மாகாணசபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடிய 1000 ரூபா சம்பள உயர்வு போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடிய 1000 ரூபா சம்பள உயர்வு போராட்டம்!

2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2002ல் 19.8 விகித அடிப்படை சம்பள  அதிகரிப்பையும், 2004 ல் 11.57 விகித அதிகரிப்பையும், 2006 ல் 25.92 விகித  அதிகரிப்பையும், 2007 இல்17.65 விகித அதிகரிப்பையும், 2009 இல் 42.5 விகித  அதிகரிப்பையும், 2011 ல் 33.33 விகித அதிகரிப்பையும், 2013ல் 18.42 விகித  அதிகரிப்பையும்,  2016 இல் 11.11 விகித அதிகரிப்பையும், 2019ல் 40 விகித  அதிகரிப்பையும் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்  மூலமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

அரசு உறுதியளித்துள்ளபடி 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க  வேண்டும் என பந்தை அரசின் பக்கம் திருப்பி விட்டுவிட்டு தொழிற்சங்கங்கள்  அரசின் பெறுபேறுகளுக்காக காத்துக் கொண்டிருக்க தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.

அரசாங்கம் தோட்டங்களை நடத்திவந்த காலத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ப தமது சம்பளத்தை பெற்றுவந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1992 முதல் தோட்டங்களை பொறுப்பேற்ற பிராந்திய கம்பனிகள் வாழ்க்கை செலவிற்கேற்ற ஊதியத்தை நிறுத்திவிட்டு ஓர் உடன்பாட்டின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்க உத்தேசித்து புதிய திட்டத்தை முன்வைத்தன. திட்டத்திற்கு தொழிற்சங்கங்களும் சம்மதித்தன. இதை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் சம்பள நிர்ணய சபை முறைமைக்கு ஆப்பு வைத்துவிட்டு புதிய கூட்டு ஒப்பந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கினர்.  

முதலாவது கூட்டு ஒப்பந்தம் 13.02.1998 ல் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே செய்து கொள்ளப்பட்டது. அப்போது அடிப்படை சம்பளம் மற்றும் தேயிலை விற்பனை அலவன்ஸ் என்பதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம், பின்னர் வந்த காலங்களில் மூன்று நிபந்தனைகளுடன் சம்பளத்தை பெற வழிவகுத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வந்தது.

பின்னர் இக்கூட்டு ஒப்பந்தமானது நான்கு நிபந்தனைகளாக உருவெடுத்து தொழிலாளர்களின் தலை விதியையே மாற்றியமைத்தது. இது பல வழிகளிலும் தொழிலாளர்களை சிக்கலுக்கு இட்டுச் சென்றதுடன், சம்பளம் பெறும் முறையில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இக்கூட்டு ஒப்பந்தம் பாரிய விமர்சனத்திற்கு உள்ளனது.  

1992 இல் தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்றபோது ஒரு தொழிலாளியின் நாள் சம்பளம் ரூ.72.24 சதமாக காணப்பட்டதுடன், வாழ்க்கை செலவிற்கேற்ற கொடுப்பனவும் கிடைக்கப்பெற்றது. அத்துடன் தோட்டத்திலேயே தொழிலாளர்களின் அனைத்து சேவைகளும் செய்து கொடுக்கப்பட்டது. தற்போது சம்பளத்தை தவிர வேறு எவ்வித சேவைகளும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுவதில்லை. முதலாவது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அடிப்படை சம்பளமாக ரூ.83/- பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது கூட்டு ஒப்பந்தத்தில் 101 ரூபாவை பெற்றுக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை செலவிற்கேற்ற கொடுப்பனவு நிறுத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதன் அதிகரிப்பு விகிதம் மிகவும் செற்ப தொகையாக காணப்பட்டதுடன், அடிப்படை சம்பளம், தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவு மற்றும் வரவிற்கேற்ற கொடுப்பனவு என்ற பதத்தின் கீழ் சம்பளம் தீர்மாணிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிகமான தொழிலாளர்களினால் தொடர்ந்தும் வரவிற்கேற்ற கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியவில்லை.  

2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2002ல் 19.8 விகித அடிப்படை சம்பள அதிகரிப்பையும், 2004 ல் 11.57 விகித அதிகரிப்பையும், 2006 ல் 25.92 விகித அதிகரிப்பையும், 2007 இல் 17.65 விகித அதிகரிப்பையும், 2009 இல் 42.5 விகித அதிகரிப்பையும், 2011 ல் 33.33 விகித அதிகரிப்பையும்,2013 ல் 18.42 விகித அதிகரிப்பையும், 2016 இல் 11.11 விகித அதிகரிப்பையும், 2019ல் 40 விகித அதிகரிப்பையும் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.  

ஒவ்வொரு கூட்டு ஒப்பந்தங்களுக்கு இடையிலான கால இடைவெளிகள் தொழிலாளர்களுக்கு பெரிதும் பாதிப்பானதாகவும், முதலாளிமார் சம்மேளனத்திற்கு சாதகமானதாகவும் அமைந்ததை எவரும் மறுக்க முடியாது, ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளோ, ஏனைய விசேட சலுகைகளோ வழங்கப்படவில்லை. ஆனாலும் ஆரம்ப காலத்தில் கூட்டு ஒப்பந்த தாமதத்திற்கான கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.  

இடைவெளியை தோற்றுவித்த காலத்தின் அளவு சுமார் 28 மாதங்களுக்கு மேலானதாக கணக்கிட முடிவதுடன், இது இன்னுமொரு கூட்டு ஒப்பந்தத்துக்கான காலமுமாகும். எனவே மற்றுமொரு சம்பள அதிகரிப்புக்கான காலத்தை தொழிலாளர்கள் இழந்து விட்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு கூட்டு ஒப்பந்த காலமும் நிறைவடைவதற்கு முன்னரே தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றமையும் அதனை குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய முடியாது இறுதியில் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும், அரசின் தலையீடுகளையும் உள்ளீர்த்து இறுதியாக திருப்தியற்ற ஒரு சம்பள உயர்வையே தொழிலாளர்கள் பெற்று வந்துள்ளனர்.  

கடந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையானது 27 முறை பேசப்பட்டதாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தமானது எதிர்வரும் 28.01.2021 திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டாது திகதி குறிப்பிடப்படாது பேச்சுவார்த்தை பின் போடப்பட்டுள்ளதுடன், அரசு உறுதியளித்துள்ளபடி 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பந்தை அரசின் பக்கம் திருப்பி விட்டுவிட்டு தொழிற்சங்கங்கள் அரசின் பெறுபேறுகளுக்காக காத்துக் கொண்டிருக்க தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.  

இந்நிலையில் சில எதிர்தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்காக போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டு தமக்கு இதில் தலையிட முடியாதென்றும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களே இதனை தீர்க்க வேண்டும் என்றும் பாராளுமன்ற அமர்வுகளில் அரசு உறுதியளித்த 1000 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் செய்தியாக கூறிவிட்டு வாளாவிருக்கின்றன. இவர்களிடமும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களிடமும் எவ்வித அடிப்படை தத்துவங்களும், புள்ளி விபரங்களும் கிடையாது என்பதும் 1000 ரூபா அடிப்படை சம்பளமாக கோருவதற்க்கு தத்துவார்த்த வாதங்கள் முன்வைக்கப்படுவதில்லை என்பதும் அனைவராலும் முன்வைக்கப்பட்டு வரும் மற்றுமொறு குற்றச்சாட்டாகும்.  

இந்த விடயத்தினை பல ஊடகங்களும் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளதுடன், சமூக ஊடகங்களில் இது தொடர்பான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அத்துடன் இது சம்பந்தப்பட்ட நபர்களும் ஏனைய சிலரும் கடந்தகால கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தவறான கருத்துக்களையும், செய்திகளையும் பரப்பி வருவதுடன் தமக்குள்ளேயே கருத்து மோதல்களை தொடுத்திருப்பதானது முதலாளிமார் சம்மேளனத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வை சாதகமாக முடிப்பதற்கான பக்கபலத்தை அல்லது தூண்டுதலை ஏற்படுத்துவதில் அனைவரும் தவறியுள்ளனர்.

2013 ம் ஆண்டு செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பு 2015 ம் ஆண்டு 1000 ரூபா கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக 19 மாதங்கள் போராடிய தொழிலாளர்களும் அதற்காக குரல்கொடுத்த அனைவரும் இறுதியில் பாரிய ஏமாற்றத்தையே சந்தித்தனர்.

வெறும் 50 ரூபா அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து 500 ரூபா அடிப்படை சம்பளத்தையும் மேலும் மூன்று நிபந்தனைகளுடனான அடிப்படையில் வெறும் 730 ரூபா வேதனத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக பெற்றுத்தந்தமை தொழிலாளர்களை கடுமையாகப் பாதித்தது. தொழிலாளர்கள் அக்காலத்தில் செய்த எட்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தினாலும், நீண்டகால இழுத்தடிப்பாலும் 19 மாதத்திற்கான நிலுவைப் பணத்தையும், வேலை நிறுத்த காலத்திற்கான சம்பளத்தினையும் இழந்தனர்.

இத்துடன் கம்பனிகளின் சூழ்ச்சிகரமான முடிவால் கூட்டு ஒப்பந்தம் மீறப்பட்டு, வெளியார் உற்பத்தி முறை (Out grower System), ஒப்பந்த முறையிலான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படல், வெளியாட்களை பணிக்கு அமர்த்துதல், பயிர் நிலங்கள் பராமரிக்கப்படாமை, மீள் நடுகை கைவிடப்படல் போன்ற பாதகமான அம்சங்களுடன் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுமுழுதாக தோட்டங்களில் முடக்கப்பட்டன.

தற்போது தோட்டங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை மாத்திரமே இந்த பிராந்திய கம்பனிகள் எதிர்பார்த்து தோட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்கள் தோட்டங்களை பொறுப்பேற்ற 1992 ஆம் ஆண்டிற்கு பின்பு சுமார் 500 கும் அதிகமான தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது.

தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கும் வேறு வேலைகளுக்கும் சென்றுள்ளதும், புதிய பரம்பரையினர் இத்தொழில் துறையில் ஆர்வம் காட்டுவதுமில்லை.

அதோடு தோட்டங்களில் உப குத்தகை செயற்பாடுகள், வளங்கள் சூறையாடப்படுதல், தோட்ட பங்களாக்கள் விடுமுறை இல்லங்களாக மாற்றமடைந்துள்ளமை, சட்ட விரோத காணி கொள்ளையடிப்புகள் மற்றும் காணியை வெளியாருக்கு விட்டுக் கொடுத்தல், வெளி முதலீட்டாளர்களுக்காக தோட்டக் காணிகள் துண்டாக்கப்பட்டு விற்பனை செய்தல், பாரிய மரங்களை தறித்து விற்பனை செய்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய பல மில்லியனுக்கும் அதிகமான EPF மற்றும் ETF கொடுப்பனவுகளில் பல மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தாதிருத்தல், தொழிலாளர்களின் சேவைக்கால பணத்தினை நீண்ட காலமாக வழங்காதிருத்தல் போன்றவை இப்பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வருகைக்கு பின்னால் ஏற்பட்டிருக்கும் பிரதான பிரச்சினைகளாகும்.

தற்போது தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களும் திருப்தியற்ற மனப்பாங்குடன் தொழில் செய்வதும் சம்பள பிரச்சினையால் பலர் இத்தொழிலை கைவிட்டு வேறு தொழில்களை நாடிச் செல்வதும் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். மலையகக் கட்சிகளோ ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதை விட தமது அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாகவும் தம்மையும், கட்சியையும் காப்பாற்றுவதிலேயே உள்ளன. எது எப்படியிருப்பினும் தொழிற்சங்கங்களின் 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 700ரூபாவை அடிப்படை சம்பளமாகவும், உற்பத்தித் திறன் கொடுப்பனவு 150 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 150 ரூபா மற்றும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன 105 ரூபா எனவும் கணக்கிடப்பட்டு மொத்தம் 1105 ரூபா என்றொரு தொகையை தமது தீர்மானமாக முன்வைத்துள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையான 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலே கூறப்பட்டுள்ளபடி கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பள அதிகரிப்பு எவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கலாம். அதன் அடிப்படையில் தற்போதைய அடிப்படை சம்பளத்தை 300 ரூபாவால் உயர்த்தப்படும் பட்சத்தில் மாத்திரமே 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைப்பது சாத்தியமானதாகும்.ஆனால் பலவீனமான நிலையில் உள்ள சங்கங்களால் இது சாத்தியமாகுமா?

இந்த இழுத்தடிப்பானது மேலும் தொழிலாளர்களை பாதிக்கும் என்பது உண்மை. கம்பனிகள் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தால் (TRUST) தொழிலாளர்களுக்கு முன்னெடுக்கப்படும் நலன்புரி வேலைத்திட்டங்களுக்காக செலுத்தவேண்டிய சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக்கூட கடந்த காலங்களில் கம்பனிகள் செலுத்தாதுள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் இப்பணத்தை செலுத்துவதாகவே கம்பனிகள் தங்களது வரவு செலவை காட்டுவதாகவும் புகார் கூறப்படுகின்றது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயம் தொழிற்சங்கங்களுக்கும் அதனை சார்ந்த அமைப்புக்களுக்கும் உள்ளது. தற்போதுள்ள அரசியல் மற்றும் நோய்த்தொற்று சூழலை காரணம் காட்டி மேலும் இதனை பின்போடக்கூடாது என்பது அனைவரதும் வேண்டுகோளாகும்.

இதற்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அடுத்துவரும் மாகாண சபை தேர்தல்களில் இதன் பிரதிபலிப்புகளை காணமுடியும் என்பது முக்கியமானது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சினைக்கு சரியான மாற்றுத் திட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பாக அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. இது மாத்திரமே இவர்களது எதிர்கால இருப்பை தொடர்ச்சியாக தக்க வைக்கும்.

எஸ்.டி.கணேசலிங்கம்
(மலையக மக்களின் காணி
உரிமைகளுக்கான இயக்கம்)

Comments