அணில்கள் | தினகரன் வாரமஞ்சரி

அணில்கள்

அணில்கள் கொரித்து உண்ணும் வகையைச் சேர்ந்தவையாகும். உலகெங்கிலும் 250 வகையான அணில்கள் உள்ளன. அவுஸ்ரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை .

மர அணில், தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவை வாழ்ந்துள்ள படிமங்கள் கிடைத்துள்ளன.

இப்படிமங்கள் தற்போது வாழ்ந்து வரும் பறக்கும் அணிலை போல் தோற்றம் கொண்டதாக உள்ளது. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 07 தொடக்கம் 10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. அணில்களின் உடல் மிக மிருதுவாகவும், அடர்த்தியான வாலும், பெரிய உருண்டைக் கண்களும் கொண்டவை. இவ்வமைப்பே பிற கொரிக்கும் இன வகைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது. சூழ்நிலைக்கும், பருவகால மாறுதலுக்கும் உட்பட்டு, இவற்றின் நிற அமைப்பு மாறுபடும். இவற்றின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வாழ்வியலுக்குத் தக்கவாறு உறுதுணையாக உள்ளன. முன்னங்கால்கள், பின்னங்கால்களை விட குட்டையாக இருக்கும். அதனால் பின்னங்கால்களை 'ஸ்டாண்ட்' போல் உபயோகித்து, தன் உடல் முழுதும் அதன் மேல் உட்காரும்படி உபயோகிக்கிறது. கால்களில் 4 அல்லது 5 விரல்கள் உண்டு. முன்னங்காலில் கட்டைவிரல் அமைப்பும் உண்டு. இதை உபயோகித்து, உணவை உண்ணவும், மரக்கிளைகளில் ஏறவும், தாவும்போது நழுவாமல் பிடித்துக் கொள்ளவும் செய்கிறது.

இதன் பாதங்கள் மிக மிருதுவாக இருப்பினும், வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் திறன் கொண்டவை. மிகக்கூர்மையான பார்வையும், தொடுதல் உணர்ச்சியும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.

கொரிப்பதற்கு ஏற்ப அமைந்த இதன் முன் பற்கள் வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

நளீம் லதீப்
சாய்ந்தமருது 11.

Comments