மியான்மார் அனுபவம்; ஆபத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மை தேசியங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மியான்மார் அனுபவம்; ஆபத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மை தேசியங்கள்

மியான்மாரின் அரசியலில் மீண்டும் ஒரு நெருக்கடிமிக்க காலப்பகுதியாக கடந்த 01.02.2021 அமைந்திருந்தது. 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய ஆங் சாங் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சி அமைக்க திட்டமிட்ட போது இராணுவம் சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை இராணுவம் கைது செய்துள்ளது. அது மட்டுமன்றி; மியன்மார் நாட்டில் அடுத்துவரும் ஓராண்டுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் அரசியலையும் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

2020 நவம்பர் 08 இல் நடைபெற்ற தேர்தலில் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலும் மேல் சபையிலும் சூகி தலைமையிலான கட்சி 476 இடங்களில் 396 இடங்களை கைப்பற்றியது. மியன்மார் இராணுவம் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய விவகாரங்களில் தனது மேலாதிக்கத்தினையும் உறுதி செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அதன் பிரகாரம் அரசியலமைப்பு விதிகளின் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25சதவீத இடங்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அதனைவிட மேலதிகமாக 25 சதவீத இடங்களினை கைப்பற்றுவதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒர் அரசியல் கட்சி மூலம் முனையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நடைபெற்ற தேர்தலில் இராணுவம் கணிசமான இடங்களை இழந்திருந்ததது. இதனால் நாடாளுமன்றத்தின் முழுமையான கட்டுப்பாடு சூகி தலைமையிலான அரசாங்கத்திற்கு உரியதாகவே காணப்பட்டது. அதனால் அரசியலமைப்பினை மாற்றி இராணுவத்தின் ஆட்சி அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக மியான்மார் இராணுவம் கூறியதுடன் மியன்மாரின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் 314 பகுதிகளில் 8.6 மில்லியன் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் அறிவித்திருந்தது. அதாவது மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களித்திருப்பதாகவும் அது மட்டுமன்றி வேறு ஏதேனும் வகையில் வாக்களிக்கும் செயல்பாட்டில் முறைகேடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் இராணுவ தெரிவித்துள்ளது. இதனால் மியான்மார் இராணுவம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்த போதும் உச்ச நீதிமன்றத்தில் முறைப்பாடு தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இராணுவம் சதிப்புரட்சியை மேற்கொண்டுள்ளது.

இச்சதிப் புரட்சிக்கு இராணுவம் திட்டமிட்ட போதும் மியான்மாரைப் பொறுத்தவரை இராணுவ ஆட்சி வழமையான அரசியலாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். காரணம் மிக நீண்ட காலம் இராணுவத்தின் பிடிக்குள்ளே மியான்மாரது ஆட்சி நிலவியுள்ளது. பௌத்த மதமும் இராணுவமும் இரண்டறக்கலந்த ஒர் அரசியல் அதிகாரக் கட்டுமானம் மியன்மாரில் வளர்ந்துள்ளது. அத்தகைய அரசியல் கலாசாரத்தினூடாகவே 2008 ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை சூகியின் தலைமையிலான ஜனநாயகவாதிகளும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் மீதான இராணுவத்தின் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் இதே ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். அதனால் இந்தப் புரட்சிக்கு சூகி உட்பட அந்த நாட்டின் ஜனநாயகவாதிகளும் காரணமானவர்களாக உள்ளனர். எவ்வாறு சூகியின் தந்தை ஆங் சாங் காணப்பட்டாரோ அவ்வாறே சூகியும் இராணுவத்தின் கை ஓங்குவதற்கு காரணமாகினார்.

சதிப்புரட்சிக்கு பின்னால் மற்றுமொரு விடயம் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது மியான்மாரின் புவிசார் அரசியல் சூழமைவும் அதற்கான போட்டியும் முக்கிய விடயமாக தெரிகிறது. அதில் சீன- இந்திய போட்டியும் ஜனநாயகவாதிகளது மேற்குடனான உறவும் விளங்குகிறது. மியான்மார் இராணுவத்திற்கும் சீனாவிற்குமிடையிலான உறவு தனித்துவமானது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி சதிப்புரட்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர் மியான்மாருக்கு விஜயம் மேற்கொண்டதுடன் சிரேஷ்ட ஜெனரல் மின் ஹேலிங்குடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமன்றி சதிப்புரட்சி தொடர்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்ட விடயம் கவனத்திற்குரியதாகும்.

மியான்மாரின் இறையாண்மை, தேசிய கௌரவம் மற்றும் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களினைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவும் சீனாவும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மியான்மார் விடயத்தை கொண்டு செல்ல எடுத்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேநேரம் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மியான்மார் இராணுவத்தின் நகர்வினை கண்டித்ததுடன் மீண்டும் பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய நிர்வாகம் அதிக எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

சீனா நகர்வுக்கு இன்னோர் காரணம் மியான்மாருடன் அதிகளவிலான வர்த்தக உறவினை இந்தியாவும் அமெரிக்காவும் வளர்த்துக் கொண்டுள்ளன. தரவுகளின்படி மியான்மாருக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மொத்த வர்த்தம் 2019ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் டொலராக இருந்து 2020ஆம் ஆண்டு ஏறக்குறைய 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியாவுடனான உறவில் 1600 கி.மீ எல்லையைப் பகிந்துகொள்ளும் மியான்மார் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டத்தினை கொண்டுள்ளன. அதனைவிட இரு நாட்டுக்குமான நதிநீர் திட்டம் துறைமுக உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் பாரிய மற்றும் சிறு தொழில்துறைக்கான முதலீடுகள் என இந்தியா அண்மைக்காலத்தில் வலுவான உறவை மியன்மாருடன் ஏற்படுத்தி வருகிறது. இதில் முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டமொன்று மிகப்பலமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியா தாய்லாந்து மியான்மார் ஆகிய மூன்று நாடுகளுக்குமான போக்குவரத்தினை அடிப்படையாகக் கொண்டு இணைப்பு திட்டமொன்று ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அடுத்துவரும் ஆண்டுகளில் வியட்னாமை இணைப்பது தொடர்பான உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இத்தகைய ஆதிக்க சக்திகளது அரசியல் இராணுவ பொருளாதாரப் போட்டியின் விளைவுகளாகவும் மியான்மார் மீதான இராணுவ சதி அரங்கேறியுள்ளது. இது ஏனைய பிராந்திய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. மியான்மார் மரபாந்த இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த நாடு என்றவகையில் மியான்மார் மக்களுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக அமையவில்லை. ஆனால் கொவிட்-19 பின்னரான உலக அரசியலில் இராணுவம் ஆதிக்கம் முதன்மை விடயமாக மாறிவருகிறது. இதன் விளைவுகள் தராள ஜனநாயக பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது.

மியான்மார் விடயத்தை ரஷ்யாவும் சீனாவும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் அங்கீகரித்த மாதிரியை பார்க்கும் போது எதிர்காலம் ஆபத்தானதாகவே மாற வாய்ப்புள்ளமை தெளிவாகத் தெரிகிறது. மியார்மாரில் ஏற்பட்ட சதிப்புரட்சிகள் ஏனைய நாடுகளில் ஏற்படும் போதெல்லாம் ரஷ்யாவினதும் சீனாவினதும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இரு நாடுகளது அதிகார ஆட்சி முறைமை உலக நாடுகளில் பரவ வாய்ப்புள்ளது. உலகளாவிய அதிகாரப் போட்டியின் விளைவாக சிறுபான்மைத் தேசியங்களும் பல்லினத் தேசிய அரசுகளும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றன.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments