நல்லுறவை பலப்படுத்தும் இலங்கை-பாகிஸ்தான் | தினகரன் வாரமஞ்சரி

நல்லுறவை பலப்படுத்தும் இலங்கை-பாகிஸ்தான்

தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கைக்கும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பிரதமர் இம்ரான் கான் வருகையையடுத்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தெரிவிக்கின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக இருந்து உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்து, கிரிக்கட் ஓய்வுக்குப் பின்னர், முழு நேர அரசியல்வாதியாகியவர் இம்ரான் கான். தற்பொழுது அந்நாட்டின் பிரதமராகவிருக்கும் இம்ரான் கானின் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு வலுச் சேர்த்துள்ளது என்றே கூற வேண்டும்.
உலகளாவிய கொவிட்-19 பெருந்தொற்று  உருவெடுத்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உலகத் தலைவரான இம்ரான் கானை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையம் சென்று உரிய கௌரவம் அளித்து வரவேற்றார். கடந்த 23ஆம் திகதி பிற்பகல் இலங்கை வந்தடைந்த இம்ரான் கானுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு, இராணுவ அணிவகுப்பு மரியாதை, மரியாதையின் நிமித்தமான பீரங்கி வேட்டு என்பனவற்றுடன் அமர்க்களமான வரவேற்பை இலங்கை வழங்கியிருந்தது.

பாகிஸ்தான் பிரதமரின் இரு நாள் விஜயத்தில் இரண்டாவது நாளே முக்கியமான சந்திப்புக்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும், நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர். இதற்காக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தமது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் விவசாய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாகிஸ்தான் பிரதமரும் கவனம் செலுத்தினர்.

இது தவிரவும், இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பல்வேறு துறைகளுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சுற்றுலா ஒத்துழைப்பு, முதலீட்டு ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உயர்கல்விக்கான ஒத்துழைப்பு, தொழில்நுட்பத் துறையை ஊக்குவிப்பது குறித்த ஒப்பந்தம் என ஐந்து முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.

பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் என்பவற்றுக்கு 50 மில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருந்தார்.

அதேநேரம், முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் சக கிரிக்கெட் வீரர்களையும் பாகிஸ்தான் பிரதமர் இர்மான் கான் கொழும்பில் சந்தித்திருந்தார். இம்ரான் கான் உயர் செயல்திறன் விளையாட்டு நிலையத்தை ஆரம்பத்து வைக்கும் நோக்கில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டே இம்ரான் கான் தனது பழைய கிரிக்கெட் நண்பர்களைச் சந்தித்திருந்தார்.

இலங்கையின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க பாகிஸ்தானின் முழுமையான ஒத்துழைப்பு உள்ளது என்ற உறுதிமொழியும் இங்கு வழங்கப்பட்டது.

பொருளாதார நன்மைகள் குறித்த உறவுகளைப் பலப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை (China-Pakistan Economic Corridor) ஊக்குவிப்பது குறித்து இம்ரான் கான் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் ஒரு அங்கமாகக் காணப்படும் இத்தாழ்வாரத்தில் இலங்கையையும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இம்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இது ஒருபுறமிருக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் முனைப்புக் காட்டியுள்ள சூழ்நிலையில் இம்ரான் கானின் இலங்கை விஜயம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இம்ரானின் இவ்வருகையைப் பயன்படுத்தி மனித உரிமைப் பேரவையில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை திட்டமிட்டிருந்ததாக ஊடகங்கள் பலவும் எதிர்வு கூறியிருந்தன. இந்த நிலையில் இரு தரப்பு கலந்துரையாடல்களின் போது ஐ.நா விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்டதாக எவ்வித செய்திகளும் பகிரங்கமாக வெளியாகியிருக்காத போதும், இலங்கைக்கு பல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க பாகிஸ்தான் தயார் என்ற செய்தி பகிரப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாகப் பலமான உறவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் தனது நேரடியான உதவிகளை வழங்கியிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இம்ரானின் ஆட்சியில் புதியதொரு அத்தியாயத்துக்கு வித்திட்டுள்ளன என்றே கூற வேண்டும்.

இருந்த போதும் இம்ரானின் விஜயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த அவருடைய உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கொவிட்-19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விவகாரம் குறித்து அவருக்குத் தெரியப்படுத்தப்படலாம் என்பதாலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் ஏதாவது கருத்துகளைத் தெரிவித்தால் அது இந்தியாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம் என சிலர் கருதியதாலும் பாராளுமன்ற உரை இடைநிறுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கொவிட்-19 சூழல் காரணமாகவே இந்த உரை இரத்துச் செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பினால் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், இலங்கை வந்திருந்த இம்ரான் கானை முஸ்லிம் உறுப்பினர்கள் மூடிய அறையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே இம்ரான் கானின் இலங்கை விஜயம் முடிவடைந்ததுடன், ஜனாசாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற சுகாதார அமைச்சின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு முன்வரும் நிலையில், பாகிஸ்தானும் தனது பிரசன்னத்தை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் இலங்கையையும் இணைந்து கொள்ளுமாறு இம்ரான் கான் விடுத்த அழைப்பிலிருந்து அந்நாட்டின் நிலைப்பாடு தெளிவாகிறது. இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் என்பதற்கு அப்பால், எமது நாட்டின் பூகோள அமைவிடமே இவ்வாறானதொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதே பொருத்தமான கூற்றாகும்.

பி.ஹர்ஷன்

Comments