க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதுவதற்கு முன்பாக அவதானத்துக்கு சில குறிப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதுவதற்கு முன்பாக அவதானத்துக்கு சில குறிப்புகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப்பரீட்சை நாளை ஆரம்பமாகிறது. இவ்வாண்டு பரீட்சை எழுதவிருக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பரீட்சை எழுத தயாராகியிருப்பீர்கள்.  

இப்பரீட்சையை ஒரு பிரச்சினையாக எண்ணாமல் அதனை ஒரு சவாலாக ஏற்க வேண்டும். மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனைக் கருத வேண்டும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தாக்கம் உலகையே அச்சுறுத்தி வரும் இக்காலப்பகுதியில் பல்வேறு சிரமங்களின் மத்தியில் நீங்கள் இப்பரீட்சையை எழுதப்போகிறீர்கள். கடந்தாண்டு டிசம்பரில் எழுதவேண்டிய இப்பரீட்சை பின்போடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.  

இக்காலப்பகுதியில் நீங்கள் நன்கு படித்திருப்பீர்கள். பல செய்திகளைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். பகுத்துப் பார்க்கும் ஆற்றலையும் தொகுத்து உணரும் ஆற்றலையும் பெற்றுள்ளீர்கள். இவற்றை உலகிற்கு வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி இப்பரீட்சையை எழுதுங்கள்.  

பல நாட்கள் படித்து உங்களைத் தயார் செய்தீர்கள். அவற்றையெல்லாம் பரீட்சையில் எழுதி சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் அங்கீகாரம் பெற இப் பரீட்சைதான் சிறந்த வாய்ப்பாகும்.  

நீங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே உங்கள் அறிவை, ஆற்றலை மன ஆற்றலை, திறமையை உலகம் எடை போடுகிறது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற்று புகழை, அங்கீ காரத்தைப் பெறுங்கள், சந்தோஷமடையுங்கள்.   பரீட்சையை வேகமாக எழுதினாலும் தெளிவாக எழுத வேண்டும். முதலில் மிகவும் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு உரிய விடையை எழுதவும். ஏனெனில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு அப்பொழுதுதான் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான வினா இலக்கத்தை குறித்துவிட்டு விடையை எழுதவும்.  

கேள்விக்கான பதில் எழுதிக் கொண்டு வரும்போது பாதியில் ஞாபக மறதி ஏற்பட்டால் அதற்கு உரிய இடத்தை விட்டுவிட்டு மேலே தொடரலாம். யோசிப்பதிலேயே அதிக நேரம் சென்று விட்டால், நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு விடையெழுத நேரம் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றையும் எழுதியபின் மீண்டும் இடையில் விடப்பட்ட வினாவிற்கான விடையை எழுத முயற்சி செய்யுங்கள். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு நினைவுகூர்ந்தால் அந்த வினாவிற்கான பதில் நினைவில் வர வாய்ப்பு உள்ளது.  

விடையில் முக்கியமான வரிகளை, வார்த்தைகளை பென்சில் அல்லது பேனையை உபயோகித்து அடிக்கோடு இடவும். இது விடைத்தாளை திருத்துபவரின் கண்ணை ஈர்த்து மதிப்பெண் பெறஉதவும்.  

உங்களுக்கு தெரியாத வினா ஏதேனும் இருந்தால் அதை விட்டுவிடாமல் அதற்குத் தொடர்புடைய பதிலை எழுதவும். ஏனெனில் நீங்கள் எழுதிய அளவிற்கு திருத்தும் ஆசிரியர் மதிப்பெண் இட வாய்ப்பு உள்ளது. இதைக் கடைசியாக எடுத்து எழுதி வைக்கவும்.  

ஒவ்வொரு விடையிலும் அதற்கு அளவுக் குறியீடுகள் இருந்தால் தவறாமல் எழுத வேண்டும். இறுதி அறிவித்தல் வந்ததும் எல்லா விடைத் தாள்களையும் முறையாகத் தொகுத்துக் கட்டி வைக்கவும்.

பிறகு ஏதேனும் எழுத முடிந்தால் எழுதுக. ஏனென்றால் சிலர் இறுதிநேரம் வரை அவசரமாய் எழுதிவிட்டு சரியாக வரிசைப்படுத்தாமல் விடைத்தாளைக் கட்டிவிட வாய்ப்பு உள்ளது. இதனால் நன்றாக விடை எழுதியும் மதிப்பெண் பெறமுடியாமல் போய்விடும்.   பரீட்சை எழுதி முடித்தவுடன் அதுகுறித்து நண்பர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். ஏனென்றால் நீங்கள் எழுதியது எழுதியதுதான். அதனை மாற்றமுடியாதல்லவா. அதனால் வீண் மன உளைச்சல் ஏற்பட்டு அடுத்த பாடங்களுக்கு தயார் செய்யும் நல்ல மன நிலையை அது பாதித்து விடும்.  

பரீட்சையானது உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் முன்னே உள்ள சவாலாக நினைத்து அதனை வெற்றிகொள்ள எமது வாழ்த்துகள்..! 

Comments