அ.தி.மு.கவை கைப்பற்றும் காய் நகர்த்தல்களில் சின்னம்மா சசிகலா | தினகரன் வாரமஞ்சரி

அ.தி.மு.கவை கைப்பற்றும் காய் நகர்த்தல்களில் சின்னம்மா சசிகலா

நான் ரெடி நீங்க ரெடியா?  தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது என்பதை இந்த விளம்பரத்தை நீங்கள் தமிழக தொலைக்காட்சிகளில் பறையறிவிப்பாகக் கேட்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். பிரதமர் மோடியின் வெற்றிக்கு விளம்பர அணுகுமுறைகளையும் உத்திகளையும் வடிவமைத்துத் தந்த அதே கொல்கத்தாவைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் இம் முறை தி.மு.க பெருந்தொகை பேசி சேவைக்கு அமர்த்தியிருக்கிறது. நான் ரெடி, நீங்க ரெடியா? என்பது கிஷோர் வடிவமைத்த உத்திகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இன்னும் பல விளம்பரங்களும், நவீன உத்திகளும் அடுத்தடுத்து வெளிவரும். தி.மு.கவின் வாய்ப்பு என்ன வென்றால், முரசொலி, தினகரன், குங்குமம், சன் டி.வி குழுமம், சன் ரேடியோ செனல்கள் என வலிமையான பிரசார கருவிகள் அதனிடம் உள்ளன. தொண்டர் பலமும் அமைப்பு ரீதியான பலமும் உள்ளது. எனவே தி.மு.கவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பிரசார பலம் வலுவாகவே உள்ளது. 

அ.தி.மு.கவும் சளைத்தது அல்ல. எடப்பாடியார் வெகு லாவகமாகவே காய்களை நகர்த்துகிறார். ஸ்டாலின் விடுக்கும் சவால்களுக்கு பதிலடி கொடுக்கிறார். நான் பதவிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று ஸ்டாலின் விவசாயிகளிடம் உறுதிமொழி அளித்தார். உடனே விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தே ஆணை வெளியிட்டு ஸ்டாலினை மிரளச் செய்தார் முதல்வர் எடப்பாடி.

59 ஆண்டுகள் என்றிருந்த அரசு ஊழியர் சேவைக் காலத்தை 60 என்பதாக உயர்த்தி அறிவித்ததோடு 11, 12, 13ம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வில் சித்தி பெற்றதாககவும் ஆணை வெளியிட்டிருக்கிறார் முதல்வர். தேர்தல் காலமாகப் பார்த்து பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த அவர், கடந்த வாரம் ஜெயலலிதா பிறந்த தினத்தையும் விரிவான ஏற்பாடுகளுடன் கொண்டாடினார். கொரோனா பரவலை வெற்றிகரமாகக் கையாண்டதாகவும் அவருக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. 

இச் சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும் அ.தி.மு.கவின் தோல்வி படுதோல்வியாக அமையாது என்பது திண்ணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பலவீனமான நிலையில் காணப்பட்ட அ.தி.மு.க, அந் நிலையில் இருந்து மீண்டிருக்கிறது. பா.ஜ.க.வும் மோடியவர்களும் எடப்பாடி அரசுக்கு தொடர்ச்சியாக அளித்துவந்த பின்னணி ஆதரவு, ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொண்டது. அதன் பிரதியுபகாரமாகவே அ.தி.மு.க. அரைமனதுடன் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. 

தி.மு.க என்றாலேயே அதன் மேடைப் பேச்சுத்திறன், எழுத்து வன்மைதான் அடையாளமாக நிற்கும், அண்ணா, கருணாநிதி, ஆசைத்தம்பி, நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன், அன்பழகன் என ஒரு பெருவரிசை மேடைகளில் தீப்பொறி எழுப்பும், எழுத்துகள் கனலாகத் தகிக்கும், இப்போது அங்கே பேசக் கூடியவர் ஸ்டாலின் மட்டுமே.

அண்ணாதுரையின் வீச்சு, தந்தையின் லாவகம் எல்லாம் இல்லை என்றாலும், மக்களுக்கு விளங்கும் வகையில் பேசுகிறார். அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் பையனைப்போல தோற்றமளிப்பதோடு முகபாவங்களும், மேடை மொழியும் வெகு சுமார், அவ்வளவே! அந்த வரிசையில் கனிமொழி விஷயத்தோடு பேசக் கூடியவர்.

மு.க.ஸ்டாலினுக்குப் பின்னர் தி.மு.கவை தலைமையேற்கும் தகுதி கனிமொழிக்கே உண்டு என்பது பலரின் அபிப்பிராயம். ஆனால் ஸ்டாலின் குடும்பம் கனிமொழிக்கு விட்டுத் தருமா? 

ஸ்டாலினுக்கு வயது தோற்றத்தில் தெரியாவிட்டாலும் அவர் எழுபதைத் தாண்டி விட்டார். தற்போது தன் கேச ஸ்டைலையும் மாற்றி இளமைத் தோற்றம் தரும் வகையில் தோற்றமளிக்கிறார் ஸ்டாலின். இத் தேர்தலில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் அது தி.மு.கவின் இருப்புக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம். மற்றொரு தேர்தலுக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருப்பது அரசியல் ரீதியாக இலாபகரமாக அமையாது. எனவே அவர் இம்முறை ஆட்சியைப் பிடித்தேயாக வேண்டும். அந்த அவசரத்தை ‘நான் ரெடி, நீங்க ரெடியா? என்ற விளம்பரத்தில் காணமுடிகிறது. 

ஸ்டாலினுக்கு வெற்றியொன்றை நிரூபித்து காட்ட வேண்டிய தேவை உள்ளது. அதே சமயம் எடப்பாடிக்கும் இத் தேர்லில் வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலை. ஏனெனில் அவரது இருப்புக்கு சவால் விடுக்க சின்னம்மா வந்து விட்டார்!  
நாம் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சின்னம்மா சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை சசிகலா குடும்பம் தமிழகத்தின் செல்வாக்குடன் செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் ஒன்று. இதற்கு பின்புலமாக நின்றவர் ஜெயலலிதா. இத் தொடர்பு பற்றி இங்கே நாம் பேச வேண்டியதில்லை.  

சசிகலா சென்னைக்கு வந்ததில் இருந்து திரைமறைவில் செயல்பட்டு வருகிறார். அவரது பிரதான எதிரி தி.மு.க.வோ அல்லது ஸ்டாலினோ அல்ல. அ.தி.மு.கவை கொண்டு நடத்தும் எடப்பாடியும் பன்னீர் செல்வமும்தான். பன்னீர் செல்வமும் சசிகலாவுக்கு பொருட்டல்ல. ‘வாங்கி’ சரிகட்டி விடலாம் என அவர் கணக்கு போடலாம். அவர் தனது எதிரியாகக் கருதுவது எடப்பாடி பழனிச்சாமியை. ஏனெனில் எங்கேயோ, இருந்த எடப்பாடியாரை சின்னம்மா கைகாட்டியதால்தான் முதலமைச்சரானார் என்பதும் மேசையின் கீழ் ஊர்ந்து சென்று சசிகலாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி விசுவாசம் காட்டி பதவி பெற்றவர் இன்று மார்பில் பாயும் வேங்கையாகிப் போனாரே என்ற ஆத்திரம் சசிகலாவிடம் உண்டு. அவரது தற்போதைய இலக்கு அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்றுவது. 

சசிகலா விடுதலையாகி சென்னை திரும்பியதும் சென்னையிலும் வெளி மாவட்டங்களிலும் அ.தி.மு.க பிரமுகர்கள் சசிகலாவை வாழ்த்தி பேனர்களை வைத்தனர். அ.தி.மு.கவின் மூன்றாம் நிலை பிரமுகர்கள் சின்னம்மாவை புகழ்கின்றனர்.
பன்னீர் செல்வம் இதுவரை சின்னம்மாவை விமர்சிக்கும் வகையில் வாயே திறக்கவில்லை. கட்சிக் கொடியை தன் காரில் சின்னம்மா பறக்க விடுவது, அ.தி.மு.கவை கைப்பற்றுவேன் என சசிகலா சொல்வது என்பனவற்றை பன்னீர்செல்வம் விமர்சிக்கவே இல்லை. 

இப்போக்கு, அ.தி.மு.கவுக்குள் எடப்பாடி ஆதரவு அணி, சின்னம்மா ஆதரவு அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வருவதை வெளிப்படுத்தி உள்ளது. உள்ளுக்குள் நடந்துவரும் இப் பிளவு முயற்சிகளில் பா.ஜ.க. எந்தப் பக்கம் நின்று தூபம் போடுகிறது என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. 

இந்த பிளவு எப்போது வெளியே தெரியவரும்? 

தேர்தல் முடிந்த பின்னர் வெளிப்படலாம். அ.தி.மு.க தோல்வி அடைந்து எடப்பாடி பழனிச்சாமி வெறும் எம்.எல்.ஏ. ஆனதும் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும். இன்றைய செல்வாக்கு மங்கும். அச்சமயத்தில் தனது காய்களை நகர்த்தி பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை திரட்டி கட்சியை பிளக்க சசிகலா முனையலாம். 

சசிகலாவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. அது அவருக்கு பின்னடைவுதான் என்றாலும் அ.தி.மு.கவின் மீதான அவரது பிடி தளராது என்றே தோன்றுகிறது. டி.டி.வி தினகரன் அ.ம.மு. கட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன் தலைவர் பதவி காலியாகவே, சசிகலாவின் வருகைக்காக, வைக்கப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் பொதுச் செயலாளர் மட்டுமே. ஆனால் சசிகலா இன்னும் அக் கட்சியின் உறுப்பினராகவில்லை. தலைவர் பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு அ.ம.மு.கவில் இணைந்தால் அவர் அக் கட்சிக்குள் மட்டுப்படுத்தப்படுவார். அ.தி.மு.கவில் உரிமை கோர முடியாது போகும். நீதிமன்ற வழக்கொன்றில் தானே இப்போதும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என அவர் தன்னை குறிப்பிட்டுள்ளார்.

அ.ம.மு.கவில் இணைந்து தலைவர் பதவியை ஏற்றால் அவரது பொதுச் செயலாளர் என்ற உரிமை கோரல் வலுவிழந்துவிடும். எனவே தனது ஆதரவுதளமாக அ.ம.மு.கவை தினகரன் தலைமையில் இயங்க விடும் அதே சமயம், அ.தி.மு.கவை கைப்பற்றும் காய்நகர்த்தல்களை சசிகலா மிகச் சரியாக செய்து வருகிறார். 

டி.டி.வி தினகரனும் சசிகலாவும் அ.தி.மு.கவை விமர்சிப்பதைவிட மிகக் கடுமையாக தி.மு.க.வை விமர்சித்து வருகின்றனர். தமிழக அரசியலில் இருந்து தி.மு.கவை அழித்துவிட வேண்டும் என்றும் தி.மு.கவை ஒழிப்பதே தமது நோக்கம் என்றும், தி.மு.க ஒரு தீய சக்தி என்பதாகவும் டி.டி.வி தினகரன் மேடைக்கு மேடை கடுமையான தாக்குதல்களை நிகழ்த்துகிறார். 

இந்ந தீவிர தி.மு.க எதிர்ப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சசிகாலாவும் தினகரனும் தி.மு.க ஆட்சிக்கு வருவதையே உண்மையாகவே விரும்புகின்றனர். அவர்களுக்கு உடனடியாக அ.தி.மு.கவை கைப்பற்ற முடியாது.

அதற்கு ஆட்சி கவிழ வேண்டும். கவிழ்ந்தால் அடுத்ததாக பதவி ஏற்கப் போகிறவர் மு.க. ஸ்டாலின். அவர் அ.தி.மு.கவின் இன்றைய தலைமை அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர். அ.தி.மு.க தொண்டர்கள் எடப்பாடி அணி என்றும் சின்னம்மா அணி என்றும் இரண்டாகப் பிரிந்துள்ளனர். சசிகலா விடுதலையாகிறார் என்ற செய்தி வெளியானதும் அவர் எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்தால் பிரச்சினை இல்லை என்ற சமிக்ஞயை எடப்பாடி தரப்பு வெளியிட்டது. ஆனால் சின்னம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னால் முதல்வராக்கப்பட்டவரின் கீழ் செயல்பட சசிகலா தயாரில்லை. எனவே, ஸ்டாலினை அடுத்த முதல்வராக கொண்டு வர சசிகலா விரும்புகிறார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றும் வேலைகளை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வசதியாக செய்யலாம் என சசிகலாவும் தினகரனும் கருதுகின்றனர். இந்த ‘ஸ்டாலின் அனுதாபத்தை வெளியே தொண்டர் மத்தியில் – எடுத்துச் செல்ல முடியாது. அதை இரகசியமாகத்தான் செய்தாக வேண்டும். இதனால்தான் அ.ம.மு.க ஸ்டாலின் என்ற தனி மனிதரை விட்டுவிட்டு, தி.மு.கவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏனெனில் அ.தி.மு.கவின் அடித்தளமே தி.மு.க எதிர்ப்புதான். தி.மு.க எதிர்ப்பில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே அ.தி.மு.க தொண்டர்கள் அந்த பாரம்பரிய எதிர்ப்புணர்வையே அ.ம.மு.க வெளிப்படுத்துகிறது. 

ஸ்டாலினும் அ.ம.மு.க பற்றி பேசுவதில்லை. பலமான விமர்சனங்களை முன்வைப்பதும் இல்லை. அ.தி.மு.க எதிர்ப்பு, எடப்பாடியை ஊழல்வாதியாக சித்தரிப்பது, ஊழல் மோசடி அரசு என விமர்விப்பது என்பதே ஸ்டாலின் மற்றும் தி.மு.கவின் பிரசாரப் பாணியாக உள்ளது.

ஸ்டாலின், டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவின் தேர்தல் திட்டம் ஒன்றே ஒன்றுதான். அ.தி.மு.கவின் வாக்குகளை இரண்டாகப் பிரித்து தி.மு.கவை ஆட்சி பீடமேற்றுவது. அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்றே தோன்றுகிறது. 
1989 சட்ட சபைத் தேர்தலின் போது அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்டது. ஒன்று ஜெயலலிதாவின் தலைமையில் போட்டியிட்டது. இரண்டாவது அணி எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் போட்டியிட்டது. அ.தி.மு.கவின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததும். தி.மு.க 13 வருடங்களின் பின்னர் 146 ஆசனங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜானகி அணியில் போட்டியிட்ட பாண்டியன் (முன்னாள் சபாநாயகர்) மட்டுமே தெரிவானார். ஜானகியும் அவருக்கு தோள் கொடுத்த சிவாஜி கணேசனும் தத்தமது தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.
ஜெயலலிதா அணி 26 ஆசனங்களைப் பெற்றது. சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. ஆயினும் வாக்கு சதவீதத்தை பார்த்தபோது அ.தி.மு.கவை விட தி.மு.க மூன்று சதவீத அதிக வாக்குகளையே பெற்றிருந்தது. அதாவது அத்தனை பிரச்சினைகள் மற்றும் பிளவுகளின் பின்னரும் அ.தி.மு.க உறுதியான அடித்தளத்துடனேயே உள்ளது என்பது அப்போதுதான் தெரியவந்தது. 

தற்போது நடக்கப்போவதும் 1989தேர்தலில் நடந்ததுதான் என்பது பல விமர்சகர்களின் பார்வையாக உள்ளது. அப்படி நிகழும்போது அது ஸ்டாலினின் முதல்வர் கனவை நனவாக்கும். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனின் அ.தி.மு.கவை கைப்பற்றும் திட்டமும் ஈடேறும்!  

Comments