இலங்கை அரசியலை ஆக்கிரமித்த 'அரிசி அரசியல்' | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அரசியலை ஆக்கிரமித்த 'அரிசி அரசியல்'

1948இல் இலங்கை தனது அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பித்தபோது ஏனைய காலனித்துவ நாடுகளுக்கு அமைந்திராத சில அடிப்படை நிபந்தகைளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது என்பது வெளிப்படையானது தான். ஆனால் அதேவேளை ஒரு சுதந்திர நாடாக முன்னோக்கி நகருவதில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இருக்கவில்லை என்பது அதன் அர்த்தமல்ல. வாய்ப்புகளைப் போன்றே சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.  

முதலாவது சவால்,  அதிகரித்துச் செல்லும் சனத்தொகைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அதிகரித்த மேற்குலக மருத்துவ சேவைகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இறப்புவீதம் குறையத் தொடங்கியது. இதனால் சனத்தொகை படிப்படியாக அதிகரித்துச் சென்றது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப்பங்கீட்டுத் திட்டம் யுத்தம் முடிவுற்ற பின்னரும் முடிவுறுத்தப்படாமல் தொடர்ந்தது.  

பிரித்தானிய ஆட்சிக் காலப்பகுதியில் உள்ளூர் விவசாய நடவடிக்கைகளுக்கு அரசாங்க அனுசரணையும் ஆதரவும் கிட்டாதபடியால் நெல் வேளாண்மை முதற்கொண்டு உப உணவுப் பயிர்ச் செய்கையும் கவனிப்பாரற்றுப் போனது. அதேவேளை இலங்கையர்களின் பிரதான உணவாகிய அரிசி முதற்கொண்டு பிரதான அத்தியாவசியப் பொருள்கள் யாவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய மூன்று பிரதான  விளை பொருள்களை ஏற்றுமதி செய்து பெறப்படும் வருவாயைக் கொண்டு இலங்கையர்களின் நுகர்வுப்பொருள்களையும் இடைநிலைப் பொருள்களையும் மூலதனப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருக்கும் நாடாக இலங்கை மாற்றப்பட்டிருந்தது. அரச ஆதரவின்றி உள்நாட்டு விவசாயத்துறை கைவிடப்பட்டிருந்த படியினாலே இலங்கை மக்களின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நிலையில் அது இருக்கவில்லை.  

பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஈடுபட்டிருந்த மக்களின் உணவுத்தேவையினை உள்ளூர் விளைபொருள்களைக் கொண்டு பூர்த்திசெய்து உள்ளூர் விவசாயத்துறைக்கும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் இரு துறைகளுமே அவற்றிற்கிடையில் இடம்பெறும் பரிமாற்றங்கள் காரணமாக வளர்ச்சியடைந்திருக்க முடியும்.

ஆனால் மிகத்தெளிவான வகையில் இவற்றிற்கிடையில் எவ்விதத் தொடர்புகளும் ஏற்படாதவாறு தடுக்கும் வகையில் பிரித்தானியரின் கொள்கைகள் அமைந்திருந்தன. பெருந்தோட்டங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது மாத்திரமன்றி உள்ளூர்வாசிகளும் படிப்படியாக இறக்குமதிகளுக்கு அடிமையாகிப்போகவே உணவுத்தேவையைப்பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. சுருங்கச் சொன்னால் இலங்கை ஒரு இரட்டைப் பொருளாதாரமாகவும் தங்கியிருக்கும் பொருளாதாரமுமாக மாற்றப்பட்டிருந்தது எனலாம்.  

1950களில் உலக உணவுப் பொருள்விலைகள் சடுதியாக அதிகரித்துச் சென்றன. இதனால் உணவு இறக்குமதிக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவிட நேர்ந்தது. சனத்தொகை அதிகரிப்பு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. மானிய விலையில் உணவுப் பங்கீட்டுத் திட்டம் அதற்கு காற்று ஊதி பெருநெருப்பாக்கியது. உணவு மானியத்திற்கான அரசாங்க செலவீடுகள் அதிகரித்துச் சென்றன.

கஜானாவில் உணவு மானியம் வருடாவருடம் துண்டுவிழுதலை அதிகரித்தது. 1953இல் வெளியிடப்பட்ட இலங்கைப் பொருளாதாரம் குறித்த உலக வங்கி அறிக்கை அதிகரித்துச் செல்லும் சனத்தொகை இலங்கைக்கு முக்கிய சவாலாக அமையும் என எச்சரித்தது.  

1948 சுதந்திர இலங்கையின் முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் ஜே.ஆர். ஜயவர்த்தன, புதிய அரசாங்கத்தின் குறிக்கோள் இலங்கையில் நலன்புரி அரசினை உருவாக்குவதேயாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த நலன்புரி அரசின் மூன்று தூண்களாக உணவு மானியத் திட்டமும் இலவசக் கல்வியும், இலவச சுகாதார வசதியும் காணப்பட்டன.

ஆனால் 1953 ஆண்டாகும்போது உணவு தானியம் தாங்கொணா நிதிச்சுமையை ஏற்படுத்தியபோது அரசாங்கத்தினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் அரசாங்கம் 25 சத மானிய விலையில் வழங்கப்பட்ட அரிசி விலையை 75 சதமாக அதிகரிக்க முனைந்தது. தொழிற்சங்கங்களும் மக்களும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது 1953 ஹர்த்தால் என அறியப்பட்டது.

இது வன்முறையாக மாறவே ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டன.
விளைவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதம மந்திரி பதவி விலகினார். தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் உணவு மானியத்தில் கைவைப்பதானது அரசியல் ரீதியில் தற்கொலைக்கு சமமான ஆபத்தான ஆயதமாக மாறியது. இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றவும் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களை அதிலிருந்து துரத்தவும் உணவு மானியம் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.  ஒருவர் சந்திரனிலிருந்து அரிசி கொண்டுவந்து தருவேன் என்றார். இன்னொருவர் தானியக் கொட்டைகள் எட்டு இறாத்தல் தருவேன் என்றார் இன்னொருவர். 3 ரூபா 50 சதத்திற்கு பாண் தருவேன் என்று பதவிக்கு வந்தார். அதனை வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் 'இலங்கையர்கள் தமது வயிற்றைப் பார்த்தே வாக்களிக்கின்றனர். தமது மண்டைக்குள் இருக்கும் இந்த பெரிய வஸ்துவை கருத்தில் கொண்டு அல்ல' என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.  

இலங்கையின் சுதந்திரத்தைப் பெறுவதில் அனைத்து இனத்தவர்களின் பங்களிப்பும் இருந்த போதிலும் அதன் பின்னர் ஒவ்வொரு இனக் குழுமத்தினதும் நலன்கள் பற்றிய நியாயமான கரிசனைகள் மேலோங்கிய அதேவேளை, அவற்றுக்கு உரிய சட்டபூர்வமான அரசியல் ரீதியாக மட்டந்தட்டும் போக்கு அதிகரித்துச் சென்றமை இனப்பிரச்சினை கூர்ப்படைந்து கூர்மையாகும் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.

இப்பிரச்சினையை ஆரம்பகாலத்தில் கையாண்டோர்  தூரநோக்கற்ற சிந்தனையுடன் நடந்து கொண்டதால்   துரதிஷ்டவசமாக மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரினை இலங்கை எதிர்கொள்ள நேரிட்டது. இத்தனை அனுபவங்களின் பின்னரும் கூட இன்னும் இப்பிரச்சினை தொடர்பான சரியான புரிதல் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.  

சுதந்திரமடைந்த காலப்பகுதியில் அபிவிருத்தி பற்றிய மக்கள் எதிர்பார்க்கைகள் உயர்ந்த மட்டத்தில் இருந்தன. ஆட்சியாளர்களும் இலங்கை ஒரு செல்வம் கொழிக்கும் நாடு எனவும் தெற்காசியாவின் தானியக் களஞ்சியம் எனவும் அந்நியர்கள் வந்தபடியினால் அடிமைப்பட்டுப் போனதானவும் அவர்களைத் தரத்தி விட்டால் சுபீட்சம் தானாக வந்து விடும் எனவும் மக்கள் மத்தியில் கற்பனைகளை வளர்த்து எதிர்பார்க்கைகளை அதிகரிக்கச் செய்திருந்தனரேயன்றி நாட்டுப் பொருளாதாரத்தின் யதார்த்த நிலை குறித்தும் மக்களின் பொறுப்புகள் குறித்தும் பேசியதாகத் தெரியவில்லை. எனவேதான் 1948ஆம் ஆண்டின் இறக்குமதி உள்ளடக்கத்தில் இலங்கையர்கள் சுதந்திரத்தைக் கொண்டாட எவ்வாறான பொருள் இறக்குமதிகளை மேற்கொண்டார்கள் என்பது தெளிவாகிறது.

தொடர்ந்தவந்த அரசாங்கங்கள் இதே பொய்களை தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில் விரக்தியடைந்த இளைஞச் சமூகம் 1970 இலும் 1988 இலும் ஆயதம் தூக்கி வன்முறையில் ஈடுபடவும் காரணமாகியது.  

சுதந்திரமடைந்த காலப்பகுதியில் பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் மயமாக்கல் கொள்கையினைக் கடைப்பிடித்தமையை அவதானிக்க முடிகிறது. அதேவேளை இறக்குமதிப் பதிலீட்டு விவசாயக் கொள்கையினைக் கடைப்பிடித்தமை தெளிவாகத் தெரிகிறது. உள்ளூர் உணவு உற்பத்தியைப் பெருக்கி உணவு இறக்குமதிச் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது.  

கல்லோயா பலநோக்கு அபிவிருத்தித்திட்டம் அரிசி  மற்றும் சீனி உற்பத்தியை அதிகரிப்பதை பிரதான நோக்காகக் கொண்டிருந்தது. அப்போது காணப்பட்ட உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இதன் நோக்கமாக இருந்தது. 

கைத்தொழில் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர 1948ல் பதவியேற்ற அரசாங்கம் முயற்சிக்கவில்லையாயினும் கைத்தொழில் துறையின் முக்கியத்துவம் குறித்து அந்த அரசு குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். தொடரும்

கலாநிதி
எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments