங்களது இழந்த உரிமையை மீளப் பெறுவதற்கு உதவிய பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏராளமான சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்பன தனியாகவும் கூட்டாகவும் இதற்காகக் குரல் கொடுத்ததை நன்றியறிதலோடு நினைவு கூருகின்றோம்.

Comments