காதலர் தினத்துக்கு தேவை புதிய வரைவிலக்கணம் | தினகரன் வாரமஞ்சரி

காதலர் தினத்துக்கு தேவை புதிய வரைவிலக்கணம்

ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ முக்கிய தினங்கள் வருகின்றன.

ஆனால் பலரும் நினைவில் வைத்திருப்பது வெகு சில தினங்களைத்தான். உலக மகளிர் தினம் என்றால் பெரும்பாலானோருக்கு அது மார்ச் எட்டாம் திகதி என்பது நினைவில் இருக்கும். அவ்வாறான ஒரு பிரபலமான மற்றொரு தினம் என்றால் அது உலகெங்கும் இன்று கொண்டாடப்படும் காதலர் தினமாகவே இருக்கும். கொரோனா பரவல் காரணமாக முன்னரைப் போலல்லாது சுகாதார முறைகளின் கீழ் அத் தினம் உலகெங்கும் கொண்டாடப்படும் எனக் கருதலாம்.

காதலர் தினம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கேள்விப்படாத ஒரு தினம். 1948க்கு முன்னர் நவம்பர் ஐந்தாம் திகதியை இந் நாட்டில் ஆங்கிலேயரும் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்களும் ‘கைபோக்ஸ் தினம்’ என்பதாகக் கொண்டாடி வந்தார்கள். 1605ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத் தை வெடி வைத்து தகர்ப்பதற்காக பாராளுமன்ற கட்டத்தின் கீழ் வெடிமருந்து பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

கிறிஸ்தவரான மன்னரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து கத்தோலிக்கரின் ஆட்சியை பிரிட்டனில் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இச் சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடி மருந்து பீப்பாய்களுக்கு தீ வைப்பதற்கு முன்னரேயே சதித் திட்டம் வெளியே தெரிய வந்தது. சதிக் கூட்டம் சுற்றி வளைக்கப்பட்டது. அதன் தலைவராகக் கருதப்பட்ட கை ஃபோக்ஸ் என்ற கத்தோலிக்கர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 

பின்னர் மக்கள் பெரும் வெடி விபத்தைத் தவிர்த்து, ஜனநாயகமும், மன்னரும் காப்பாற்றப் பட்ட நவம்பர் ஐந்தாம் திகதியை கொண்டாடத் தொடங்கினர். நவம்பர் மாதத்தின் குளிர் இரவுகளில் தீ மூட்டி மகிழ்வது ஒரு முக்கிய கைஃபோக்ஸ் தின நிகழ்வாகத் திகழ்ந்தது.

பெரும்பாலும் அதே நவம்பர் மாதத்தில் வரக் கூடிய தீபாவளியின் மையப்புள்ளியும் கைஃபோக்ஸ் தினத்தின் மையப் புள்ளியும் – தீமையை அழித்தல் – என்ற ஒரே கருப் பொருளைக் கொண்டிருப்பது ஆச்சரியமூட்டும் ஒரு ஒற்றுமை. நவம்பர் ஐந்தாம் திகதி தினத்தை இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேயர் இரவில் தீயிட்டும், கைஃபோக்சின் உருவ பொம்பை எரித்து ஆடல் பாடல்களுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். சுதந்திரத்தின் பின்னர் அப் பழக்கம் கை விட்டுப் போனது. அதற்கு பதிலாக அதே இளைஞர்களை ஈர்க்கக் கூடிய மற்றொரு வெளிநாட்டு இறக்குமதி தினமாக இக் காதலர் தினத்தைக் குறிப்பிடலாம்.

காதலர் தினம் நமது கலாசாரத்துக்கு பொருத்தமானதா, அது அவசியமா என்ற கேள்விகள் ஒவ்வொரு காதலர்தின சமயத்திலும் கிளப்பப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதன் தோற்றத்தை நாம் ஆராய்வோமானால் கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் இருந்தே அவ்வாறான ஒரு தினம் ரோமப்பேரரசில் அனுஷ்டிக்கப்பட்டு வந்ததாகவும் அது லூபகாலியா’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாகவும் வரலாற்று ரீதியான தகவல்கள் சொல்கின்றன.

இதே போன்ற காதலருக்கான தினங்கள் எகிப்து, கிரேக்கம், இந்தியா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சிலப்பதிகாரம் விவரிக்கும் காவிரிபூம்பட்டின இந்திரவிழாவையும் தமிழரின் பண்டைய காதலர் தினமாகக் குறிப்பிடலாம். நோய்களும், அர்த்தமற்ற பிணக்குகளும், போர்களும் நிறைந்து காணப்பட்ட அக்காலத்தில் மனித வள இழப்பு அதிகம் என்பதால் மனித வள பெருக்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.

வத்சாயனரின் காம சூத்திரமாகட்டும் அல்லது சங்க இலக்கியங்களில் காணப்படும் களவொழுக்கம் மற்றும் கோவில் சிற்பங்களில் காணப்படும் விரச பாவங்களாகட்டும், இன்றைய உலகில் வலியுறுத்தப்படும் குடும்பக் கட்டுப்பாட்டைப் போலவே அன்றைய தேவை குடும்பக்கட்டுப்பாடற்ற தன்மையாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக் கால தேவையும் இன்றைய தேவையும் வெவ்வேறானவை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மருத்துவ விஞ்ஞானம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் இக் காலத்தில், தாய் – சேய், சிசு மரணங்கள் மிகவும் குறைந்துள்ள மற்றும் வயதாகி மரணமடைவோர் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்து வரும் ஒரு சூழலில், காதலர்களுக்கென ஒரு தனி நாள் அவசியமா என்ற கேள்வி மிக இயல்பானதுதான்.

எனவே நாம் காதலர் தினத்துக்கு புது அர்த்தம் செய்ய வேண்டியிருக்கிறது. காதலர் தினம் இனப்பெருக்கத்துக்கான ஒரு கருவளத்தினம் என்ற தேவை இன்று அற்றுப் போய் விட்டது. கொண்டாடுவதற்கு ஏராளமான தினங்கள் வருடம் நெடுகிலும் இருக்கின்ற போதிலும் உண்மையான நட்புக்கும் அன்பு செலுத்துதலுக்கும் என ஒரு தினம் உலகளாவிய ரீதியாகக் கிடையாது.

சாதி, கோத்திரம், மதம், கலாசாரம், இனங்கள், உயர்வு, தாழ்வு என உலக சமுதாயம் பல்வேறாக பிரிந்து கிடக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக உலக மாந்தரை அன்பு – நட்பு என்ற நாடா ஒன்றிணைக்க வேண்டும். எல்லா பேதங்களுக்கும் அப்பால் நாம் இப் புவியில் நீடித்திருக்க வேண்டிய மனிதர்கள். அன்பு மட்டுமே நம்மை ஒன்றிணைக்க முடியும்.

1965களின் பின்னர் அமெரிக்காவில் வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து தோன்றிய ஹிப்பி கலாசாரம் பேசியதும் உலகளாவிய அன்பைத்தான். அதை அவர்கள் மது, போதை, கட்டுப்பாடற்ற ஆண் – பெண் உறவு என்று முன்னெடுத்துச் சென்றதால் அவ்வியக்கம் அற்ப ஆயுளில் மரித்துப் போனது.

இன்றைய உலகத் தேவையான அன்பு செலுத்துதல் – பேரன்பு செலுத்துதல் – என்பதை சகல எல்லைகளையும் கடந்ததாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்பதால் காதலர் தினத்துக்கு புதிய வரைவிலக்கணம் செய்யப்பட வேண்டும் என்ற அக்கினிக் குஞ்சை பொந்திடை வைக்கிறோம், ஜெகமெங்கும் இக் கருத்து பரவுவதற்காக!

Comments