அஜித் நிவாட் கப்ரால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

அஜித் நிவாட் கப்ரால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்

நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று யாழ். நகருக்கு விஜயம் செய்தார்.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் நடைபெற்ற காலை நேர விருந்துபசாரத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கலந்துகொண்டார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு இனிவரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்கும் அரசின் திட்டத்துக்கு அமைய, யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள வசதி, வாய்ப்புகள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இராஜாங்க அமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கடன் வசதிகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலிலும் நேற்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கலந்து கொண்டார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களுக்கான வழிவகைகளை ஆராய்ந்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் படகுக் கட்டுமானத்துறையை ஊக்குவித்தல்,கடனை மீளச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,பொருளாதார மந்த நிலையை மாற்றியமைத்தல்,இறக்குமதி தடைகளை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பின்றி படிப்படையாக நீக்குதல்,முதலீடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

சாவகச்சேரி விசேட நிருபர்

Comments