மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும்

- யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்  

மல்லிகை ஜீவா ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு களம் வழங்கி ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்துசக்தியாக விளங்கியவர்.  

சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம்சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர். 

இடையில் போர்க்காலம் தோன்றியவேளையிலும் சளைக்காது குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர்.  

இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர். அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும், கனடா இலக்கியத்தோட்டத்தின் "இயல்விருது “ உட்பட பல விருதுகளும் பெற்றவர்.  

மூவின இலக்கியவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர். 

நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படங்களை மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து மல்லிகை இதழிலே அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர். 

இலங்கையின் அனைத்து பிரதேச எழுத்தாளர்களுக்கும் மல்லிகையில் சிறந்த களம் வழங்கியவர். 

அத்துடன் மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களினால் இலக்கிய ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.  

மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் சிங்கள – ஆங்கில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.  

அவருடைய சுயசரிதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதுடன், சில கதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.  

மல்லிகை இதழ்கள் பல்கலைக்கழக கலைப்பீட தமிழ்த்துறை மாணவர்களுக்கு உசாத்துணையாகவும் விளங்கியவை. 1966 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையில் வெளியான மல்லிகை இதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்வையிடமுடியும். “  
இவ்வாறு  மல்லிகை ஜீவா நினைவேந்தல் நிகழ்வு இணையவழி காணொளி ஊடாக நடைபெற்றபோது இரங்கல் தெரிவித்த மூவினத்தையும் சேர்ந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஏககுரலில் தெரிவித்தார்கள். 

மல்லிகை ஜீவா வினால் மல்லிகை இதழ் ஊடாக 1972 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர் மேமன்கவியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான ரவூப்ஹக்கீம் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட கலை, இலக்கியவாதிகள் தமது இரங்கலுரையில் மல்லிகை ஜீவாவின் பன்முக ஆளுமை குறித்து விதந்து போற்றி உரையாற்றினார்கள். 

இலங்கையில் வடக்கு – கிழக்கு - தென்பிரதேசங்களைச்சேர்ந்த எழுத்தாளர்களும் மலையக எழுத்தாளர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர். 

அவுஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் சிலர் பங்கேற்று இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.   கொழும்பில் புறநகரத்தில் மட்டக்குளிய பிரதேசத்தில் காக்கை தீவில் ஏக புதல்வன் திலீபனின் பராமரிப்பில் அந்திமகாலத்தில் வாழ்ந்த மல்லிகை ஜீவா தமது 94 வயதில் கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலமானார். 
எனினும், அவர் கொரேனோ தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 30 ஆம் திகதி மாலை பொரளை கனத்தை மின் மயானத்தில் தற்போதைய சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் மல்லிகை ஜீவாவின் இறுதிச்சடங்கு அமைதியான முறையில் மகன் திலீபன் முன்னிலையில் நடைபெற்றது. 

மல்லிகை ஜீவா, டொமினிக் என்ற இயற்பெயருடன் யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர். 1966 ஆம் ஆண்டு மல்லிகை மாத இதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிவரையில் வெளியிட்டு வந்த ஜீவா, வடபகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்த பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து மல்லிகையை வெளியிட்டவாறு, மல்லிகைப்பந்தல் என்ற பதிப்பகத்தையும் உருவாக்கி பல நூல்களையும் வெளியிட்டார். 

எனினும் தான் இறக்கநேரிட்டால், தமது உடல் தமது பெற்றோர்கள் நல்லடக்கமான யாழ். மண்ணிலேயே அடக்கப்படவேண்டும் என்ற விருப்பத்துடனும் இருந்தார் என்று அவரது மகன் திலீபன், நினைவேந்தல் நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார். 

தந்தையின் அஸ்தி கிடைக்கப்பெற்றதும், யாழ்ப்பாணத்தில் தந்தையின் விருப்பத்தின் பிரகாரம் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறினார். 

நினைவேந்தல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்திலிருந்து மூத்த படைப்பாளி தெணியான், மற்றும் ஐயாத்துரை சாந்தன், வதிரி சி. ரவீந்திரன், மருத்துவர் எம். கே. முருகானந்தன், தேசிய கலை இலக்கியப்பேரவையைச்சேர்ந்த சட்டத்தரணி சோ. தேவராஜா, சிங்கள எழுத்தாளர்கள் கமல் பெரரேரா, கேமசந்திர பத்திரன, பேராசிரியர்கள் மௌனகுரு, சோ. சந்திரசேகரம், கலாநிதி ரவீந்திரன், மலையக எழுத்தாளர்கள் வாமதேவன், மு. சிவலிங்கம், ஜீவா சதாசிவம், முரளிதரன், மற்றும் எழுத்தாளர்கள் நந்தினிசேவியர், திக்குவல்லை கமால், அந்தனிஜீவா, அன்னலட்சுமி இராஜதுரை, மருத்துவர் ச. முருகானந்தன், தயாபரன், பீர் முகம்மது, அப்துல் ஹஃபீஸ், நாச்சியதீவு பர்வீன், எம். எல். எம். மன்சூர், கெக்கிராவ சுலைகா, பிரமீளா பிரதீபன், வசந்தி தயாபரன், தினகரன் ஆசிரியர் சிங்காரவேலர், ஆகியோரும், அவுஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர்கள் முருகபூபதி, நடேசன், கலாநிதி ஸ்ரீ கௌரி சங்கர், கானா. பிரபா, கனடாவிலிருந்து மல்லிகை ஜீவாவின் இலக்கிய ஞானத்தந்தை இராஜகோபாலின் புதல்வர் ரொஜர்ஸ் மதியழகன், தமிழ்நாட்டிலிருந்து கவிஞரும் திரைப்பட வசனகர்த்தாவுமான அறிவுமதி உட்பட மேலும் சிலரும் தமது உரைகளை குரல் வழி ஊடாகவும், இணைய வழி காணொளியில் தோன்றியும் தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் உரையாற்றிய மல்லிகை ஜீவாவினால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முருகபூபதி உரையாற்றுகையில்,  

“ சிங்கள இலக்கிய மேதை மூத்த எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மற்றும் அறிஞர் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை, ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், கலாயோகி ஆனந்தகுமாரசாமி ஆகியோருக்கெல்லாம் இலங்கை அரசு முன்னர் நினைவு முத்திரை வெளியிட்டிருப்பதுபோன்று, எங்கள் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கும் இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும். “ என்று வலியுறுத்தினார்.  

“ யாழ்ப்பாண மண்ணில் பிறந்து, உலகலாவிய ரீதியில் ஈழத்து இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த மல்லிகை ஜீவாவுக்கு யாழ். மாநகர சபையிலும் அனுதாபத்தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும். எனவும் தெரிவித்த முருகபூபதி,  
“ முதல் முதலில் மல்லிகை ஜீவா சாகித்திய விருது பெற்று யாழ்ப்பாணம் திரும்பியவேளையில் அன்றைய யாழ். மாநகர மேயர் துரைராஜா ஜீவாவுக்கு மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துவந்தார் என்பதையும் நினைவுபடுத்தினார்.  

யாழ்நகரத்தில், மாநகர சபை அல்லது வடமாகாண சபை ஜீவாவுக்கு நினைவு மண்டபமும் அமைக்கவேண்டும். அதில் ஜீவாவின் மல்லிகை இதழ்கள், ஜீவாவின் இலக்கிய படைப்புகள், ஒளிப்படங்கள், ஜீவா பெற்ற உயர் விருதுகள் இடம்பெறத்தக்கதாக காட்சியகமும் நிறுவப்படல்வேண்டும். 

இதுவிடயத்தில் இலங்கை தமிழ் அமைச்சர்கள், தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தமிழ் – சிங்கள – முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களும் , இலங்கையில் வெளியாகும் ஊடகங்களும் தமிழ் சிற்றிதழ்களும் ஏகமனதாக இலங்கை அரசுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வடமாகாண சபைக்கும் கோரிக்கை விடுத்தல் வேண்டும். “ எனவும் தெரிவித்தார்.    “ மல்லிகை ஜீவாவுக்கு நினைவு முத்திரை வெளியிடுவது தொடர்பாக அனைவரும் ஆக்கபூர்வமாக செயல்படல்வேண்டும் “ என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.   

“ மல்லிகை ஜீவா தொடர்ந்தும் இலக்கிய இதழின் ஆசிரியராகவே அடையாளப்படுத்தப்படுகிறார். எனினும் அவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரது சிறுகதைகள் தொடர்பாக வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் காலத்துக்குக்காலம் மல்லிகை ஜீவாவை நினைவுபடுத்தும் வகையில் நடைபெறல்வேண்டும் “ என்று அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசன் குறிப்பிட்டார்.   நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் குரல் பதிவுகளின் ஊடாக ஜீவாவின் நினைவுகளை பகிர்ந்துகொண்டவர்களுக்கும் கவிஞர் மேமன்கவி நன்றி நவின்றார். 

வரலாறாக திகழும் இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா 

யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்து சுயமுயற்சியோடு அதனை வெளியிடத்தொடங்கியதும், மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.  

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.  
சாதாரண மத்திய தரக்குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்கும் வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே படிக்காத மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, இம்மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் புறநகரமான மட்டக்குளியவில் காக்கை தீவில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் தமது 93 வயதில் மறைந்தார்.  
இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார்.  

ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும் கண்ணீரும்.  

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில் இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!  

விருதை வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் திரும்பிவருகிறார். ஊர்மக்கள் அச்சமயம் யாழ்ப்பாண மேயராக பதவியிலிருந்த துரைராஜாவின் தலைமையில் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.  

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் தந்தையாரின் ஜோசப் சலூனை கவனித்துக்கொண்டே இலக்கியப் பிரதிகளும் எழுதினார்.  

புத்தகக்கடை பூபாலசிங்கமும் ராஜகோபல் என்ற அன்பரும் அவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியதுடன் சிறந்த நூல்களையும் படிக்கக்கொடுத்தனர்.  

கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார். அடிநிலை மக்களுக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  

தண்ணீரும் கண்ணீரும் கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனம் முதலான தொகுதிகளையும் மேலும் சில நூல்களையும் இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.  

சாலையின் திருப்பம் தொகுதிக்கு அவரது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான இதழ்களும் ஜீவாவின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்து அவரைப்பற்றி எழுதி கௌரவித்திருக்கின்றன. குமுதம் இலவச இணைப்பாக ஜீவாவின் அனுபவ முத்திரைகள் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து விநியோகித்திருக்கிறது.     ஒரு சிறுகதை எழுத்தாளன், பெரிய பொருளாதார வசதிகளோ, உயர்ந்த கல்விப்பின்புலமோ இல்லாமல் தொடர்ச்சியாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை இலக்கிய இதழை நடத்தியிருக்கிறார் என்ற சாதனையும் இன்று காலம் கடந்த செய்திதான்.  

இலங்கை நாடாளுமன்றத்தில் விதந்து பேசப்பட்ட இலக்கியவாதியான டொமினிக் ஜீவாவுக்கு அந்தப்பெருமையை பெற்றுக்கொடுத்ததும் அவரது அயராத முயற்சியினால் வெளியாகிக்கொண்டிருந்த மல்லிகைதான்.  
யாழ்குடாநாட்டுக்குள்ளிருந்து முதலிலும் போர் நெருக்கடி தொடங்கிய 1990 இற்குப்பின்னர் கொழும்பிலிருந்தும் வெளியான அவரது மல்லிகை இதழில் இலங்கையின் அனைத்துப்பிரதேச எழுத்தாளர்கள் மட்டுமன்றி, தமிழகத்திலிருந்தும் புகலிட நாடுகளிலுமிருந்தும் பலர் எழுதினார்கள்.  

மாதாந்தம் மல்லிகையை வெளியிட்டவாறே ‘மல்லிகைப்பந்தல்’ பதிப்பகத்தின் மூலம் பல படைப்பாளிகளின் படைப்புகளையும் நூலுருவாக்கி விநியோகித்தார். அத்துடன் சில பிரதேச சிறப்பிதழ்களையும் வெளிக்கொணர்ந்து மண்வாசனை இலக்கியத்திற்கும் வளம்சேர்ப்பித்தார்.  

இலங்கையில் கலை, இலக்கியவாதிகளையும் இலக்கிய விமர்சகர்களாகத்திகழ்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களையும் ஆழமாக நேசித்து அவர்களது ஆக்கங்களுக்கும் சிறந்த களம் வழங்கினார். அத்துடன் தமிழ்நாட்டில் கண்ணதாசன், ஜெயகாந்தன், சிட்டி சுந்தரராஜன், , சிவபாதசுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், மேத்தா, இன்குலாப், திலகவதி, சிவகாமி, ராஜம்கிருஷ்ணன், ரகுநாதன், பாலகுமாரன், சு. சமுத்திரம், அக்கினி புத்திரன், செ. யோகநாதன், பொன்னீலன், கண.முத்தையா, அகிலன் கண்ணன், ரங்கநாதன், நர்மதா ராமலிங்கம், குணசேகரன், அறந்தை நாராயணன், தி.க. சிவசங்கரன், பொன்னீலன், ஆ. குருசாமி , சலமன் பாப்பையா, வைரமுத்து, மீரா, மேத்தாதாஸன், இளம்பிறை ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தா. பாண்டியன், மகேந்திரன், நல்லகண்ணு, உட்பட பலருடன் நட்பையும் பேணியவர்.  
மல்லிகை இலங்கை மற்றும் புகலிட தமிழக எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில் பதிவுசெய்து அவர்களைப்பற்றிய ஆக்கங்களையும் பிரசுரித்துவந்தது. இதுவும் பெறுமதிமிக்க இலக்கியப்பணிதான்.  

தமிழக படைப்பாளிகள் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், நீலபத்மநாபன், பேராசிரியர் நா.வானமாமலை, பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, சுதந்திர போராட்ட தியாகி சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே. கோரி மற்றும் வெளிநாடுகளில் வாழும் அ.முத்துலிங்கம் கவிஞர் அம்பி , வவுனியூர் இரா உதயணன் பத்மநாப ஐயர் , கவிஞர் சேரன் , நிலக்கிளி பாலமனோகரன் , க.பாலேந்திரா , எஸ்.பொ. வ.ஐ.ச.ஜெயபாலன் , சுதாராஜ் , இளைய அப்துல்லாஹ் , முருகபூபதி ஆகியோரின் உருவப்படங்களையும் அவர்களைப் பற்றிய ஏனைய எழுத்தாளர்கள் எழுதிய ஆக்கங்களையும் மல்லிகை கடந்த காலங்களில் பிரசுரித்து அவர்களின் கலை, இலக்கிய, சமூகப் பணிகளை கௌரவித்திருக்கிறது.  

குறிப்பிட்ட அட்டைப்படக்கட்டுரைகளும் பின்னர் தனித்தனி தொகுப்புகளாக மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக நூலுருப்பெற்றன. அவை:-  

அட்டைப்பட ஓவியங்கள் (1986) மல்லிகை முகங்கள் (1996)  

அட்டைப்படங்கள் (2002) முன்முகங்கள் (2007)  

காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும் முரண்பட்டவர்கள் கூட மல்லிகையின் அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும் இடம்பெற்றுள்ளனர்.  

இந்தப் பண்பு இலங்கை இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இலக்கியவாதிகள் இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார்.    இலங்கை அரசின் அதியுயர் விருதான சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் விருதுகளும் கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருதும் பெற்றவர்.    ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு பத்ரே பிரசூத்திய. (மொழிபெயர்த்தவர் இப்னு அஸுமத்)  

ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம். இதனை Undrawn Portrait for Unwritten Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் க. குமாரசாமி. சோவியத்நாட்டுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டனுக்கும் சென்று அங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.  

2012இற்குப் பின்னர் மல்லிகையின் வரவு தடைப்பட்டுவிட்டது  

மல்லிகை ஜீவா எழுத்தாளர், இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை. வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !  

[email protected]  

முருகபூபதி

Comments