கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

கடந்த 28-.01.-2021 பௌர்ணமி பூரணைச் சந்திர ஒளியில் சங்கமமாகிவிட்ட வாழ்நாள் சாதனையாளர், தேசத்தின் கண் ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா அண்ணர் இழப்பில் இரண்டு மூன்று கசப்புகளை வழங்கியே ஆக வேண்டியுள்ளது.

அதிமுக்கியமான முதலாவது: அன்னவருக்கும் கிருமி ஆக்கிரமிப்பு என உறுதிப்படுத்தப்பட்டு ஒன்றரை நாள் பொழுதில் 30.-01.-2021 சனிக்கிழமை பிற்பகல் அக்னி தேவதை அரவணைப்பில் அஸ்தியாகிப் போனார்.

இதனால், அரசின் கலா மண்டபப் பொது அஞ்சலி, இரங்கல் நிகழ்வுகள், இறுதிக் கிரியைகள் எதுவுமே சிறப்புறச் செய்திட இயலாது போனமை கலை,- இலக்கியத்துறையினருக்கும், நன்றிக்கடன் பட்டிருக்கும் என்போன்ற சாமானியனுக்கும் ஏற்பட்டுப் போனது.

நான் என்னை நுழைத்துக் கொள்ளக்காரணம், காலமெல்லாம் பேசப்படப் போகிற அவரது ‘வாடா மல்லிகை’ இலக்கிய சஞ்சிகை, 2010, செப்டெம்பர் இதழில் அட்டைப்படமாக என் உருவம் போட்டு இட்டிருந்த தலைப்பு , “எல்லோரிடமும் நட்பாகப் பழகும் நம்ம மானா.”

நல்லது, இதோ, இரண்டாவது கசப்பு:

தமிழகப் புகழுக்குரிய கவிஞர் “அறிவுமதி” என்பார் உடனடியாகவே ஓர் அஞ்சலிக் கவிதையை நம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தது. நல்ல முன்மாதிரி. தமிழ் நாட்டவரும் துயரில் பங்கெடுத்துக்கொண்டது சிறப்பு. அங்கு 30-.01- சனிக்கிழமை நடந்து கொண்டிருந்த ஒரு திருக்குறள் மாநாட்டிலும் உடன் அஞ்சலி.

எவ்வாறாயினும், கவிஞர் அறிவுமதி தன் இரங்கற்பாவுக்கு இட்டிருந்த தலைப்பே கசப்பு.

“டொமினிக் சீவா” -என்று போட்டிருந்தார்.

அதென்ன ‘சீவா’?

தமிழக விஜய பாஸ்கரனின் ‘சரஸ்வதி’ இலக்கிய சஞ்சிகையில் தடம்பதித்த அந்த ஆரம்பகாலந் தொட்டு, ‘டொமினிக் ஜீவா’ வாகவே வலம் வர ஆரம்பித்து இறுதிக்காலம் வரை “ஜீவா” என்ற இலக்கிய மாமனிதராகவே திகழ்ந்தவர் அவர்.

‘சீவன்’ போன மறுகணம் சீவா வா? சுத்தத்தமிழ் சீர்த்திருத்தமா?

அந்த அறிவுமதியார், தமிழ்ப் புலமையாளராகவோ, தனித்தமிழ்க்காரராகவோ, வடபுல ‘ஜ’‘ஜி’‘ஜீ’ யை ஒதுக்குபவராகவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்காக ஒருவரது மறைவில் அவரது புகழ்பெற்ற பெயரை மாற்றுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.

வேண்டுமானால், இலக்கிய உலகில் சஞ்சரிக்கும் காலத்தில், அவர் அனுமதியுடனோ, அனுமதியில்லாமலோ ‘சீவா’ என்றழைத்துப் பா வடித்திருக்கலாம்.

துக்கமான, துயரமான நேரத்திலும் அழுதவண்ணம், சிரித்துத் தொலைக்க வேண்டியுள்ளதே! அபிமானிகளின் பார்வைக்கு அந்த 'டொமினிக் சீவா"! வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தட்டுக்கெட்ட தலைப்பை அவதானித்துத் திருத்த அவகாசமில்லாமல் அவசரக் கோலத்தில், நம் நாட்டு ஞாயிறு வார ஏடொன்று, தன் 08ம் பக்கத்தில் அப்படியே பிரசுரித்துவிட, சிலரது முகநூல் பக்கங்களிலும் வந்தது.

அதைக் கண்ணுற்ற வடபுல கவிமாமணி “மகாகவி” ருத்திரமூர்த்தியின் புத்திரர், “சேரன்” அலைகடலுக்கப்பாலிருந்து எழும்பிய ’சுனாமி’ ஓசை நியாயமான ஓசை.

ஆனால் மற்றொரு ஞாயிறுவார இதழ், தன் 02ம் தொகுதி செய்திப்பக்கம் 04லில் “சீவா” வை நீக்கி “ஜீவா” என்றே தலைப்பில் பிரசுரித்தது.

நல்லவேளையாக, நம் ‘வாரமஞ்சரி’ இதழுக்குச் சரியான நேரத்தில் கவிதை கிடைக்காததால் எதுவும் பிரசுரிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் மிக மிகப் புகழுக்குரிய ஓர் இலக்கிய ஜாம்பவானின் பெயரை அவர் மறந்த மறுகணமே “சீவா” என ஒரு தமிழ்க்கவிஞர் மாற்றுவது ஜீரணிக்க இயலாதது. தான்தோன்றித்தனமானது.

இனி, 03வது கசப்பையும் கவனிப்போம்.

இது, பிரபல ஊடகவியலாளர் மேனாள் ‘தினக்குரல்’ பொறுப்பாசிரியர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் தன் முகநூலில் பக்க நினைவஞ்சலிப் பதிவிலிருந்து.

அவர் ஒரு பழைய கசப்பான நிகழ்வை மீட்டியிருக்கிறார். ஜீவா அன்னர் 80ஆம் அகவை பிறந்த நாளையொட்டிய ஒரு வாழ்த்துத் தலையங்கம் வழங்கினாராம். ஓரிடத்தில், ‘யாழ். கஸ்தூரியார் வீதியில் ஜோசப் சலுான் நடத்திய ஒரு சிகையலங்கார நிபுணர், எழுத்துலக ஜாம்பவான் ஆனார்’ எனக் குறிப்பிட, “சலூன்காரர்களுக்கெல்லாம் தலையங்கம் எழுத என் பேப்பர் தானா கிடைத்தது?” எனச் சினந்தாராம் நிறுவனர்.

சட்டென்று 14 ஆண்டுகளுக்கு முன் (2007) வெளியான “தீண்டத்தகாதவன்” கதைத் தொகுப்பே எனக்கு நினைவில்! ‘வடபுலத்தின் பதினொரு தீண்டத்தகாத’ எழுத்தாளப் பேர்வழிகள் நெஞ்சைச் சுட்டெரிக்கும் யதார்த்த கதைகள் படைத்திருப்பார்கள் சாதி உணர்வுகள் நீங்காமல் இருக்கும் ஒரு சாபக்கேட்டை விதவிதமாக விவரித்திருப்பார்கள்.

ஆக, அருமை ஜீவா அண்ணரின் அக்கினிப் பிரவேசத்தில் சாதி மேலாதிக்கமும் சட்டைகளை மாற்றி வெற்றுடம்பாக தீக்குளித்து விட்டதென்று கொள்ளலாமா? கொள்வோம்.

இனிப்பு

காக்கைக் கூட்டங்களை ரொம்ப லேசாக நினைத்துவிடக் கூடாதென்பதைக் கடந்தவார இனிப்பாகத் தந்தேன்.

அதற்காக, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறபு நாட்டில் நடந்த வரலாற்றுண்மையொன்று ‘அல்-குர்ஆன்’ என்கிற முஸ்லிம் திருமறையில் பதியப்பட்டிருப்பதையும் வழங்கினேன்.

நம்ம இளைய தலைமுறைகளுக்கு நாம் கட்டாயம் சொல்ல வேண்டும் என்ற நப்பாசையில் செய்தேன்.

இவற்றை ஒரு சாமான்யனின் பேனா முனையே பத்தி எழுத்தாகப் பதிய வேண்டியிருக்கிறது. ஆசிரிய மாமணிகள்- முக்கியமாக மார்க்க அறிவு புகட்டுவோர், காகமா, புறாவா, ஆடா, மாடா, ஒட்டகமா, குதிரையா என்று யோசிப்பதிலேயே வாதப்பிரதிவாதத்திலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். போகட்டும்.....

கடந்த வாரத்தில் வாக்குறுதி அளித்தபடி இந்த 21ஆம் நுற்றாண்டிலும் காகங்களின் சேவை மனுக்குலத்துக்குக் கிடைக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றேன்.

நெதர்லாந்து என்ற ஒரு நாடு. (எங்கே உள்ளது என்பதை வரைபடம் பார்த்துத் தெரிக!) நாம் கீழ்நாடுகளில் குப்பைக் கூளப் பிரச்சினைகள் இருப்பது போல அங்கே சிகரெட் துண்டுப் பிரச்சினை!

நெதர்லாந்து ரெயில் நிலையங்களில் மட்டும் அன்றாடம் புகைத்து வீசும் சிகரெட் துண்டுகளை அகற்றுவது சாமான்ய சமாசாரம் அல்லவாம்!

‘புறாக்களுக்குப் பயிற்சியளித்துப் பார்த்தார்கள். ஊஹூம்! காகங்கள் கைகொடுக்கும் என்று முழுசாக நம்பினார்கள். வெற்றி!

"காகங்கள் புத்திசாலிகளாக இருக்கின்றன.

சுற்றுப்புறத்தை உற்றுநோக்குகின்றன. எளிதாக மனிதர்களிடம் நெருங்குகின்றன. அதனால் காகங்களை வைத்து மனிதர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

“சில காகங்களுக்கு சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, எங்கள் கருவியில் போடும்படி பயிற்சியளித்தோம். சரியாக அந்தக் கருவியில் சிகரெட் துண்டுகளைப் போட்டன, கருவியிலிருந்து வேர்க்கடலைகள் வெளிவரும். அதைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த சிகரெட் துண்டைத் தேடிப்பறக்க ஆரம்பித்து விடும். இப்படிக் கடலைகளைச் சாப்பிடுவதற்காக சிகரெட் துண்டுகளைத் தேடித் தேடி எடுத்து வருகின்றன.

நாங்கள் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக வேலை செய்கின்றன” என்கிறார் ரூபென் என்ற நகர சுத்திகரிப்பு உயர் அதிகாரி.

இன்றையப்  பொழுதில் சிகரெட் மூலம் சுற்றுச்சூழல் படுபயங்கரமாகப் பாதிக்கப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் உலக நாடுகள் பலவற்றில் ஆறுஇலட்சம் கோடி சிகரெட்களை மனித இனம் ஊதி ஊதித் தள்ளுகின்றது. நெதர்லாந்தில் துண்டுகளைப் பொறுக்கி காகங்கள் பரிகாரம் செய்கின்றன!

நம் முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியையே இன்றும் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். அவன் தீர்க்கதரிசி” காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடிப்பறந்து விட்டான் பறந்து.

Comments