இந்தியாவுக்கு திருப்தி தராத இலங்கையின் இறுதி முடிவு! | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவுக்கு திருப்தி தராத இலங்கையின் இறுதி முடிவு!

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையை நிராகரிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் ஒத்துழைப்புடன் தனியார் அரச கூட்டாண்மையாக அபிவிருத்தி செய்யும் விடயத்திலும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் தேசப்பற்று அமைப்புக்களின் அழுத்தங்களுக்கும் அரசு முகங் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பௌத்த மத அமைப்புகளும் இன்று போர்க் கொடி தூக்கியுள்ளன. 

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக உழைத்த பௌத்த மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. 

இந்த எதிர்ப்புகள் காரணமாக கிழக்கு முனையத்தின் விடயத்தில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டு விட்டது. 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார்- அரசு கூட்டாண்மையில் அபிவிருத்தி செய்ய இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. அவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. 

இவ்வாறான நிலையிலேயே கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கிழக்கு முனையம் என்பது தேர்தல் பிரசாரத்துக்கான விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் காலத்தில் இதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழிக்கு அமைய போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையிலேயே, கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கிடையில் இவ்வருட ஆரம்பத்தில் திடீரென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெங்சங்கர் அரசு தரப்புடன் நடத்திய பேச்சுக்களில் இவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டதற்கிணங்க, கிழக்கு முனையம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை ஜெய்சங்கர் வலியுறுத்திச் சென்றதாக ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன. 

எனினும், கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையிடமிருந்து வேறு எவருக்கும் வழங்கக் கூடாது என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்தன. இந்தப் பின்னணியிலேயே கடந்த ஒரு வாரமாக இவ்விடயம் தீவிரமடைந்ததுடன், துறைமுகத்தினுள் தொழிற்சங்கப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. 

தொழிற்சங்கப் போராட்டத்தினால் துறைமுக செயற்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வெளியிட்டிருந்தார். இருந்த போதும் தங்களது போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கைவிடவில்லை. 

தொழிற்சங்கங்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய, பேராசிரியர் திஸ்ஸ விதாரன அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பலவும் கிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தன. இது அரசாங்கத்துக்கு பாரியதொரு அழுத்தமாக மாறியது. 

இது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிழக்கு முனையம் எந்தவொரு வெளிநாட்டுக்கும் வழங்கப்பட மாட்டாது. இலங்கையிடமே அது இருக்கும் என்ற உறுதிமொழியை பிரதமர் வழங்கியிருந்தார். 

இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து அனைவரின் கவனமும் இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் மீது இருந்தது. இக்கூட்டத்தில் அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது. துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை நூறு வீதம் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையிடம் இருக்கும் என்றும், இதில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் துறைமுக அதிகார சபையினாலேயே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மாறாக, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் அரச தனியார் பங்குடைமையின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்ற புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் இந்தப் புதிய யோசனைக்கு தொழிற்சங்கத் தரப்பிலிருந்து இணக்கப்பாடு இருப்பதாகவும் தெரிய வருகிறது. அதாவது மேற்கு முனையம் என்பது புதிதாக அமைக்கப்பட வேண்டியதொன்றாகும். இதற்காக பாரியதொரு முதலீடு அவசியம் என்பதால் வெளிநாட்டின் பங்களிப்புக்கான தேவை உணரப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும், இலங்கை அரசாங்கத்தின் இந்த திடீர் மாற்றம் இந்தியாவை திருப்திப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே புதுடில்லியில் உள்ள உயர்மட்டம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், கிழக்கு முனையம் எந்தவொரு வெளிநாட்டுக்கும் வழங்கப்பட மாட்டாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்து சில மணி நேரங்களில் கருத்துக் கூறியிருந்த கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர், “2019 ஆம் ஆண்டு இணங்கப்பட்டதற்கு அமைய கிழக்கு முனையம் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் கூட்டாண்மையுடன் அபிவிருத்தி செய்யப்படும் என இந்தியா எதிர்பார்க்கிறது” எனச் சுட்டிக் காட்டியிருந்தார்.  

கிழக்கு முனைய விடயத்தில் இந்தியா உறுதியாக இருப்பது இதிலிருந்து புலனாகிறது. அது மாத்திரமன்றி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அவசர அவசரமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது கிழக்கு முனையம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. அதேபோல, கடந்த புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரும் கிழக்கு முனைய விடயத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நிலைமைகள் இவ்வாறிருக்க, எதுவாக இருந்தாலும் இந்தியாவுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 

இலங்கையின் பூகோள அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே வெளிநாடுகள் கொழும்புத் துறைமுகத்தின் மீது அதிக அக்கறை காண்பிக்கின்றன. மறுபக்கத்தில் துறைமுக விடயத்தில் சீனாவின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருப்பது இந்தியாவின் கவலையாக உள்ளதாகத் தெரிகின்றது. 

கொழும்பு துறைமுகத்தில் ஒரு முனையம் ஏற்கனவே சீனாவினால் செயற்படுத்தப்படுகிறது. அது மாத்திரமன்றி, ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டிருப்பதுடன், அங்கு சீனாவின் பிரசன்னம் அதிகமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பின்னணியிலேயே இந்தியா கொழும்புத் துறைமுகத்தில் தனது கரங்களைப் பலப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். 

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் சீனாவுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்பட்டாலும், கணிசமான முதலீடுகள் காணப்படுகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய ஒயில் நிறுவனத்துக்கு திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய்த் தாங்கிகள் பல வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இது மாத்திரமன்றி, திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு அப்பகுதியில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா முயற்சிகளை எடுத்திருந்தது. சம்பூரில் அனல் மின்நிலையமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கும், திருகோணமலையில் விசேட பொருளாதார வலயமொன்றை அமைப்பதற்கும் கடந்த காலங்களில் இந்தியா முயற்சித்திருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் இவை தடைப்பட்டிருந்தன. 

இவற்றுக்கும் அப்பால் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்கிருப்பதையும் மறக்க முடியாது. குறிப்பாக இந்திய வீடமைப்புத் திட்டம் போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இரு நாட்டு உறவுகளையும் பாதிக்காத வகையில் துறைமுக விவகாரம் கையாளப்படுவதே இரு நாடுகளின் எதிர்கால நல்லுறவுக்கு அவசியமானதாக அமையும்.

பி.ஹர்ஷன்

Comments