ரூ.1000 எவ்வாறு வழங்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ரூ.1000 எவ்வாறு வழங்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 13 நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கும், மற்றைய கொடுப்பனவுகளை இல்லாதொழித்து கூட்டு ஒப்பந்தத்தையும் இரத்து செய்வதற்கும் கம்பனி நிர்வாகம் முனைவது ஒரு ஆபத்தான நிலையை உருவாக்குவதோடு, தொழிலாளர் வர்க்கத்திற்கு குழிபறிப்பதாகவே அமையும். இதற்கு எந்தவொரு தொழிற்சங்கமும் துணைபோகாது.  

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை பெற்று கொடுக்கும் நோக்கோடு கட்சி, இன, மத, மொழி வேறுபாடின்றி ஒன்றுபட்ட சக்தியின் மூலம் கூட்டு ஒப்பந்த நடைமுறையை நிலைநிறுத்த முன்வரவேண்டும் என செங்கொடி சங்கத்தின் பிரதித் தலைவரும், மூத்த தொழிற்சங்கவாதியுமான செல்லையா சிவசுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. கூட்டு ஒப்பந்தம் இருந்தால் தொழிலாளர்களும், நிர்வாகிகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு ஏதுவாக அமையும். மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவு, வேலை நாட்கள், போக்குவரத்து வசதிகள், அனர்த்தத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள், புதிய தொழிலாளர்களின் பெயர் பதிதல், அதற்கான ஒரு பதிவுப்புத்தகத்தை நடைமுறைப்படுத்தல், திருமணம் முடிக்கும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குதல், பெண்களுக்கு கங்காணி வேலை வழங்குதல், வைத்திய வசதி, மினிப்புத்தக (புகார் புத்தகம்) பாவனை, பெண்களின் உடல்நல பாதுகாப்பு, வெளிநாட்டுப் பயணங்களுக்கான விடுமுறை, தேயிலை விற்பனைக்கான கொடுப்பனவுகள், உற்சவ காலங்களில் மேலதிகமாக வழங்கப்படும் முற்கொடுப்பனவு என இன்னும் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இதனை தவிர்ப்பதற்காகவே கம்பனி நிர்வாகம் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து தொழிலாளர்களை ஒரு அடக்கு முறைக்கு கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது. இவ்வேலையை அண்மைக்காலமாக நிர்வாகம் செய்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. பல தோட்டங்களில் மேலதிகமாக பறிக்கப்பட வேண்டிய கொழுந்து இறாத்தலின் அளவை அதிகரிப்பது மற்றும் நிறுவையின் 8 கிலோ கிராம், 7 கிலோ கிராம் வீதம் மேலதிகமாக அறவிடுவது, 10 நாட்கள் வேலை செய்கின்ற ஒரு தொழிலாளிக்கு 5 நாட்களாக குறைத்து பெயர் வழங்குவது தோட்டங்களில் முறைசாரா முறையை கையாள்வது, கைகாசுக்கு வேலை வழங்கி ஓய்வின்றி தொழிலாளர்களை மேலதிகமாக கொழுந்து பறிக்க வைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதோடு அக்கால கட்டங்களில் அவர்களுடைய உடல்நல பாதுகாப்பு பற்றி எவ்விதமான அக்கறையும் காட்டாமை அத்தருணங்களில் ஏற்படும் ஆபத்துகளான குளவி கொட்டுக்குள்ளாதல், பாம்பு கொத்துதல், தவறி விழுதல் போன்ற விபத்துகளுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படாமை உழைப்பை மாத்திரம் சுரண்டி அதிக வருமானத்தை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்பட்டு வருவது என்பன இடம்பெறுகின்றன.  

கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படுமானால் இந்நிலைமை மேலும் வலுப்பெற்று கம்பனி நிர்வாகங்களின் கையோங்கி தொழிலாளர் வர்க்கம் ஒரு அடிமை வாழ்வை வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவர். இதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளப் போகின்றோமா அல்லது கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்களை அடக்குமுறை மூலமாக வழிநடத்துவதற்கு, வழி அமைத்துக் கொடுக்க போகின்றோமா? என்பதை வர்க்கரீதியாக சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.  

இன்று கம்பனி நிர்வாகங்கள் அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 140 ரூபாவும் வழங்க வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 13 நாட்கள் வேலை வழங்குவதன் மூலமாக மாதம் 11,700 ரூபாவே அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். அதே நேரம் அதற்கான ஊழியர் சேமலாப நிதி மாத்திரமே வழங்கப்படும். இதில் தொழிலாளர்களின் மாதாந்த கொடுப்பனவுகளை கழிக்கும்போது என்ன மீதமாகும் என்பதை சற்று சிந்திக்கவேண்டியுள்ளது.  

கடந்த முறை செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக இருந்தது. 25 நாள் வேலை வழங்கப்பட வேண்டுமென கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 25 நாள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும்போது அவர்களுக்கு 17,500 ரூபாய் அடிப்படை சம்பளமாக கிடைக்கும். அதனை விட மேலதிகமாக வேலை வழங்குகின்ற பொழுது மேலும் சம்பளம் அதிகமாக கிடைக்கக்கூடியதாக இருந்தது. அதற்கான மேலதிக சேமலாபநிதியும் கிடைத்தது.  

எனவே இதை எல்லாம் இல்லாமல் ஒழிப்பதற்காகவே கம்பனி நிர்வாகம் 13 நாள் வேலையை வழங்கி மேலதிக நாட்களுக்கு முறைசாராமுறை மூலமாக வேலை வழங்கி அவர்களுடைய அடிப்படை உரிமைகளை பறித்து கொத்தடிமைகளாக நடத்துவதற்காகவே இக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதிலும் முக்கியமாக பெண் தொழிலாளர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவதோடு நிர்வாகம் அவர்களின் உடல்நலம் குறித்து எவ்வித கவனமும் செலுத்துவதில்லை.  

இதற்காக தோட்ட நிர்வாகம் காட்டும் காரணங்களை தோட்டம் நஷ்டத்தில் செல்வதாகவும், இதற்கு தொழிலாளர்களே காரணமெனவும் கூறி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் தோட்டங்கள் இலாபகரமாகவே இயங்கின. ஒரு காலத்தில் 8 லட்சமாக இருந்த தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்ைக இன்று 2 லட்சமாகக் குறைந்துள்ளன. பல தொழிலாளர்கள் குறைந்த வருமான வழங்கியமையினால் வேறு இடங்களுக்கு வேலைக்காக செல்லும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.  

தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 சம்பளம் வழங்கமுடியாதென கூறும் கம்பனி நிர்வாகங்கள் தோட்டத்துரைமாருக்கு வழங்குகின்ற சம்பளம் மற்றும் சலுகைகளை பற்றி சற்று சிந்திப்பார்களா? அன்று தொழிற்சாலைகளுக்கு தேவைக்காக நாட்டப்பட்ட மரங்களை இன்று தறித்து பலகோடி ரூபா இலாபம் சம்பாதிக்கின்றனர்.  

வெறுமனே தொழிலாளர்களை குறைகூறுவதை தோட்ட நிர்வாகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்ட சக்தியின் மூலமாக தொழிலாளர்களின் எதிர்கால ஆபத்தினை ஆழமாக சிந்தித்து தொழிற்சங்க அரசியல், இன, மத பேதமின்றி ஒன்றுபட்ட சக்தியின் மூலமாக கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு வழி அமைப்பதோடு, மேலதிகமாக சேர்க்க வேண்டிய சரத்துகளை உள்ளடக்குவதற்கு முன்வர வேண்டும்.  

மேலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது கட்சி அரசியலுக்கு அப்பால் வர்க்க சிந்தனையோடு தொழிலாளர்களுக்கு வெறுமனே ரூபா 1040 வழங்கப்படும் என்று கூறுவதைவிடுத்து எவ்வாறு ரூபா 1040 வழங்கப்படும் என்பதனையும், கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்பதை தெளிவுபடுத்துவதோடு, அது என்றைய தினம் கூட்டு ஒப்பந்தம் கையொப்பம் இடப்படும் என்ற தெளிவினையும், நிறுவை பணம் எவ்வாறு வழங்கப்படும் என்பதனையும் அரசியலுக்கு அப்பால் வர்க்க சிந்தனையோடு தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்துவதே தொழிற்சங்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென தனது அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நிருபர்
மஸ்கெலியா நிருபர்

 

Comments