நடிகை தான்யா | தினகரன் வாரமஞ்சரி

நடிகை தான்யா

“மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் தமிழ் பட உலகில், ‘வெள்ளி விழா நாயகன்’ என்று பெருமையுடன் பேசப்பட்டவர். அவருக்கு இருந்த கலை ஆர்வம் எனக்கும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை” என்கிறார், நடிகை தான்யா. நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், பிருந்தாவனம், பலேபாண்டியா, கருப்பன் ஆகிய படங்களின் கதாநாயகி.

“சின்ன பெண்ணாக இருந்தபோதே எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ‘முதலில் படிப்பை முடி. அப்புறம் நடிக்கலாம்’ என்று அப்பாவும், அம்மாவும் கூறிவிட்டார்கள். அதனால் படிப்பில் கவனம் செலுத்தினேன். சென்னையில் படித்துவிட்டு அமெரிக்காவில், மேற்படிப்பை முடித்தேன். சென்னை திரும்பியதுமே ‘பிருந்தாவனம்’ படத்துக்காக டைரக்டர் ராதாமோகன் நடத்திய ‘ஆடிசனில்’ கலந்து கொண்டேன். அதில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டேன்.

3 படங்களில் நடித்து முடித்து விட்டேன். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்களே, ஏன்? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இல்லை. நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. கதையும், என் கதாபாத்திரமும் எனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். தாத்தா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை மணி எப்போதுமே எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தாத்தா உயிரோடு இருந்தபோது நான் நடிக்க வரவில்லை. அவர் இருந்தால் என்னை பாராட்டியிருப்பார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தாத்தாவை நான், ‘மிஸ்’ பண்ணி விட்டேன்.

எல்லா கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மூன்று தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பேய் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் பிரபலமாகி விடுகிறார்கள் என்கிறார்கள். அது ஒரு நம்பிக்கைதான். நான் இருட்டு என்றாலே பயப்படுவேன். பேய் என்றால் இன்னும் அதிக பயம்.

பட வாய்ப்புகளை பெறுவதற்காக இணக்கமாக இருக்க வேண்டும் என்றும், அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் பேசப்படுவதில், எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. நான் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் மற்றும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எந்த வகையிலும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

சினிமா தியேட்டரா, இணையதளமா? என்ற பிரச்சினை தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டருக்குப்போய் படம் பார்ப்பதில் உள்ள திருப்தி, வீட்டில் உட்கார்ந்து பார்ப்பதில் கிடைக்காது. கொரோனா பாதிப்பு முழுமையாக விலக வேண்டும்... எல்லோரும் தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்க வேண்டும்’’ என்கிறார், தான்யா.

Comments