வல்லரசுகளின் நலன்களுக்குள் இழுபறிபடும் மியான்மார் அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

வல்லரசுகளின் நலன்களுக்குள் இழுபறிபடும் மியான்மார் அரசியல்

மியான்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் பாரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக நிகழும் போது  உலகளாவிய தளத்திலும் பாரிய நெருக்கடி ஆரம்பித்துள்ளது. உள்நாட்டில் மியான்மார் மக்கள் நான்காவது வாரமாக வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.

ஜனநாயகத்தினை நோக்கிய போராட்டத்தில் பொது மக்களும் பௌத்தத் துறவிகளும் வீதியில் இறங்கி போராடுவது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது. மிக நீண்ட காலம் இராணுவப்பிடிக்குள் அகப்பட்டிருந்த மக்கள் அதற்கெதிராக எழுச்சி பெறுவது வரலாற்று பதிவாகவே தெரிகிறது.

அதே நேரம் மியான மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக மேற்குலகம் அதிக எதிர்ப்பினை காட்டிவருவதுடன் அமெரிக்கா மியான்மார் விடயத்தினை கையாள தனியாக இரு அதிகாரிகளை நியமித்துள்ளது. இராணுவத்த0ற்கு சீனா ஆதரவாகவும் ஜனநாயக போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவாகவும் செயல்படும் உலகளாவிய அரசியலின் களமாக மியான்மார் மாற ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் ஜனநாயக ஆதரவுக் கரம் ஏற்படுத்தவுள்ள விளைவுகளை தேடுவதாகவே உள்ளது.

அமெரிக்கா இரண்டு விடயங்களை மியான்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக நகர்த்தியுள்ளது. ஒன்று மியான்மார் இராணுவத்தை அதிகம் விமர்சித்து வருகின்றதை சர்வதேச மட்ட பிரச்சாரமாக கொண்டுள்ளது. இரண்டாவது  போராட்டக் காரருக்கான ஆதரவை கைவிடப் போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்து வருகிறது. இதேநேரம் மியான்மாரின் அரசியல் நிலவரத்தை கண்காணிக்கவும் ஜனநாயகத்தினை மீட்டெடுக்கவும் இரு அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆன்டனி பிளிங்க்கென் தெரிவித்துள்ளார்.

மியான்மார் மக்களுக்கு வழங்கும் ஆதரவினை அமெரிக்கா  வாபஸ் பெறாது  எனவும் மியான்மார் மக்களது விருப்பத்திற்கு மாறாக அதிகாரத்தை கைப்பற்றி வன்முறையை தூண்டிவிடும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மியான்மார் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் பத்திரிகையாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை இராணுவ அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.றோஹிந்திய முஸ்லிம்களை மியானமார் இராணுவமும் ஜனநாயகவாதிகளும் கூட்டாக கொன்றொழிக்கும் போது மௌனம் காட்டிய உலமும் அமெரிக்காவும் தமது நலன் பாதிக்கின்றது என்பதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

இதன் விளைவுகள் ஆபத்தானவையாக மாறுவற்கான சூழல் அதிகரித்து வருகிறது.
ஒன்று, சீனாவே மியான்மார் இராணுவத்திற்கு பக்கபலமானது என்பது ஐ.நா.சபை வரையும் தெரிந்த விடயமே. அதனால் மியான்மார் மீதான நடவடிக்கை ஒவ்வொன்றும் சீனாவுக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.

இது சீனாவின் ஆதரவை மியான்மார் இராணுவத்திற்கு அதிகரிக்கவும் மியான்மார் இராணுவம் சீனாவில் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கவும்  செய்யும். புவிசார் அரசியல் தொடர்பும் ஆட்சி முறைமையின் போக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியானதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்-சாங் -சூகி சீனா பக்கம் சாயும் நிலை ஏற்பட்ட போதே இராணுவம் ஆட்சியைப் கைப்பற்றியதாக விமர்சனம் உண்டு.

இரண்டு, சீனாவின் அனுபவத்தில் ஹொங்கொங் தைவான் மட்டுமன்றி தீபெத் என்பனவும் கடந்த காலத்தில் ஜனநாயக விரும்பிகளாலும் மேற்குலகத்தாலும் கையாளப்பட்ட போதும் எந்தவிதமான அடைவையும் அவர்களால் அடைய முடியாத நிலையை சீனா எடுத்திருந்தது.

இதில் தைவான் ஹொங்கொங் சீனாவுக்கு நெருக்கடியாக அமைந்தாலும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே அந் நாடுகளது இருப்பு காணப்படுகிறது. அதனால் அத்தகைய அனுபவத்தை சீனா மியான்மாரிலும் பின்பற்ற விளையும். அது மியான்மாரை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாத நிலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மூன்று சீனாவின் நிலை கொவிட்-19  இன் பின்பு வலுவடைந்து செல்கிறது. அது பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அதிக ஈடுபாட்டைக் கொண்ட நாடாக  மாறிவருகிறது. இப்பிராந்தியம் சீனாவின் இருப்புக்குள் அகப்பட்டுள்ளதால் அமெரிக்காவால் இலகுவில் உடைக்கவோ அல்லது மியான்மாரை மீட்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனலாம். அதனைக் கடந்து மியான்மார் அமெரிக்கா பக்கம் சாய்தல் என்பது சீனாவின் பலவீனமாகவே  அமையும். அதற்கான வாய்ப்பினை நோக்கி உலகமும் அமெரிக்காவும் செயல்படுகின்றன. ஆனால் அது இலகுவான விடயமாக அமைய வாய்ப்பில்லை என்பதே தெளிவாகத் தெரிகிறது.

நான்கு, புவிசார் அரசியலில் மியான்மார் அமைந்துள்ள பகுதி சீனாவின் வலுவான இருப்புக்குள் இருப்பதனால் அதிக செல்வாக்கினைச் செலுத்தக் கூடிய நிலையில் சீனா விளங்குகிறது. மியான்மாரில் அமைந்துள்ள சீனாவின் 80 சதவீத நிதியில் அமைக்கப்பட்ட சிற்வே துறைமுகம் வழியாக சீனாவை அடைவதற்கான தரைப்பாதை அமைந்திருப்பதுடன் பொருளாதார மற்றும் வர்தக ரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் முக்கியமான துறைமுகமாக அமைந்துள்ளது. புவியியல் ரீதியில் அயல் நாடாகவும்  விளங்கும் சீனாவுடன்  2129 கி.மீ. எல்லையை மியான்மார் பகிர்ந்துள்ளது. இதனால் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் அதிக உறவினைக் கொண்டுள்ள நாடுகளாக சீனாவும் மியான்மாரும் விளங்குகின்றன.

ஐந்து, மியான்மார் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு முழு கிழக்காசிய நாடுகளையும் விட இரு மடங்கு அதிகமானதென புள்ளிவிபரங்கள் தருகின்றன. 2020 இல் இரு தடவை கடன் மற்றும் முதலீடாக சீனா மியான்மாருக்கு 1.6 பில்லியன் அமெ.டொ. அடிப்படையில் வழங்கியுள்ளது. மியான்மாரின் ஏற்றுமதியும் இறக்குமதியும் சீனா சார்ந்தே அமைந்துள்ளது. உலகவங்கியின் தகவலின் படி சீனாவால் அளவுக்கதிகமான கடன் வழங்கும் நாடுகளில் பட்டியலில் மியான்மாரும் ஒன்றாகும். 2019 இல் 3.34 பில்லியன் அமெ.டொ என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் விதித்துவரும் தடைகளை மியான்மார் எதிர் கொள்ளும் பலத்தை சீனா வழங்கத் தயாராக இருக்கும் என்பது மியான்மார் இராணுவத்திற்கான வாய்ப்பாகவுள்ளது. ஆனால் மேற்கு நாடுகளும் இராணுவ ஆட்சியாளர்கள் மீதே தடைகளை விதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆறு, மியான்மார் அரசியலிலும் இராணுவத்தின் ஆட்சியுரிமையையும் அங்கீகரித்துள்ள சீனாவின் நட்பு நாடாக ரஷ்யா விளங்குவது சீனாவுக்கு இன்னோர் பலமாகும்.
சீனாவும்ரஷ்யாவும் இணைந்து  ஐ.நா.பாதுகாப்புச் சபையில்  மியான்மாருக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தன் மூலம் அதனை உறுதி செய்துள்ளன. இதனால்  மியான்மாரின் இராணுவ ஆட்சியை தகர்ப்பதென்பது  சீனாவைக் கடந்து ரஷ்யாவையும் மேற்கு எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் அத்தகைய ஆட்சியை அகற்றுவதென்பது கடினமான இலக்காகவே தெரிகிறது.

மியான்மார் மக்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் மேற்குலக தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீனா எதிர் அமெரிக்கா எனும் போராட்டம் தவிர்க்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டு மக்களது இயல்பான போராட்டத்தை பாதிப்பதாக அமைந்துவருகிறது.  மியான்மாரில் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகளிலும் அத்தகைய  நிலை ஒன்றுக்கான சூழல் எழுந்து வருகிறது. அதே நேரம் சீனாவும் தனது ஆட்சியின் வலுவை படிப்படியாக விஸ்தரித்து வருகிறதைக் காணமுடிகிறது.

ஏழு அமெரிக்கா சார்ந்த நாடுகளது பலவீனம் மியான்மார் விடயத்தில் மட்டுமல்ல உலகளாவிய தளத்தில் காணப்படும் விடயமாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி மட்டுமன்றி இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தனது கூட்டணியை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இழந்து வருகின்றன. அது பெருமளவுக்கு உலகளாவிய அரசியலில் மியான்மார் போன்ற நாடுகளுக்குள் ஜனநாயகம் மனித உரிமைகள் என்ற விடயங்களில் பலவீனத்தை தருகிறது.

அத்துடன் இத்தகைய நாடுகளில் காணப்படும் சிறிய தேசியங்கள் மீதான அமெரிக்காவின் பலவீனமான கரிசனையும் அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் தனது நலனுக்குசு மட்டுமே பயன்படுத்துவது அமெரிக்கா சார்ந்த மேற்குலகத்தின் அணுகுமுறையாக அமைந்துள்ளது. அதனால் சீனாரஷ்யா போன்ற நாடுகளது எழுச்சி இலகுவானதாக சாத்தியமாவதுடன் அத்தகைய சிந்தனைகள் கலாவதியாகின்றன. 

எனவே மியான்மார் ஆட்சியாளர்கள் அமெரிக்க,- சீன இழுபறிக்குள் அகப்பட்டுள்ளனர். அவர்களது இருப்பு இரு நாடுகளது நலன்களாலும் பாதிக்கப்படுவதுடன் இராணுவத்தின் இருப்பினை தகர்ப்பது கடினமானதாகவே தெரிகிறது. கடந்த காலம் முழுவதும் இராணுவத்தின் பிடிக்குள் இருந்த நாட்டை மீட்க முடியாது திணறியது போலவே மீளவும் ஒரு சூழலை நோக்கி அந்த நாடு நகர்கிறது. அமெரிக்காவின் தீர்மானங்களும் முடிவுகளும் மியான்மார் மீதான கவனமும் அதன் அரசியல் இலாபம் கருதியதே.

றோஹிந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது எந்த கரிசனையும் கொள்ளாத  அமெரிக்கா, தற்போது மனித உரிமையும் ஜனநாயகமும் பேசுவது அதன் நலனுக்கானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதனையே ஆங் -சாங் -சூகியும் மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது. ஐ.நா.வரை சென்று தனது நாட்டு இராணுவத்தை பாதுகாத்தவர். அதே இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு வைப்பது வேடிக்கையானதாகவே தெரிகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments