மீண்டும் இராஜதந்திர ரீதியில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதா அமெரிக்கா? | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் இராஜதந்திர ரீதியில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதா அமெரிக்கா?

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கட்சியின் கட்டமைப்புக்கோ ஆட்சியாளரின்  தன்மைக்கு ஏற்பவோ வடிவமைக்கப்படுவதில்லை என்பதற்காகவே ஜனாதிபதி தெரிவிற்கும் பதவியேற்புக்குமான காலம் அதிகமாக இடைவெளியை கொண்டிருக்கும். அது வெளியுறவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆட்சியாளர் பின்பற்றிய கொள்கையிலிருந்து ஒரு தொடர்ச்சியை நோக்கிய நகர்வு மேற்கொள்வதே வழமையான மரபாக அமெரிக்கா பின்பற்றி வருகிறது. ஆனால் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் காணப்படும். அவ்வாறே ஆட்சியாளர்கள் மாறும் போதும் வேறுபாடு அமைந்திருப்பது வழமையானதாகும். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் காலத்திலிருந்து அதிக வேறுபாட்டை மேற்கொள்ள வேண்டிய தேவை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனாலேயே அவரது வெளியுறவுக் கொள்கையானது தனித்துவமானதாகவும் கடந்தகாலத்தை விட வேறுபட்டதாகவும் அமைந்துள்ளதை காணமுடிகிறது. இக்கட்டுரையும் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேடலாக அமையவுள்ளது. 

முதலில் ஜோபைடனின் வெளியுறவுக் கொள்கை சார்ந்து 03.02.2021 அன்று அவர் ஆற்றிய உரையை நோக்குவது பொருத்தமானதாக அமையும். குறிப்பாக தனது அதிகாரிகள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போது உலக நாடுகளுக்கு தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புவது அமெரிக்கா மீண்டும் இராஜதந்திர ரீதியாக செயல்பட வந்துள்ளது என்பதைத்தான். கடந்த காலத்தில் விட்ட தவறுகளை சரிசெய்ய வந்துள்ளது. அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுடனான உறவை மீள புதுப்பித்துக் கொள்ள விரும்புகின்றது. கொவிட் பெருந்தொற்று பருவநிலை மாற்றம் மற்றும் அணுவாயுத நெருக்கடியின் மத்தியில் கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது அமெரிக்கா. கடந்த சில ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடா ஜேர்மனி பிரான்ஸ் தென்கொரியா ஜப்பான் அவுஸ்ரேலியா மெக்ஸ்சிக்கோ ஆகிய நாடுகளுடன் நட்புறவைப் புதுப்பித்துள்ளது. இந்த நட்பு நாடுகளே அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் என்று குறிப்பிட்டார்.  

மேலும் உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை கூட்டணி நாடுகளுடனும் ஏனைய நாடுகளுடனும் சேர்ந்தே எதிர்கொள்ள முடியும் எனவும் அமெரிக்காவால் தனித்து எதிர் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். சுதந்திரத்தைப் பேணுதல், சூழலை வென்றெடுத்தல், உலகளாவிய ரீதியில் உரிமையையும் சுதந்திரத்தையும் நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை பராமரித்தல், மற்றும் மனித சமூகத்துடன் கண்ணியமாக நடந்து கொள்வதற்கு தயாராதல் என்பன அமெரிக்காவின் தனித்துவமான வலிமையும், ஆதாரமுமாகும் எனக் குறிப்பிட்டார்.இதனடிப்படையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையானது நாடுகளைக்கடந்து பிராந்தியங்களை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. அதனை தெளிவாக நோக்குவோம்.  

ஒன்று அமொரிக்காவின் உலகளாவிய கொள்கைக்குள் ஐரோப்பா முதன்மையானது. அதிலும் பிறிக்ஸ் சூழலுக்கு பின்பான ஐரோப்பிய- அமெரிக்க உறவுக்கான களத்தை வரைவதில் பைடன் நிர்வாகம் தெளிவான வெளியுறவுக் கொள்கையை வகுத்துள்ளது. அதாவது வர்த்தக நோக்கிலும் பிற பிராந்தியங்களை கையாளும் விதத்திலும் ஐரோப்பிய நட்புகளுடன் இணைந்து பயணிக்க பைடன் தயாராகும் விதத்திலேயே தனது வெளியுறவுக் கொள்கையை முன்வைத்துள்ளார். ஐரோப்பாவுக்குள் ஜேர்மனியையும் பிரான்ஸையும் முதன்மைப்படுத்திக் கொண்டதன் மூலமும் அந்த நாடுகளே அமெரிக்காவின் பெரும் பலம் என்று குறிப்பிட்டதன் மூலம் ஐரோப்பா நோக்கிய வெளியுறவுக் கொள்கையில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக ஜேர்மனியில் அமெரிக்க நிறுத்தியுள்ள இராணுவத்தினை மீளப் பெறுவதை கைவிடுவதாக பைடன் அறிவித்துள்ளார். அத்துடன் நேட்டோ நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்தும் நோக்குடன் செயல்படும் பைடன் இதன் மூலம் அமெரிக்க நோட்டோ உறவினை மீளமைக்கவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் தனது வெளியுறவுக் கொள்கையை திட்டமிட்டுள்ளார்.  

இரண்டு, அவரது வெளியுறவுக் கொள்கையின் பிரதான விடயமாக இந்தோ, -பசுபிக் தந்திரோபாய நாடுகள் அமைந்திருந்தன. தென்கொரியா ஜப்பான் அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொள்ளும் விதத்தில் அந்த நாடுகளையும் பட்டியல் படுத்தியிருந்தார். குறிப்பாக ஸ்குவாட் நாடுகளின் உறவினை முதன்மைப்படுத்திய பைடனும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் கொலுனும் இந்தோ-பசுபிக் உபாயத்தினை தொடர்ந்து பேணுவதற்கான நகர்வுகளையும் வெளியுறவுக் கொள்கையில் வலியுறுத்தியிருந்தனர். 

மூன்று ரஷ்யாவுடனான வெளியுறவுக் கொள்கையின் போக்கினை சுட்டிக்காட்டிய பைடன் ரஷ்யாவின் விரோத நடவடிக்கைக்கு எதிரான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார். வெளிப்படையாக ரஷ்யாவைக் கண்டித்த ஜோ பைடன் கடந்த ஆட்சியின் போது இருந்த நிலமை தொடராது எனவும் வெளிப்படையான அழுத்தங்கள் ஆரம்பிக்கும் எனவும் எச்சரித்தார் ரஷ்யா கைது செய்துள்ள நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமன்றி ரஷ்யாவின் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான செல்வாக்கினை கையாளும் நகர்வுகளையும் அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். 

நான்கு, மேற்காசியாவைப் பொறுத்து அமெரிக்காவின் வெளியுறவில் பாரிய மாற்றங்களை அறிவித்துள்ள ஜோ பைடன் குறிப்பாக ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கிய ஆயுத தளபாடங்களை நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். எமன் நாட்டில் போருக்கு வழங்கிய ஆயுத விற்பனையை நிறுத்துவதாகவும் ஜனநாயக மற்றும் மனித உரிமைக்கான ஆதரவையும் இராஜதந்திர பொறிமுறைக்கான நகர்வுகளையும் அமெரிக்கா முதன்மைப்படுத்தும் எனவும் தெரிவித்தார். அதே நேரம் சவுதிஅரேபியா ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாவதுடன் அதிக பிராந்திய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்த பைடன் சவுதி அரேபியாவின் இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பனவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றார். இதுபற்றி அதிக விமர்சனத்தை முன்வைத்த முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பாம்பியோ பைடன் நிர்வாகம் குறிப்பிடும் நண்பர்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலின் நட்பினைக் கைவிட்டு ஈரானுடன் நட்பு பாராட்டும் பராக் ஓபாமாவின் அணுகுமுறையாகவே அமையும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மேற்காசியாவில் ட்ரம்ப்ன் கொள்கையினால் பாரிய பாதிப்பினை அமெரிக்க அடைந்ததென்பது தெரிந்த விடயமே. அதனாலேயே ரஷ்யா, சீனா-, ஈரான், சிரியா கூட்டு வலுவடைந்தது என்பதை நிராகரித்துவிட முடியாது. 

ஐந்து சீனாவைப் பொறுத்து பைடனின் கொள்கை சற்று வித்தியாசமாக உள்ளது. சீனா முன்வைக்கும் சவால்களை அமெரிக்கா நேரடியாக எதிர்கொள்ளும் என்றும் அதேநேரம் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப சீனா செயல்படுமாயின்; சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயங்காது எனவும் தெரிவித்துள்ளார். சீனாவின் பொருளாதார போட்டியையும் அத்துமீறல்களையும் அமெரிக்கா எதிர்கொள்கிறது. மனித உரிமைகள் சார்ந்தும் அறிவுசார் சொத்துக்களின் திருட்டுக்கள் சார்ந்தும் உலகளாவிய ஆதிக்கம் மீதான தாக்குதல்களையும் பலவீனப்படுத்த அமெரிக்கா போராடும். சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றார் ஜோ பைடன். 

இவ்வாறு பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அமெரிக்காவை மீள அமைக்கும் நகர்வுகளில் பைடனின் வெளியுறவுக் கொள்கை காணப்பட்டாலும் வெளிப்படையாக ஈரான், வடகொரியா, சிரியா, கியூபா சார்ந்து அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். ஆனாலும் கடந்த ஆட்சிக் காலத்தை விட இராஜீக அடிப்படையில் மாற்றங்களை தரும் விதத்தில் அவரது வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம் அணுவாயும் போன்றவை மட்டுமல்லாது பயங்கரவாதம் தேசியவாதம் பிராந்திய வாதம் என்பன ஏற்படத்தக் கூடிய நியமங்களை தடுப்பதற்கான எத்தகைய உத்தியையும் அவரது வெளியுறவு கொள்கை காண்பிக்கவில்லை. ஆனால் மீண்டும் அமெரிக்கா உலக அரசியலிலுக்கு வந்துள்ளது என்ற செய்தியே பிரதானமானதாக அமைந்துள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments