சூடு பிடித்துவரும் தமிழக தேர்தல் அரசியல்; சின்னம்மாவின் அரசியல் பிரவேசத்தால் கலகலத்து போயுள்ள அ.தி.மு.க கூடாரம்! | தினகரன் வாரமஞ்சரி

சூடு பிடித்துவரும் தமிழக தேர்தல் அரசியல்; சின்னம்மாவின் அரசியல் பிரவேசத்தால் கலகலத்து போயுள்ள அ.தி.மு.க கூடாரம்!

இன்னும் மூன்று மாதங்களில் தமிழக சட்ட சபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இது ஒரு நாட்டுக்கான தேர்தல் அல்ல என்றாலும் கூட தமிழர்களுக்கென ஒரு தனி நாடு இல்லை என்ற யதார்த்தத்தின் பின்னணியில் தமிழக மாநிலத்தில் நடைபெறுகின்ற சட்ட சபைத் தேர்தல், உலகெங்கும் வாழும் தமிழர்களினால் ஒரு தனி நாட்டில் நடைபெறும் தேர்தலைப் போல முக்கியத்துவம் அளித்து அவதானிக்கப்படுகிறது என்பதே உண்மை.

இத் தேர்தல் ஏப்ரல் கடைசியில் அல்லது மே முற்பகுதியில் நடைபெறக் கூடும். எனவே அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தமது பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளன. இக் கட்சிகள் தமக்கென ஊடகங்களை வைத்துள்ளதால் ஏட்டிக்கு போட்டியாக நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றன.

பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு தி.மு.கவுக்குக் கிட்டலாம் என்பது பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்ற போதிலும் அ.தி.மு.கவும் சளைத்ததல்ல என்பதையும் எடப்பாடியார் தமது வியூகங்களை சிறப்பாக வகுத்துவருகிறார் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். எனவே தற்போதைய நிலவரப்படி தி.மு.க வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு உள்ள போதிலும் அந்த வெற்றி மடியில் வந்து விழும் கனியாக இருக்கப்போவதில்லை. நிச்சயமாக அ.தி.மு.க படுதோல்வி அடையும் என்று ஆருடம் சொல்வதற்கில்லை.

இந்த நிலையில் தான் சிறையில் காலம் கழிந்த சசிகலா தேர்தல் களத்துக்கு வந்துள்ளார். இந்த வாரம் அவர் சென்னை வந்ததும் ‘திராவிட தேர்தல்’களம் சூடு பிடிக்கப் போகிறது.

1967ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்துகாங்கிரஸ் ஆட்சியை அகற்றவே முடியாது என்றிருந்த ஒரு உறுதியான நம்பிக்கையை அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. தகர்த்து எறிந்து தி.மு.க. ஆட்சியை அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் நிறுவியது. அதன் பின்னர் தமிழகத்தை இன்று வரை மாறிமாறி ஆட்சிசெய்து வருவது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தான். இதைத் தமிழகத்தில் திராவிட ஆட்சி என்றோ அல்லது கழக ஆட்சி என்றோ நாம் அழைக்கலாம். தமிழகத்தில் காலூன்ற காங்கிரஸ் எவ்வளவோ முயன்றாலும் அது இன்று வரை சாத்தியப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஆசனங்களை பிடிக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கழகத்தின் முதுகில் ஏறிசவாரி செய்தால்தான் உண்டு என்பதே யதார்த்தமாகி இருக்கிறது. காங்கிரஸ் தமிழகத்தில் காலூன்ற பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அதே சமயம், தமிழகத்தில் காலூன்றி ஒரு சாதனையே படைக்கவேண்டும் என்ற உறுதியான இலக்கில் தமிழகத்தில் காய் நகர்த்தி வருகிறது பாரதிய ஜனதாகட்சி. ஒருதேசிய ஜனநாயக் கட்சி இந்திய மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சிஅமைக்க வேண்டும் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால், தமிழகத்தில் ஆட்சி அமைத்தேயாக வேண்டும் என்ற இலக்கு அக்கட்சிக்கு விசேஷமானது.

பா.ஜ.க ஏனைய இந்திய கட்சிகளைவிட வித்தியாசமானது. அது ஒரு இந்துத்துவ கட்சி. ஒரு வலதுசாரி கட்சி. சுருக்கமாகச் சொன்னால் இந்து முதலாளித்துவக் கட்சி. அக்கட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். என நாம் அழைக்கும் ராஷ்ட்ரியசுயம் சேவக்சங் என்ற இந்து தீவிரவாத அமைப்பு. மகாத்மாஜி கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் கட்சி. இந்து பழைமைவாதத்தைப் போற்றும் கட்சி என்பதோடு தமிழை மூத்த மொழி, சுயமாக இயங்கக் கூடியமொழி என்பதை அது ஏற்பதில்லை.

இந்தியாவின் ஒரேமதம் இந்தமதம். ஒரே மொழி சமஸ்கிருதம் என்று பகிரங்கமாகவே ஆர்.எஸ்.எஸ். தலைமை சொல்கிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்பு அது. வர்ணபேதங்களை வலியுறுத்தும், பிராமணியத்தை முதன்மைப்படுத்தும் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் தமிழகம் திராவிட மண் என்பதையோ, இது பகுத்தறிவு பேசும் பெரியாரின் மண் என்பதையோ பா.ஜ.க. ஒப்புக் கொள்வதில்லை.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் முன்னர் அரசியல் கூட்டுவைத்துக் கொண்டிருந்தது உண்மையானாலும் 2016 இல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது மோடியவர்களின் புதுடில்லி அழுத்தங்களுக்கு அவர் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் அவரது மரணத்தின் பின்னர் அ.தி.மு.க. விற்குள் ஏற்பட்ட இழுபறி நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க., எடப்பாடி – பன்னீர் செல்வம் அரசை தன் கைக்குள் வைத்திருக்கத் தொடங்கியது. ஆ.தி.மு.க. அரசுக்கு எதிராக தி.மு.க. எடுத்து நடவடிக்கைகளை புஸ்வாணமாக்கி எடப்பாடி அரசை இன்று வரை காப்பாற்றிவரும் பா.ஜ.க, இன்று அ.தி.மு.க. ஏற்படுத்தி இருக்கும் தேர்தல் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க. கீழ் மட்டத் தலைவர்கள் விருப்பத்துக்கு மாறாகவே அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. வின் வாக்குவங்கியைப் பயன்படுத்தி ஒரு நான்கு உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பிவிடவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது என்பது அசாதாரண செயல் என்பது உண்மையானாலும் பல்முனை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக தமிழக வாக்காளர்களின் மனதை வெல்ல முடியும் என்பதுபா.ஜ.க. வகுத்திருக்கும் திட்டமாகும். தமிழகத்தின் திராவிடக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றுவது என்பது 25 – 30 வருடகால கொள்கையாக அது வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இந்த எழுச்சியை, பக்திமார்க்க வெறியை தூண்டிவிடுவதன் மூலமும், உயர்சாதி பிரிவுகளை ஒன்றிணைப்பதன் மூலமும் இதை சாதிக்கமுடியும் என பா.ஜ.க. நம்புகிறது.
பா.ஜ.க. வின் இந்த வியூகங்களை அ.தி.மு.க. பிரமுகர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சூழ்நிலையின் கைதிகளாக உள்ளனர்.

ஏனெனில் ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து கைதாகி தண்டனை அனுபவித்துவரும் ஏழு கைதிகளையும் விடுதலை செய்யும்படி ஜெயலலிதாவின் தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய ஏகமானதான தீர்மானத்தின் மீது தமிழகக் கவர்னர் திடீரென நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த எழுவரையும் விடுதலை செய்யும்படி கோரி தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை கவர்னர் நிராகரித்துள்ளார். சட்ட சபையில் முதல்வர் எடப்பாடியார் இப் பிரேரணை மீது கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என பேசிய அன்றைய தினமே கவர்னரின் முடிவு வெளியானது அ.தி.மு.க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது இப்படி இருக்க, நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டு தற்போது பொங்களுரு பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலா, தமிழகம் வந்துஅரசியலில் ஈடுபடவுள்ளார் என்ற தகவல் அ.தி.மு.க. தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடியாரின் கவலை, தமிழகத் தேர்தலில் சசிகலா தனிக் கட்சியாகப் போட்டியிட்டு ஆட்சிபீடமேறி விடுவார் என்பது அல்ல. அ.தி.மு.க. வின் தலைமையைக் கைப்பற்றிவிடுவார் என்பதுமல்ல. டெல்லி பா.ஜ.க. அரசு சசிகலாவை தமக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பதும் அல்லது சசிகலா அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் அ.தி.மு.க. தலைமை மீது மென்மேலும் அழுத்தங்களை பிரயோகித்து அதன் மூலம் போட்டியிடுவதற்கு அதிகதொகுதிகளை அ.தி.மு.க. விடமிருந்து பெற்றுக் கொள்ள பா.ஜ.க. முயலக கூடும் என்பதுமே அ.தி.மு.க. தலைமையின் கவலை. எடப்பாடியின் தலைமைக்கு சசிகலாவைவிட பா.ஜ.க. அதிக குடைச்சலைக் கொடுக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இத்தகைய பின்னணியில் கோட்டையை பிடிக்க வியூகங்களை வகுத்துவருகிறது தி.மு.க. அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வயதாகி வருகிறது. அவருக்கு கோட்டையைப் பிடிப்பதற்கான ஆகச் சிறந்த தருணம் இதுதான். அ.தி.மு.க. வின் ஊழல்கள் ஒருபுறம் என்றால், அ.தி.மு.க. வைப் பயன்படுத்தி தமிழகத்தில் திராவிட சிந்தனைக்குப் பதிலாக இந்துத்துவாவைத் திணிக்க முனையும் பா.ஜ.க.வின் திட்டத்தை அம்பலப்படுத்துவதன் மூலம் வாக்குகளை சேகரிக்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு உண்டு. ஏற்கனவே எடப்பாடியார் தமிழக அரசின் சாதனைகளை டி.வி. விளம்பரங்களாக பட்டியல் போட ஆரம்பித்துவிட்டார். தி.மு.க.வும் சரியாகவே காய்களை நகர்த்திவருகிறது. ஸ்டாலினும் தன் கேச அலங்காரத்தை மாற்றி, அது‘விக்’காகவும் இருக்கலாம், இளமையானதோற்றத்தில் சமீபகாலமாக உலாவருகிறார்.

தி.மு.கவுக்கு தமிழக அரசியலில் பா.ஜ.க. ஒரு பொருட்டே கிடையாது. பா.ஜ.க தலைமை இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, இந்துத்துவக் கொள்கை திணிப்பு என்பனவற்றை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருவது, திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று அதன் தமிழகத் தலைவர்கள் கொக்கரிப்பதும் தமிழ் நாட்டில் அக்கட்சிக்கு இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவு தளத்தையும் நசித்து விடுவதால் திராவிடக் கட்சிகள் பா.ஜ.க செல்வாக்கு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த எழுவரை பா.ஜ.க செல்வாக்கின் காரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் விடுவித்து விடுவார் மற்றும் அது அ.தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றிருந்த எதிர்பார்ப்பில் மண்விழுந்திருக்கிறது. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்த கதையாக தேர்தல் அணுகிவரும் வேளையிலா ஆளுநர் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டியிருந்த தீர்மானத்தை தூசிதட்டி எடுத்து, அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்குக் கிடையாது, குடியரசு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று தன் பொறுப்பை குடியரசு தலைவரிடம் தள்ளி விட்டிருக்க வேண்டும்! என அ.தி.மு.க தலைவர்கள் அங்கலாய்க்கிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த ஏழுபேர் விடுதலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படப்போவதில்லை. பா.ஜ.க. ஏன் இப்படி செய்தது என்பதுதான் அ.தி.மு.கவின் கவலை.

இதே சமயம், சசிகலாவின் விடுதலையால் உற்சாகமாகியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், கூடவே எழுவர் விடுதலைக் கனவு கலைந்திருப்பதும் அவருக்கு சாதகமான ஒரு விடயம்தான். ‘தியாகத் தலைவி’ சின்னம்மா சென்னை வந்ததும் அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்றி ‘அம்மா ஆட்சி’யை தமிழகத்தில் நிலைநிறுத்துவோம் என்று பேசியிருக்கிறார் அவர்.

சின்னம்மா அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அக் கட்சிக்கு நிறையவே குடைச்சல் கொடுப்பார் என்பது திண்ணம். ஏற்கனவே அ.தி.மு.க மாவட்ட ரீதியான தலைவர்கள் அல்லது செயலாளர்கள் ஆங்கங்கே சின்னம்மாவை வாழ்த்தி வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டிவருகிறார்கள்.
அவ்வாறானால், சின்னம்மா சசிகலா சென்னை வந்து முறைப்படி தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்ததும் எடப்பாடி மீது விரக்தியடைந்திருக்கக் கூடிய அ.தி.மு.க கீழ் மட்டத் தொண்டர்களும் மாவட்டத் தலைமைகளும் சின்னம்மாவின் பின்னால் அணிகுப்பார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சின்னம்மா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அவர் பயணித்தகாரில் அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டிருந்தது.

சென்னையிலும் அவர் அக் கொடியுடனேயே பயணிப்பார் என்றும் அதைத்தடுக்க அ.தி.மு.கவினால் முடியாது என்றும் சவால்விடும் டி.டி.வி தினகரன், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இன்றைக்கும் திகழ்பவர் சின்னம்மா என்பதால் தனது கட்சிக் கொடியை பறக்க விடும் சகல சுதந்திரமும் அவருக்கு உண்டு என்று காரணமும் காட்டுகிறார்.

அ.தி.மு.க அ.ம.மு.க மோதல் இன்னொரு கட்டத்துக்கு இப்போது சென்றிருக்கிறது. அரசியல் காய் நகர்த்தல்களைப் பார்க்கும்போது எடப்பாடியின் அ.தி.மு.கவிற்கு பெரிய பிரச்சினைகள் உருவாகி வருவதாகவே தெரிகிறது.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எப்படி தனக்கான வெற்றிக் கணிகளாக மாற்றி அறுவடை செய்யலாம் என்பதற்கான கணக்குகளை தி.மு.க போட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரத்துச் செய்வோம் என்று தி.மு.க உறுதிமொழி வழங்க, அதை அரசாணையாகவே அறிவித்து, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் 12110 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி, தி.மு.கவுக்கு அவர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார்.

அருள் சத்தியநாதன்

Comments