சம்பளச் சபை தீர்மானத்தை எதிர்த்து கம்பனிகள் நீதிமன்றம் செல்லலாம் | தினகரன் வாரமஞ்சரி

சம்பளச் சபை தீர்மானத்தை எதிர்த்து கம்பனிகள் நீதிமன்றம் செல்லலாம்

விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமியுடன் ஓர் உரையாடல்

கே: ஒரு வழியாக 1000 ரூபா என்ற இலக்குக்கு வந்துவிட்டீர்கள். வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் அல்லது ஆட்சேபனைக்கான காலம் முடிவடைந்ததும் கம்பனி தரப்பு நீதிமன்றம் செல்லலாம் அல்லவா?

சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின் கம்பனியோ அல்லது வேறு யாரேனும் ஆட்சேபணை தெரிவிக்காவிட்டால் சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் அமுல்படுத்தப்படும். ஆட்சேபணைகள் இருப்பின் நீதிமன்றம் சென்று அதன் தீா்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  

கே: வேலைநாள் குறைப்பு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது அல்லவா?  

ஆம்! தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரையும் சம்பளக் கொடுப்பனவுகள் பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்ததுடன் இம்முறை அதை தொழிற்சங்கங்கள் கம்பனி தரப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாது தொழில் அமைச்சரின் ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இதன் அடிப்டையில் எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 300 நாள் வேலை வழங்குமாறு கட்டாயப்படுத்த முடியாது.  

கே: வேலைக்கு அல்லது திறமைக்கேற்ற சம்பளம் என்பதைத்தான் கம்பனி தரப்பு தமது தாரகமந்திரமாக வைத்திருக்கிறது. அந்தக் கொள்கையுடன், இந்த 900 ரூபா சம்பளத் திட்டம் ஒத்துப்போகாது அல்லவா?  

நாம் திறமைக்கு ஏற்ற சம்பளம் அல்ல, 1000 ரூபா சராசரி சம்பளத்தையே கோரியுள்ளோம்.  
100 ரூபா அரசு தன் பட்ஜட் நிதியிலிருந்து தருவதாக கூறப்பட்டுள்ளது. அது என்ன நிதி? தனியார் தொழிலாளருக்கு அரசு அலவன்ஸ் போன்றதொரு தொகை தருவது நீடிக்கக்கூடிய ஒன்றா? தொடாந்து நீடிக்கும் என்பது சந்தேகத்துக்குரியது.
இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப மாற்றம் அடையலாம். அவ்வாறாயின் வரவுசெலவு திட்டத்தின் ஊடாக தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.  

கே: சொல்லுங்கள், சம்பள நிர்ணய சபையில் என்ன நடந்தது?  

கடந்த கட்டாம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சம்பள நிர்ணய சபையின் கேட்போர் கூடத்தில் அதன் செயலாளர் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. இச் சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணய சபையின் உறுப்பினர் ம. மாரிமுத்துவும் ஸ்ரீலங்கா சுதந்திர தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் பி.ஜி. சந்திரசேனவும் முன்வைத்த 900 ரூபா அடிப்படை சம்பளமும் அரசாங்கத்தின் ஊடான வாழ்கைச்செலவுக்கேற்ற மானியக்கொடுப்பனவுமான 100 ரூபாவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரு நாள் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக சபையில் கலந்துரையாடப்பட்டது. இக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 உறுப்பினர்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் 8 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சார்பாக நியமன உறுப்பினர்கள் மூவருமாக கலந்து கொண்டனர்.  

இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் ரூபா 1000 கொடுப்பனவு நீண்டகாலமாக பேசப்பட்டு வருவதையும் தொழிலாளர் சம்பளக் கோரிக்கையின் நியாயத் தன்மையையும் எடுத்துரைத்தனர். அதேவேளை முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இக் கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் இவ்வாறு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினால் தோட்டத்தை கொண்டுநடாத்த முடியாது என்றும் நாங்கள் கூடுமானவரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவுகளை கூட்டு ஒப்பந்தம் மூலமாக வழமைபோல் நடைமுறைப் படுத்துவதற்கு முயற்சி செய்தோம். அதை தொழிற்சங்கங்கள் ஏற்றுகொள்ளாது தொழில் அமைச்சரின் ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.  

இதன் அடிப்டையில் எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். பெயருக்கு தற்சமயம் 16 கிலோ தேயிலை பறிக்க வேண்டும் என்பதை மாற்றி 18 கி.கிராமாக உயர்த்தப்படும் என்றும் கம்பனி தரப்பு குறிப்பிட்டது. இதன் பின் 1000 ரூபா கொடுப்பனவு பிரேரணையை ஆதரிப்பவர்கள் வாக்களிக்குமாறு ஆணையாளர் சபையை கோரினார். தொழிற்சங்கம் சார்பாக 8 உறுப்பினர்களும் நியமன உறுப்பினர் மூவருமாக 11 பேர் ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை 3 அதிகப்படியான வாக்குகளால் வெற்றியடைந்ததாக ஆணையாளர் அறிவித்தார்.

இத்தீர்மானம் தொழிலமைச்சரின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின் எதிர்ப்பில்லை எனின் மீண்டும் சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டு தீர்மானம் அமுலுக்கு வரும்.  

கே: கூட்டு ஒப்பந்தத்துக்கு என்ன நடக்கும்? சமூகநலத் திட்டங்களை, இழக்க முடியாது அல்லவா?  

தோட்டத் தொழிலாளர்களின் நலன்சார்ந்த கூட்டு ஒப்பந்ம் 1998 முதல் 21 தோட்ட கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் இம்முறை கூட்டுஒப்பந்தம் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தநிலையில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் ரூபா 1000 கொடுப்பனவு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.
பேச்சுவார்த்தையில் சுமுகநிலை ஏற்படாததன் காரணமாக தொழில் அமைச்சர் தலைமையிலும் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு தோல்வியடைந்த நிலையில் சம்பள நிர்ணய சபையால் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இதன் காரணமாக கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகுவதாக சம்பள நிர்ணய சபையில் தெரிவித்தது. இதனால் கூட்டுஒப்பந்தம் செல்லுபடியற்றதாகும் என்பதே என் கருத்து.  

அதற்கமைய தொழிலாளர்களின் சேமநலன் தொடர்பாக அரசாங்கம் முன்வந்து முதலாளிமார் சம்மேளனத்துடனும் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள வேண்டியிருக்கும்.  

மேலும் சமூகநலன் தொடர்பாக அரசாங்கம் பிரதேச சபை, மாகாணசபை ஊடாக கிராமங்களில் முன்னேடுக்கப்படும் சேமநலத் திட்டங்களை தோட்டப்பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  

சிறுதோட்ட உரிமையாளருக்கு வழங்கும் சலுகைகள், மானியங்கள் என்பனவற்றை தமக்கு வழங்குவதில்லை என்ற ஒரு க[றை கம்பனிகளுக்கு உள்ளது. தொழிலாளர் தரப்பு மற்றும் கம்பனி தரப்பு என இருதரப்பும் தோட்டங்களை காப்பாற்றிக் கொள்தல் என்ற புள்ளியில் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் பார்வை என்ன?  

1972ம் ஆண்டு காணிகள் தேசிய மயப்படுத்தல் சட்டத்தின் கீழ் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றது. அதன்படி பேருந்தோட்டங்களும் அரசாங்கத்திற்கு கீழ் வந்தன. இவ்வாறு பொறுப்பேற்றதில் 75 வீதத்தை அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு வழங்கியது. ஏனையவை ஆர்.பி.சீ மற்றும் மக்கள் பெருந்தோட்டச் சபையின் கீழ் வந்தன. தற்சமயம் அக்காலத்தில் 75 வீதம் வழங்கப்பட்ட தோட்டங்களில் இருந்து தற்போது உற்பத்தியில் சிறுதோட்டங்களில் இருந்து 72 வீதம் வருமானம் கிடைக்கின்றது. தோட்டங்களை கம்பனிகளுக்கு மீண்டும் 1992ம் ஆண்டு வழங்கும்போது அரசாங்கம் அதில் வேலை செய்யும் தொழிலாளர் நலன் தொடர்பாகவோ அவார்களின் சம்பள கொடுப்பனவு தொடர்பாகவோ எவ்வித உடன் படிக்கைகளையும் செய்துகொள்ளாத காரணத்தினால் இன்று தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அத்துடன் தனியார் கம்பனிகளுக்கு மீண்டும் தோட்டங்களை வழங்க வேண்டாம் என தொழிற்சங்கங்கள் பலமான எதிர்ப்பை தெரிவித்தன. இதன்போது கம்பனிகளும் அரசாங்கமும் 10 வீத பங்குகளை இலவசமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.  

ஆகையால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பங்குகளை முறையாக வழங்கி தோட்ட பங்காளிகளாக இணைத்து கொள்வதன் மூலம் தோட்டங்களை காப்பாற்றிக்கொள்ள முடிவதுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உறுதியடையும்.  

கூட்டு ஒப்பந்த காலம் சம்பள நிர்ணய சபைக்காலம் என இரண்டினதும் நன்மை தீமைகள் பற்றி ஒரு ஒப்பீடு செய்வீர்களா?  

சம்பள நிர்ணயசபைக் காலம்  

* சிங்கள தமிழ் புதுவருடத்திற்கு சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட்டது.  
* 1990 ம் ஆண்டுமுதல் சுதந்திர தினம் சம்பளத்துடனான விடுமுறையானது.  
* வருட இலாபத்தில் 750 ரூபா தொழிலாளா்களுக்கு 1973ம் ஆண்டு சம்பளம் 3.50 சதமாக இருக்கும் போது வழங்கப்பட்டு தற்போதும் அதே தொகை வழங்கப்படுகின்றது.  
* 14 நாட்கள் சேவைகாலபணம் 1983 ம் ஆண்டுதொடக்கம் வழங்கப்படுகின்றது.  
சம்பள நிர்ணய சபைக்காலம் (தீமை)  
* சம்பள நிர்ணயசபையின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படவில்லை.
 
கூட்டு ஒப்பந்த காலம்  

கூட்டுஒப்பந்தத்தில் வாயிலாக தொழிலாளர்களுக்கு சிறப்பான செயல்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் அத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை.  

கே: வெளிவாரி பயிர்ச்செய்கை ஏற்கனவே நடைமுறையில், இருப்பதுதான். அதனை சங்கங்கள் கூடி ஆராய்ந்து விரிவுபடுத்தலாம் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் விளக்க முடியுமா?  

முற்றுமுழுதாக வெளிவாரிப் பயிர்ச்செய்கைக்கு தேயிலைத் தோட்டங்களை உட்படுத்துவது சாத்திமற்றது. காரணம், தொடர்ந்து விளைச்சளை பெறமுடியாது. தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அல்லது அவற்றில் கம்பனிகளும் சிறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளலாம். ஏனெனில் சிறு பயிர்ச்செய்கை தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.   

Comments