காலாவதியான பேரம்பேசலில் காரியமாற்றுவது எவ்வாறு? | தினகரன் வாரமஞ்சரி

காலாவதியான பேரம்பேசலில் காரியமாற்றுவது எவ்வாறு?

கொவிட் தொற்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கை இறுதி வரைக்கும் இருந்ததால்தான், ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகப் பணியாற்றியிருக்கிறது தேசிய காங்கிரஸ். மூளையால் செய்ய வேண்டிய வேலைகளை, மூலை முடுக்குகளில் நின்று கூப்பாடு போடுவதால் சாதிக்க முடியாது.

பெரும்பான்மை சமூகத்தின் அமோக  ஆதரவுள்ள இந்த அரசு, இவர்களின் சில கடப்பாடுகளுக்கு கட்டுப்படும் நியதிகள்  இருக்கவே செய்கின்றன.தேசிய காங்கிரஸின் தலைமை,பல தடவைகள் இதுபற்றி  நாசூக்காகப் பேசியும் இருக்கிறது. மட்டுமல்ல இன்றும் பேசியும் வருகிறது.  சிங்கள சமூகத்தை விழிப்பூட்டும் அரசியலை சிறுபான்மைத் தலைமைகள் கைவிடும்  வரைக்கும் மூளையாலும், மௌனத்தாலும் பேசிச் சாதிக்கும் நிலைதான், தமிழ்  மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அசம்பாவிதங்கள்  நிகழாதிருந்த வரைக்கும் சிறுபான்மை சமூகங்களின் விழிப்பு,ஒற்றுமை மற்றும்  ஒன்றுபடலை பெரும்பான்மைச் சிங்கள சமூகம் கண்டு கொள்ளவில்லை. மட்டுமல்ல  இந்த ஒன்றுபடல் ஆபத்தில்லை என உணர்ந்ததால் இதுபற்றி அலட்டிக்கொள்ளாமலே  இச்சமூகம் இருந்தது. சிங்கள மக்கள் விழித்தபோது, சிறுபன்மை கட்சிகளின்  பேரம்பேசும் பலமும் பறிபோனது. இந்த உணர்தல்கள்தான் தேசிய காங்கிரஸ்  தலைமையைப் பக்குவப்படுத்தியிருக்கிறது.

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகக்  குரல் கொடுக்காமல் அடங்கியிருப்பதா? பக்குவம் எனச் சிலர் கேள்வி  எழுப்பலாம். எழுப்பத்தான் வேண்டும். இதில் தேசிய காங்கிரஸ் தலைமைக்கு  மாற்றுக் கருத்துக் கிடையாது. எப்படி எழுப்புவது, எங்கு பேசுவது என்ற  தெளிவு இருக்க வேண்டுமே. நான்தான் ராஜா என்று காட்டுச் சிங்கம்  கர்ச்சிக்கையில், கூட்டுக் கோழி எப்படிக் கொக்கரிப்பது. இவைகளைத்தான்  கடந்தகாலக் கற்றுக் கொண்ட பாடங்களாகக் கருதிச் செயற்படுகிறது தேசிய  காங்கிரஸ். பெயரல்ல இங்கு பிரதானம், சமூகத்தைப் பீடித்திருக்கிற பயம் போக  வேண்டும்.

அவ்வளவுதான், அவரவர், தமக்குத் தெரிந்த வழிகளில் தீர்வைத் தேடிய   போது,தேசிய காங்கிரஸ் மட்டும் தனி வழியில் சென்று, சந்தர்ப்பங்கள்  அனைத்தையும் சாதகமாக்கியது. "ராஜபக்ஷக்கள் மனிதாபினமுள்ளவர்கள்,  நல்லடக்கத்துக்கு அவர்களின் அரசு அனுமதிக்கும்" என்று ஆணித்தரமாகக்  கூறியவர்தான் தேசிய காங்கிரஸ் தலைவர்.

இதை, எதற்காக, எந்த நம்பிக்கையில்  சொல்கிறார் என்று, அன்று தலையைச் சொறிந்தவர்கள் இன்று ஆனந்தத்தில்  உறைந்துள்ள தையே காணமுடிகிறது. ஜனவரி மாதம் (09) இல் நடைபெற்ற அரச தரப்பு  எம்பிக்களுக்கான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்தராஜபக்ஷ  விடம்,தேசிய காங்கிரஸ் தலைவர் வலியுறுத்திக் கூறினார். முஸ்லிம்களின்  எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு, ஜனாஸா நல்லடக்கத்தில் உள்ளதாகவும்  எடுத்துரைத்தார் அதாஉல்லா. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள பத்துக்  கட்சிகளில் ஒரேயொரு முஸ்லிம் கட்சி தேசிய காங்கிரஸ்தான். ஏற்கனவே, ராஜபக்ஷ   அரசாங்கத்தில் சுமார் பத்து வருடங்கள் அமைச்சராக இருந்த, அதாஉல்லாவைப்  பற்றி,இந்த அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களும் நன்கு தெரிந்துள்ளனர்.

எத்தனை கெடுபிடிகளை தனது சமூகம் எதிர்கொள்ள நேரிடினும், சர்வதேச  சக்திகளிடம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்காத, அரசியல் தர்மங்கள்  அதாஉல்லாவிடம் உள்ளதாகவே ஆட்சியாளர்கள் மட்டுமல்ல முழு இலங்கையரும்  கருதுகின்றனர். இதனால்தான், ஆர்ப்பாட்டம், அமர்க்களம், வெள்ளைக்கொடி  மற்றும் கபன்சீலைப் போராட்டங்களை தேசிய காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை.ஜெனீவா அமர்வுகள் இலங்கையைக் குறி வைக்கும்  நேரத்திலா?ஆர்ப்பாட்டம் நடத்துவது.

இது, எமது வளங்களை ஏற்கனவே சூறையாடிய  இன்னும் சூறையாட எச்சில் நாக்கை நீட்டும் ஏகாதாபத்தியவாதிகளுக்கு களம்  அமைக்கும் என்பதில் தேசிய காங்கிரஸ் கவனமாகவும் தெளிவாகவும் இருந்தது.  ஜனாஸாக்கள் எரிக்கப்படுகையில், முஸ்லிம்களுக்கு என்ன சுதந்திரம் அனைவரும்  பகிஷ்கரிக்க வேண்டும் என்றனர்.

இல்லை,இந்த நாடு எமக்கும் சொந்தமெனக் கூறி  ஆக்கிரமீப்புக் கரங்களிலிருந்து எமது அன்னை மீண்ட நாளைக் கொண்டாடிக் காட்டிய, தேசிய காங்கிரஸின் தேசியப்பற்றுத்தான் சமூகங்களுக்கு இடையில்  சகோதரத்துவத்தை ஏற்படுத்தும். இதுதான் இக்கட்சியின் கோட்பாடு. கடைசியாக பெப்ரவரி (10) அலறிமாளிகையில் நடந்த மத குருமார்களின் கூட்டத்தில், பிரதமர் தெளிவுபடுத்தி, தொழினுட்பக் குழுவின் பரிந்துரை, அனுமதி கிடைத்ததையும்  எடுத்துக் கூறிய பின்னரே,நல்லடக்கம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ  நிபுணர்கள் மற்றும் மதத் தலைவர்களின் அனுமதி வரைக்கும் பொறுமைகாத்த  தலைமையும் பொறுமைகாக்காமல் பேரணி நடத்திய தலைமைகளும் சிந்திப்பதற்கு  இன்னும் உள்ளன. கடந்த (26) இரவு நடைபெற்ற ஆளுங்கட்சித் தலைவர்களின்  கூட்டத்திலேயே,சுகாதார அமைச்சர் வர்த்தமானி பற்றி அறிவித்தார் .உடனே,தேசிய   காங்கிரஸ் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, கூட்டத்திலிருந்தவாறே அனைத்தும் சாதனையாகிவிட்டதாக ஆனந்தமடைந்தார் அவர். யாரால் இது  சாதிக்கப்பட்டதென்பதல்ல, எமது பிரச்சினைகள். பிரச்சினைகளை எவ்வாறு  கையாள்வது என்பதிலேதான் சிறுபான்மையினருக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது.

ஏ.ஜீ.எம். தௌபீக்

Comments