இம்முறையாவது நிறைவேறுமா முதல்வர் கனவு? | தினகரன் வாரமஞ்சரி

இம்முறையாவது நிறைவேறுமா முதல்வர் கனவு?

மாகாண சபைகளுக்கான பதவிக் காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகின்ற போதும், அதற்கான தேர்தல்கள் இதுவரை நடத்தப்படவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருடம் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்று சூழலால் அத்தேர்தலை நடத்தும் எண்ணத்தை அரசாங்கம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாகாணசபைத் தேர்தல்கள் இன்னமும் நடத்தப்படாமல் இருப்பது சில அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இல்லாத போதிலும், சில அரசியல் கட்சிகள் தம்மை மாகாண சபைத் தேர்தலுக்குத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன.

அவ்வாறுதான் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள இன்றைய நிலையில், அத்தேர்தலை நோக்கிய முன்னகர்வொன்றை தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்துள்ளது.

அதன் முதற் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விடயம் ஆராயப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் முன்மொழியப்பட, சீ.வி.கே.சிவஞானம் அதனை வழிமொழிந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு சில நாட்களில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் டொக்டர் சத்தியலிங்கத்தின் அறிவிப்பு தமிழ் அரசியல் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ‘முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜாதான் என்ற எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஊடகங்களே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன’ என்று சத்தியலிங்கம் சாடியிருந்தார். இந்த பரஸ்பரமான கருத்துகள், முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

சிரேஷ்ட அரசியல்வாதியான தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவின் பெயர் முதலமைச்சர் வேட்பாளராக முன்வைக்கப்படுவது இது முதற் தடவையால்ல.

2013ஆம் ஆண்டு வடமாகாணசபைக்கு தேர்தல் முதற் தடவையாக நடத்தப்படவிருந்த வேளையிலும் மாவை சோனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் என்ற பேச்சுகள் அடிபட்டன. அவரே களமிறங்கப் போகின்றார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டார்.

அவர் களமிறக்கப்பட்டது மாத்திரமன்றி, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார். அன்றைய சந்தர்ப்பத்தில் மாவை சோனாதிராஜாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்து போனது.

இதன் பின்னர் மாவை சோனாதிராஜாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சுமுகமான உறவு இருந்ததில்லை. அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டாலும், பின்னைய நாட்களில் அவருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தமை நாம் அறிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையிலேயே அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் அடிபடுகிறது. இவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கட்சி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது என்பதே அக்கட்சிக்குள் மாத்திரமன்றி அக்கட்சியின் அதிருப்திக் குழுக்களுக்கு உள்ளேயும் பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்றது.

குறிப்பாக, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆசனங்கள் குறைவடைந்தது மாத்திரமன்றி, கட்சியின் தலைவரான அவராலேயே பாராளுமன்றத்துக்குச் செல்ல முடியாமல் போய் விட்டது.
 
நல்லாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தோள் கொடுத்துக் கொண்டிருந்த போதும் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை தமிழ்க் கூட்டமைப்பு தீர்த்து வைக்கவில்லையென்ற தமிழ் மக்களின் எண்ணமே இந்த நிலைமைக்குப் பிரதான காரணமானது.

அது மாத்திரமன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தமையால் தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்குச் செல்ல தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முயற்சித்த போதும், அப்போது பொதுச் செயலாளராகவிருந்த துரைராஜசிங்கத்தினால் எடுக்கப்பட்ட திடீர் முடிவின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கலையரசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

கலையரசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று உறுதியானது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கட்சியின் தலைமைத்துவம் என்னவோ அதிருப்தியடைந்தது என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முரண்படும் நிலைமையும் ஏற்பட்டது.

அது மாத்திரமன்றி நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கையின் போது அமரர் ரவிராஜின் மனைவியைத் தோற்கடிக்க சுமந்திரன் முற்படுகிறார் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் குற்றஞ் சாட்டியிருந்தனர். இதன் போது மாவை சேனாதிராஜாவின் மகனும் சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களைக் கடுமையாக முன்வைத்திருந்தார். இது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர் அக்கட்சியின் உறுப்பினருடனேயே முரண்படும் நிலைமை காணப்பட்டது.

மறுபக்கத்தில் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது சபையில் உரையாற்றியிருந்தாலும், அதற்காக அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகளும் தமிழரசுக் கட்சியின் தலைவரான அவர் மீது உள்ளது.

இவ்வாறான அரசியல் பின்புலத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா இம்முறையாவது தெரிவு செய்யப்படுவாரா என்பது எதிர்வரும் நாட்களில் உறுதியாகி விடும். அதேசமயம் கடந்த பொதுத் தேர்தல் நிலைமைகளை வைத்துப் பார்க்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவானது மாகாணசபைத் தேர்தலிலும் பிரதிபலிப்பதற்கான வாய்ப்பு தென்படுகின்றன. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு பலமான முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறதென்பது தெரிகின்றது.

குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்ற பல்வேறு தரப்புகளுடனான கடுமையான போட்டிகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.

இவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையில் பிரிந்து நின்று குரல் கொடுப்பதிலேயோ அல்லது தனித்து நின்று போராட்டங்களை நடத்துவதிலோ தாம் சார்ந்த மக்களுக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்கள் மற்றும் பதவி மோகங்களினால் பல்வேறு பிரிவுகளாக பிளவடைந்து சென்றதன் விளைவுகளை தேசிய அரசியல் அரங்கத்தில் உணர முடிகிறது.

இவ்வாறாக நிலைமைகள் இருக்கையில், கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை சற்றே தள்ளி வைத்து விட்டு ஒரு சில விடயங்களில் ஒன்றிணைந்திருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்றைக் கொண்டு வரும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் ஒன்றிணைந்தன. ஆரம்பத்தில் ஒருசிலர் தாங்கள் அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தனித்து நிற்க முயற்சித்தாலும் இறுதியில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து அனைவரும் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு பொதுவான கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தனர்.

மக்களுக்காகப் போராடுவதாயின் இவ்வாறான இணக்கப்பாடுகள் ஏற்படுவது அவசியமாகுமென்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஒற்றுமையின் மற்றுமொரு வெளிப்பாடாகவே ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தைக் குறிப்பிட முடியும். காணாமல் போனோர் விவகாரம், தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டு கைப்பற்றப்படுகின்றமை, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற பல்வேறு விடயங்களை வலியுறுத்தி வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களால் இந்த கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. பொத்துவிலில் ஆரம்பமான பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஓட்டமாவடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பேரணியில் இணைந்து முஸ்லிம் மக்களின் ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தார்.

திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது ஆதரவை வழங்கியிருந்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சிவில் சமூகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணிக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் கணிசமாக இருந்ததுடன், மக்கள் பலரும் உணர்வுடன் கலந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. இது போன்று அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதுடன், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராடும் போதே இனத்தின் குரலாக அதனை வெளிப்படுத்த முடியும் என்பதே தமிழ் மக்களின் அபிப்பிராயமாக இருக்கின்றது.

இந்தப் போராட்டம் வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி முஸ்லிம் மக்கள் தற்பொழுது எதிர்கொள்ளும் ஜனாசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனாலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகளுக்கோ அல்லது போராட்டங்களுக்கோ கடந்த காலத்தில் சற்றேனும் செவிசாய்க்காமல் எட்ட நின்றபடி மாற்றுக் கருத்துகளையே வெளிப்படுத்தி வந்த முஸ்லிம் அரசியல் தரப்புகள், இன்றைய சூழ்நிலையில் மாத்திரம் தமிழர் தரப்பு போராட்டத்துக்கு வெளிப்படையான ஆதரவளிப்பதன் காரணம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்களும் எழாமலில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இவ்வாறிருக்கும் நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசியல்வாதிகள் இருவரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரை இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். மாகாணசபை முறைமையின் அவசியம் மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தத் திடீர் சந்திப்புக்கான உண்மையான நோக்கம் என்னவென்பது புரியாத புதிராக உள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் இருவரை இந்திய  இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் தனித்தனியாகச் சந்தித்திருப்பதுதான் சிந்திக்க வைக்கின்றது.
 

Comments