சங்கங்கள் தீட்சண்யத்துடன் செயல்பட வேண்டிய காலம் | தினகரன் வாரமஞ்சரி

சங்கங்கள் தீட்சண்யத்துடன் செயல்பட வேண்டிய காலம்

இலங்கையில் விடிவு காணப்படாத இரண்டு பெரும் பிரச்சினைகள் என்று குறிப்பிடுவதென்றால் அதில் முதன்மையானது தமிழர் பிரச்சினையாகவும் பெருந்தோட்டத் தொழிலாளர் ஊதியம் இரண்டாவதாகவுமே இருக்கும் எனலாம். இவை இரண்டுமே முடிவேயில்லாத கயிறிழுப்புகளாகவே காணப்படுகின்றன.

தற்போது கூட வடக்கில் ஒரு எழுச்சிப் பேரணி நடந்து கொண்டிருக்கிறது என்றால் தெற்கே, குறிப்பாக மலையக பிராந்தியங்களில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வுக்கான போராட்டம் நடந்து கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. 

இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் எடுத்துக் கொண்டால் வாழ்க்கைத் செலவுக்கு ஏற்றாற்போல தனியார்த்துறை ஊழியர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறுவதற்கில்லை. சம்பளமும் சலுகைகளும் என்றைக்குமே பற்றாக்குறையாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதார நிலையில் கொரோனா முடக்கமும் கடந்த வருடம் கைகோர்த்தத்தில் வாழ்க்கைச் செலவு உயர் வென்பது அனைத்து தரப்பினராலும் எட்டமுடியாததாகிவிட்டதில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தினசரி வேதனத்தை ரூபா 750கும் குறைவான தொகையாக அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக பெற்று வருவதை எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

எனவே அவர்கள் கோரும் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வு என்பது மிகவும் நியாயமானது என்பதை நேற்று முன்தினம் நடைபெற்ற ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பின் வழியாக புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு காலமாக மலையகத்துக்குள் மட்டும் தொழிற்சங்கம் – கம்பனிகள் என்றிருந்த ஒரு விடயம் இம்முறைதான் அந்த எல்லையைத் தாண்டி இலங்கை முழுவதும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போராட்டம் எதிரொலித்ததோடு மகாசங்கத்தினரும் கூட முதல் தடவையாக ஆதரவுக் குரல் எழுப்பியதை நாம் பார்த்தோம். 

ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிகள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இலாபத்தை மீளவும் பெருந்தோட்டங்களில் முதலீடு செய்ய விரும்பாத, இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் என்ற நியாயமான கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

75 சதவீதமான தேயிலை உற்பத்தி சிறு தோட்ட உற்பத்தியாளர்களிடம் இருப்பதால் பெருந்தோட்ட இயக்கத்தை முற்றாக முடக்கும் ஒரு தொடர் போராட்டம் வீண் முயற்சியாக முடிவடையலாம் என்பதால் அரசின் முழு ஆதரவோடு தொழிற்சங்கங்கள் வெகு சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்த வேண்டியது அவசியம்.

பெருந்தோட்ட தொழிற்சங்க வரலாற்றில் மிக முக்கியமான கால கட்டத்தில் தொழிலாளர் சமூகம் நின்று கொண்டிருக்கிறது.

எனவே வெற்று கோஷங்களும், வீறாப்பு பேச்சுகளும் இச் சமூகத்தை உணர்ச்சி வசப்படுத்தலாமே தவிர ஒரு அங்குல தூரத்துக்கும் முன் நகர்த்தாது. இது விவேகமாகவும், சகல தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் முன்நோக்கி நகர வேண்டிய நேரம் இது.

இந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போராட்டத்தில் தொழிலாளர் தரப்பு இம்முறை வெற்றிபெற்றேயாக வேண்டும். இதில் தோல்வியடைந்து ஐம்பது அல்லது நூறு ரூபா அதிகரிப்புடன் சமரசத்துக்கு வருவோமானால் சகலரினதும் ஆதரவு பெற்ற நியாயமான ஒரு கோரிக்கை மிகப் பெரிய பின்னடைவை சந்தித்ததாக அது அமைந்து விடும். 

நாளை சம்பள நிர்ணய சபையில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது முதலாளி தரப்புக்கு இரண்டு வாக்குகள், தொழிலாளர் தரப்புக்கு இரண்டு வாக்குகள் மற்றும் அரசு தரப்புக்கு ஒரு வாக்கு என ஐந்து வாக்குகளை பிரயோகிக்க முடியும் என்றும் எடுக்கப்படும் தீர்மானத்தின் பேரில் நடைபெறும் வாக்களிப்பில் தொழிலாளர் தரப்பு அரச தரப்பின் ஒரு வாக்குடன் மூன்று வாக்குகள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு எனவும் தெரிகிறது.

ஆகையால் தாம் தோல்வியடையும் பட்சத்தில் கம்பனி தரப்பு நீதிமன்றம் சென்று இடைக்கால தடை உத்தரவு பெற்று இறுதித் தீர்வுக்காக நீதிமன்றத்தை நாடக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

பிரச்சினையை இழுத்தடிக்கவே கம்பனிகள் விரும்பும் என்பதால் தொழிற்சங்கங்கள் மிக லாவகமாக செயற்பட வேண்டிய அவசியத்தை நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்.

Comments