கொரோனாவால் வந்த கருணை | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவால் வந்த கருணை

ஜனசந்தடி மிக்க தலைநகரின் புறக்கோட்டைப் பகுதி அது "பீப் பீப், பூம் பூம், கீக் கீக், ஹோய் ஹோய்" என்றவாறு கணத்துக்கு கணம் மாறுபட்டு, வேறுபடும் ஒலி அலைகளின் சங்கமம்! 

தள்ளு வண்டிகளையும், மெதுமெதுவாக நகரும் ஆட்டோக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு எதிரும் புதிருமாக நகரும் பாதசாரிகள்!

சாலையின் இருமருங்கிலும் குரல் எழுப்பியும் கூவிக் கொண்டும் வருவோரைக் கவரும் அங்காடி வியாபாரிகள்! சூரிய ஒளியோடு சேர்ந்து வீதியையும் வியாபாரத்தையும் சூடாக்கிக் கொண்டிருக்கிறது, அந்த சனிக் கிழமை காலை வேளை! 

வாரத்தின் இறுதி நாள் என்ற வகையிலும் 'சொப்பிங்'கு ஏற்ற தினம் என்பதாலும் ஒரே பரபரப்பு வியாபாரத்துக்கு!  

புறக்கோட்டையில் பேர்போன ஒரு குறுக்குத் தெருவில் கம்பீரமாகத் தலை காட்டுவது தான் "ரியல் செரமிக்" குளியலறை உபகரணங்கள் மற்றும் "செரமிக் டைல்ஸ்" என்பன விற்கப்படும் காட்சிக் கூடம்! கடந்த இருபது வருடங்களாக மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் அசுர நடை போட்டு அசத்தும் வியாபார நிறுவனம் அது!  

கடை நுழைவாயிலிலே பலதரப்பட்ட டிசைன்களிலும் வண்ணங்களிலும் வித விதமான டைல்ஸ்கள் விளக்கு ஒளியில் மின்னி வருவோரை பின்னியெடுக்கும் அதிசயம்!

ஊழியர்களோ சளைத்தவர்கள் அல்ல! வரும் வாடிக்கையாளர்களை விடமாட்டார்கள். இது தான் லேடஸ்ட் டிசைன் என்றும் தமது விலைக்கு நிகரில்லை என்றும் வர்ணித்து வருவோரை வசீகரிக்கும் அவர்களின் வல்லமைக்கு நிகர் எங்கே?  

இந்த நிலையத்தின் ஒரே நாயகன், ஆணிவேர் வேறு யாருமல்ல ஹஸன் ஹாஜியார் தான். வயது அறுபத்து ஆறு தலையில் தொப்பி, முகத்தில் கருமையும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் இரண்டரக் கலந்து அளவோடு வெட்டப்பட்ட தாடியுடன் கண்டிப்புடன் கலந்த புன்முறுவல் வேறு இந்த நிலையத்துக்கு வலிமை சேர்க்கிறது.  

சினுங்கிய செல்போனை வருடியவாறே ஹஸன் ஹாஜி ஊழியருக்கு சைகை காட்டுகிறார் பக்கத்தில் அலறும் மற்ற தொலைப்பேசியை கவனிக்கும் படி!  

ஒரு புறம் கல்முனை, கண்டி, காலி பகுதியிலிருந்தும் .... மறுபுறம் மாத்தளை, மருதமுனை, மன்னார் என்றும் வாடிக்கையாளர்கள் விடுகிற பாடில்லை! புது டிசைன்கள், அவசர ஓடர்கள் என்று ஊழியர்களை சுறுசுறுப்பாக்கி பின்னி எடுக்கும், அரை விடுமுறை நாள்!  

‘ஹாஜியார் ' டீ ' என்று உதவியாளர் பக்கத்தில் தேனீரை வைத்தாலும் அவருக்கு எங்கே நேரம் நிம்மதியாக அதைச் சுவைக்க? பிஸினஸ் பிஸி பிஸி! அது என்றோ ஆறிவிட்டது.  

இந்த நேரம் பார்த்துத் தான் வாட்டசாட்டமான வயது முதிர்ச்சியுடன் கூடிய கூட்டமொன்று ஹஸன் ஹாஜியைப் பார்க்க வேண்டுமா? ஆனால் ஹாஜியார் நிதானிக்கிறார். பொறுமையை கைக் கொள்கிறார். பரபரப்புக்கு மத்தியில் என்னவென்று வந்தவர்களை ஏறிட்டுப் பார்க்க! புன்னகைக்கும் கூட்டம்! அதன் தலைவர் அப்துல்லாஹ் ஆசிரியர் பணிவாகப் பேசுகிறார்....  

"ஹாதியார் நாம பக்கத்து பள்ளிவாசலிலிருந்து வருகிறோம். உங்களுக்குத் தெரியும் நம்ம பகுதியில் கஷ்டத்தாலயும் நஷ்டத்தாலயும் நோயாலயும் வாடுற நெறய ஆட்களும் குடும்பங்களும் இருக்காங்க. அவங்க அநேகருக்கு தொழிலோ வருமானமோ இல்ல!

அதனால நாம, பைத்துல் மால் என்ற ஒரு நிரந்தர நிதியத்த தொடங்கி இருக்கோம். ஒங்கள மாதிரி ஹாஜியார் மார் உதவி செஞ்சாங்க! நீங்களும் ஏதாவது உதவி செஞ்சீங்கன்னா இது சமூகத்துக்கு செய்யும் பெரிய உபகாரமா அமையும். அத்துடன் அல்லாஹ்வின் பாதையில் அடியார்களுக்கு செய்ற பெரிய ஒதவியா இது அமையும் என்ற ஒரு அறிமுக பிரசங்கம் செய்தார் அப்துல்லாஹ் ஆசிரியர்!  

ஹஸன் ஹாதிக்கு பிஸினஸ் பரபரப்பில் என்ன செய்வதென்று புரியவில்லை. " நேரங்கெட்ட வேளையில் வந்து என்னை வம்புக்கு இழுக்கிறார்களா? நன்மை செய்வதைப் பற்றி எனக்கு உபதேசம் செய்கிறானே...? ஏன் எனக்கு மார்க்கம் தெரியாதா என்ன? தொழுகிறேன். நோன்பு நோக்கிறேன், ஹஜ் மட்டும் ஐந்துக்கு மேல் செய்துவிட்டேன். உம்றா வேறு பத்துக்கும் மேல்" என்று மனதில் குமுறுகிறார்.

என்றாலும் தேடி வந்தவர்களை ஒன்றும் வருத்தக் கூடாது என்ற எண்ணத்தில் உதவியாளருக்கு ஒரு ஐயாயிரம் கொடுக்கும் படி பணிக்கிறார். எனவே வந்தவர்களும் நிலைமை புரிந்து தொகையைப் பெற்றுக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்கிறார்கள்.  

****** 
ஹஸனின் சொந்த ஊர் கண்டிக்கு அண்மையிலுள்ள ஒரு எழில் மிகு கிராமம். பெரிய படிப்பு என்று இல்லை. வெறும் 8ம் வகுப்புத் தான்! அன்று இருபது வருடங்களுக்கு முன்னர் கண்டியில் அவர் தனது தந்தையின் 'ஹாட் வெயாரில்' உதவிக்கு இருந்து வந்தார். என்றாலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை. எனவே நண்பர்களின் ஆலோசனைப்படி கொழும்புக்கு தொழில் தேடி வந்தார்.  

சொல்வார்களே "கெட்டாலும் பட்டணம் போ" என்று எனவே சிறிது காலத்துக்குப் பின்னர் புறக்கோட்டை வந்து மீண்டும் ஒரு ஹாட் வெயாரில் சேர்ந்தார். அது ஒரு மொத்த விற்பனை நிலையம். இறக்குமதி செய்யப்பட்ட ஆணி, கம்பி, தகடு, பூட்டு என்று தொகையாக வாங்குவதும் விற்பதும் என்ற பலதரப்பட்ட விதங்கள், உரிமையாளர் ஓர் இந்திய வம்சாவளி என்பதால் வியாபார நுணுக்கங்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? 

எனவே, பொறுமையுடன் அவற்றைக் கற்றுக் கொண்டார். காலப் போக்கில் நல்ல ஆர்வம் ஏற்பட ஹஸனுக்கு பொறுப்புக்கள் சுமத்தப்பட்டு கடையின் ஒரு 'நிர்வாகி' என்ற அளவில் மாற்றமடைந்தார். அதே வேளை சிறிது காலத்தின் பின் முதலாளி ஆஸ்துமாவால் அவதிப்பட்டு இறுதி மூச்சை விட நேர்ந்தது. அவர் குடும்பத்துக்கு பெரிய அடி! ஏன்? ஹஸனுக்கு தான்! அதே வேளை, முதலாளியின் புத்திரர் காலப்போக்கில் வியாபாரத்தை பொறுப்பேற்க அவர்களின் போக்கு ஹஸனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எனவே அங்கிருந்து தொழிலுக்கு டாட்டா காட்டி விட்டு வெளியேறிவிட்டார். 

ஹஸன் சிறிது யோசித்தார். தனக்கு வியாபாரத்தில் உள்ள அனுபவத்தை தந்தையிடம் கூறினார். அனுபவம் உண்டு ஆனால் மூலதனம் இல்லை! எனவே ஆலோசித்து விட்டு தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு பரப்பு காணியை விற்று காசாக்கினார். அதன் மூலம் கொழும்பில் ஒரு கடையை சிறிதாக ஆரம்பித்தார். பழகிய வாடிக்கையாளர்களும் சிறிது சிறிதாக ஹஸனின் கடைக்கு நகர ஆரம்பித்தனர். வியாபாரம் வளர்கிறது. அதுதான் இன்று 'ரியல் செரமிக்' என்ற விருட்சமாகியது. அத்துடன் ஹஜ் சென்று ஹாஜியார் ஆகிவிட்டதோடு வியாபாரத்துக்காக அடிக்கடி சீனா செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாயிற்று " சீனம் சென்று பொருள் தேடு" என்று பழமொழியை மாற்றி விட்டார் ஹஸன் ஹாஜி.  

தனது செரமிக் வியாபாரம் சிறிது சிறிதாக முன்னேற, அதே வேளை மறுபுறத்தில் தான் பிள்ளைகளுடன் கொழும்பில் குடியேறினார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும்! அவர் அடிக்கடி சொல்வதுண்டு நான் தான் படிக்கவில்லை. என் பிள்ளைகளாவது படிக்கட்டும் . விஷேடமாக ஆங்கிலம் என்று கூறி தனது மக்களை படிக்க வைத்து வருகிறார். பட்டப்படிப்பு படித்தவர்களும் தனக்கு கீழ் பணியாற்றுகிறார்கள் என்பதை அவர் இடைக்கிடை சொல்வதுண்டு.  
2019 ஆண்டு டிசம்பர் மாதம்

ஹஸன் ஹாஜியின் அலைபேசி அலறுகிறது.

மறுமுனையில் பிரபல உம்ரா முகவர் அரூஸ் ஹாஜியார் அழைக்கிறார். "அஸ்ஸலாமு அலைக்கம் ஹாஜி, என்ன இந்த முற எங்கள மறந்திட்டீங்க போல, உம்றாவுக்கு நல்ல ஒரு "ஒபர்’' வந்திருக்கு, மதீனாவுல பைவ் ஸ்டார் ஹோட்டல் தான்! நீங்க வழமையா 'பெமிலி பெக்' என்ற படியால ஆளுக்கு ஒண்டு போடுறன்! எல்லா செலவோடயும் 10 ல (பத்து லட்சம்) முடிச்சிடலாம்" என்று தொடர்ந்தார் அரூஸ் ஹாஜி! 

இதுவரை ஹஜ்ஜு ஐந்துக்கு மேல் தனியாக, மனைவியோடு, பிள்ளைகளோடு என்று முடித்து, தற்போது பேரப் பிள்ளைகளோடு போகவுள்ளார். எனவே இது விடயத்தில் இனி பேரம் பேசுவதற்கில்லை என்று எண்ணிய ஹஸன் ஹாஜி அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.  

மாதம் இரண்டு உருண்டோடுகிறது. சீனாவிலிருந்து வித வித டிசைன்களில் பிந்திய லேடஸ்ட் டைல்கள் இன்னும் 'ஓடர்' செய்யப்படுகிறது. அதற்காக வங்கி மூலம் கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு இறக்குமதி செய்ய பணம் LC மூலம் அனுப்பப்பட்டாயிற்று.  

இதேவேளை ஷங்காயிலுள்ள சங்காய் ஜியோடொங் சர்வகலாசாலையில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் மகள் ரஸீனா தான் விடுமுறைக்கு வீடு வரவேண்டிய விடயத்தை தந்தையான ஹஸன் ஹாஜிக்கு அறிவிக்கிறார்.
மகளை சொந்த நாட்டுக்கு வரவழைப்பதற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகின்றன. வாரங்கள் சில நகர்கின்றன. அந்த நேரம் பாத்துத்தான் அந்தப் பேரிடியான செய்தி வர வேண்டுமா? இங்கு சீனாவில் வுஹான் மாகாணத்தில் புது வித வைரஸ் நோய் ஒன்று தொற்றி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி மொத்த சீனாவையும் ஆட்டங்காண வைத்தது என்ற செய்தி இடியாய் ஒலிக்கிறது. ஹஸன் ஹாஜி ஆடிப்போய் விட்டார்.  

பனையால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாய் நாளடைவில் சீனா மட்டுமல்ல பல நாடுகளுக்கும் 'கொரோனா' என்ற கொடிய வைரஸ் பரவி முடங்கிவிட்டிருந்தது. அன்றாட வாழ்வு ஸ்தம்பிதம், போக்குவரத்து இல்லை, தொழில் இல்லை, பணம் இருந்தும் பண்டங்கள் இல்லையென்ற எதிர்மறையான விளைவுகளும் நிகழ்வுகளும் நீண்டு கொண்டே செல்கின்றன.  

ஹஸன் ஹாஜியாருக்கு இடியோசை கேட்ட நாகத்தின் நிலை அடி வயிறு பற்றி எரிகிறது. முதலில் உயிரைப் பாதுகாக்க முன்னுரிமை, சுகாதார வழிமுறை, வெளியில் நடமாட கட்டுப்பாடு, ஊரடங்கு என்று மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடக்கம்!  

இந் நேரம் பார்த்து வருகிறார் அவர் பள்ளித் தோழன் உவைஸ்!” "என்ன மச்சான் ஹஸன் பலத்த யோசனை? " என்று ஹஸன் ஹாஜியாரின் சிந்தனையை கலைக்கிறார். பழைய நண்பன் உவைஸ் ஒரு இளைப்பாறிய ஆசிரியர்.  

உவைஸ் ஹாஜியார் ஹஸன் ஹாஜியாரின் முகத்தில் சோக ரேகைகள் படர்ந்திருப்பதை அவதானிக்கிறார். ஹஸன் ஹாஜியே ஆரம்பிக்கிறார் பாரு மச்சான் நம்ம நிலைமைய? இந்த சின்ன வைரஸ் செய்த வேலய எண்ட பிஸினஸ் போட்ட பணம்? நம்ம மகள் அங்க படுற அவதி... எனக்கு என்ன செய்றதெண்டு தெரியல்ல.. நான் என்ன மார்க்கம் இல்லாமலா இருக்கேன்...? தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்ஜு, உம்றா என்று செய்ய வில்லையா...? ஆனாலும் சோதனை மேல் சோதனையாகுதே" என்று அங்கலாய்கிறார்.  

பதிலுக்கு ஆசிரியர் உவைஸ் தொடர்கிறார்.

"மச்சான் கவலை படாதே, இந்த சோதனை உனக்கு மட்டுமா, முழு உலகுக்கும் தானே...! வசதியுள்ள உனக்கே இப்படியென்னா .. அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் மக்கள்ட நிலைமைய யோசித்தாயா...? படுகிற அவதியை... அவங்களுக்கு தொழில் இல்ல! வருமானமும் இல்ல... இனியெங்க சாப்பாடோ.. மற்றத் தேவையோ.. நீ நன்மை செய்திருக்கிறாய் இல்லெண்டு சொல்ல இல்ல! மனுஷன் ஒரு சமூகப் பிராணி. மற்றவர்ட சுக துக்கங்களுலேயும் நம்ம பங்கெடுக்கணும்.
அவங்களுக்கு ஒதவணும், அப்பதான் நம்மட கடம பூர்த்தியாகுது. கடமயான ஹஜ்ஜுக்கு பிறகு ஏனையவருக்கு ஒதவுறது போல உயர்ந்த விஷயம் ஒரு முஸ்லிமுக்கு இல்ல... அதனால நம்மட நன்மையப் பத்தி நாமே திருப்திப் படாம ஏனைய சகோதரர்கள் கிட்டேயும் நாம்ம கேட்டுப் பார்க்கணும் என்ன...? நம்மட முதுக நம்மளே பார்க் முடியாது தானே? என்று தத்துவம் கலந்த ஒரு குட்டிப் பிரசங்கத்தைச் செய்து முடித்தார் உவைஸ் ஹாஜியார் 

சில வாரங்களுக்குப் பிறகு...

அப்துல்லாஹ் ஆசிரியரிடமிருந்து தனக்கு வந்த அழைப்பை பிரிக்கிற போது "பைத்துல் மால் நிதியம்" "அங்குரார்ப்பண விழா ... 24 ம் திகதி ஞாயிறு அன்று அரபா மத்திய கல்லூரியில்,.." என்று தொடங்கிய அந்த அழைப்பிதழ்...  

ஞாயிறு அன்று... விடுமுறை நாள்! இன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. ஹஸன் ஹாஜிக்கு இரண்டு மனம் சோம்பல், விழாவுக்கு போவதா இல்லையா...? போனால் சில பிரபலங்களை காணலாம்! பேசலாம்! அழைப்பை அவமதிப்பதும் சரியில்லை என்ற குறுகுறுப்பு வேறு! ஈற்றில் முடிவெடுக்கிறார் விழாவுக்கு போவதென்று. அரபா வித்தியாலயம் விழாக் கோலம் பூண்டு களை கட்டுகிறது. "பைத்துல் மால்... நிதியம் இடர்படுவோரின் துன்பத்தை நீக்க உதவுவோம்...!” என்ற ஒலி பெருக்கி ஓசை எதிரொலிக்கிறது. 

திரண்ட அரங்கத்திலேயே ஒதுக்கப்பட்ட விஷேட ஆசனத்தில் அமரும் படி பணிக்கப்படுகிறார் ஹஸன் ஹாஜி...! நிதியத்தின் தலைவர் அப்துல்லாஹ் ஆசிரியர் நோக்கத்தை விளக்குகிறார். "இன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். மிகவும் நெருக்கடியான காலகட்டமிது.  

'கொரோனா' என்ற கொடிய நோய் வேறுபாடின்றி எமது நாட்டை மட்டுமல்ல முழு உலகையும் தாக்கியுள்ளது. அன்றாட வாழ்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் பலர் வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே. அதே போல் ஏனைய சகோதரர்களுக்கும் உதவ வேண்டிய கடப்பாடு நமக்கும் உள்ளது.  

அதே வேளை “ஒரு மனிதனை வாழ வைத்தவன் முழு சமூகத்தையும் வாழ வைத்ததற்கு ஒப்பாவான்” என்று திருக் குர்ஆன் போதனை செய்கிறது. எனவே துன்பப்பட்டவர்களுடன் இணைந்து அவர்களின் இடரில் பங்கு பெறுவோம்.... உதவிக் கரம் நீட்டுவோம். வசதி படைத்த நல்லுள்ளங்களுடன் சேர்ந்து இதற்கு தாராளமாக உதவுவோம்...” என்ற நீண்ட உரை காற்றலைகளில் தவழ்ந்து ஹஸன் ஹாஜியின் காதில் ரீங்காரமிடுகிறது...  

அவர் சிந்தனை ஓட்டம் வட்டமிடுகிறது. "ஆம் நான் இதுவரை செய்ததெல்லாம் அமல் தானா.. அல்லாஹ்வுக்காக இல்லை, ஆட்களின் புகழுக்காகவா, வெறும் பாராட்டுக்காகவா? இடர்கிறது மனசாட்சி!  

அடுத்த நிகழ்வில் ஒவ்வொருவராக முன்வந்து இந் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்பவர்கள் சபையிலே தத்தமது பெயர்களை வழங்குகிறார்கள்! ஹஸன் ஹாஜியாரின் முறை வருகிறது. தான் ஆரம்பிக்கப் போகும் 'பைத்துல் மால்' நிதியத்திற்கு ரூபா ஐம்பது இலட்சம் வழங்குவதாக உறுதியளிக்கிறார்.  

"அல்லாஹு அக்பர்... அல்ஹம்துலில்லாஹ்' ' என்ற கோசங்கள் அரங்கை அதிர வைக்கின்றன. "அன்று ரூபா ஐந்தாயிரம் ஏனோ தானோ என்ற நிலையில் அன்பளிப்புச் செய்தவரா.. இன்று ஆயிரம் மடங்குகளாக நன்கொடையளித்தது?" அப்துல்லாஹ் ஆசிரியர் யோசிக்கிறார். அரங்கமே அதிர, ஹஸன் ஹாஜி வாழ்த்தையும் பாராட்டையும் பெறுகிறார்.  

அப்துல்லாஹ் ஆசிரியர் தொடர்கிறார்.

"இன்றிலிருந்து இந்த நிதியத்துக்கு ஒரு இலட்சத்துக்கு மேல் நன்கொடை செய்வோர் இதன் பங்குதாரர்கள் மட்டுமல்ல நம்பிக்கை பொறுப்பாளர்களும் கூட! எனவே உதவிக்குத் தகுதியானவர்கள் முறையாக இனங்காணப்பட்டு தகுந்த உதவி, ஆலோசனை வழங்கப்படும். எமது சமூகத்தின் ஓர் அங்கம் அனைவரும் என்பதற்கு இதுவே ஓர் அத்தாட்சி...' என்று தொடர்ந்த தலைவரின் பிரசங்கத்திற்குப் பின் கூட்டம் கலைகிறது! மக்கள் தெளிவு பெறுகிறார்கள். நிம்மதிப் பெருமூச்சு!  

ஹஸன் ஹாஜியார் அரங்கத்திலிருந்து வெளியே வருகிறார் ஆரத்தழுவப்பட்ட பின்னர்! மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் இப்போது தெளிவாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்கிறது, அறியாமை எனும் இருள் விலகிய அவரின் மனதைப் போல! 

ஜே.எம்.சித்திக்
 

Comments