அவன்! | தினகரன் வாரமஞ்சரி

அவன்!

“அல்லாஹ்ட காவலா, வந்து சேருங்க ஏண்ட தங்க மகன்” ரிஜியிடம் கூறிவிட்டு, தனது கையடக்கத் தொலைபேசியின் தொடர்பை நிறுத்தினார். றிஜியின் தாயார் பாத்திமா! ரிஜி வெளிநாட்டிலிருந்து, அடுத்தமாதம் இலங்கை வருவதாக அவரிடம் கூறினான்.

றிஜி, ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது தந்தை ஒரு முச்சக்கரவண்டிச் சாரதி. கூலிக்குத்தான் வேறொருவரிடம் தொழில் புரிபவர். “ஓட்டோ நயீம்நானா”, என்றால், ஒரு சின்னப் பிள்ளைகூட, அவரைக்காட்டி விடும். ஏனெனில் அந்தப் பகுதியிலே, எப்போது முச்சக்கரவண்டிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதோ, அப்போதிருந்தே அவர் முச்சக்கரவண்டிதான் செலுத்துகிறார். 1990ஆம் ஆண்டிலே தனது தொழிலை ஆரம்பித்தவர், இறையருளால் இன்றுவரை அதனைச் சிறந்த முறையில் செய்து, ஊர் மக்களிடம் நல்ல ஆட்டோக்காரர் எனப் பெயரெடுத்தவர்.

நயீம் நானாவுக்கு எல்லாமுமாக ஐந்து பிள்ளைகள், அதிலே மூத்த பிள்ளைகள் இருவரும் ஆண்கள், மற்றைய மூவரும் பெண்கள், தன்னால் இயன்றவரையும், பிள்ளைகளைப் படிப்பித்தார். தனது சொற்ப உழைப்பை, அவரின் மனைவி பாத்திமாவிடம் பத்திரமாகத் தினமும் கொடுப்பார்.

அவளும் அதனைப் பொக்கிஷமாக எண்ணிச் சிக்கனமாகக் குடும்பத்தி்காகச் செலவு செய்வாள்.
“ஆனை பிடிப்பவன் கையில் என்ன இருக்கு...

பானை பிடிப்பவளின் கைகளில்தான் பாக்கியமே அடங்கி இருக்கு” என்பார்கள். அதுபோல் பாத்திமாவும், அந்தச் சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தை, கஷ்டப்பட்டு, எந்தக் குறைகளுமே ஏற்படாமல் பார்த்துக் கொண்டாள்.’

நயீம்நானாவும் தனது படாமல் பார்த்துக் கொண்டாள்’ நயீம் நானாவும் தனது மனைவியை நினைக்கும்போது, மனதால் பெருமைப்பட்டுக்கொள்வார்.

குடும்பத்தில் மூத்த மகன்தான் றிஜி, உயர்தரப் பரீட்சை மூடிவுகள் வெளியானபோது, அவன் இரண்டு பாடங்களில் மட்டுமே சித்தியடைந்திருந்தான். மேற்கொண்டு படிப்பதைத் தொடர முடியாத காரணத்தால், படிப்பை நிறுத்தி ஒரு தொழிலைச் செய்து, தனது தந்தையின் சிரமத்தில் பங்கெடுக்க முடிவெடுத்தான்.

றிஜி ஒரு அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். அதர்க்காக, அரசியலே தெரியாத அவன், தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்து, அவர்களின் பின்னால் அலைந்தெல்லாம திரிந்தான். பயனேதுமில்லை!

றிஜி ஒரு அரசவேலைக்கு, நேர்முகப் பரீட்சைக்காகச் சென்று வந்தான். அந்த வேலைக்கான அத்தனை தகுதிகளும், அவனுக்கிருந்தன. இருந்தாலும், தகுதியற்ற ஒருவன், அந்த வேலையைத் தனது பணத்தால், தனதாக்கிக் கொண்டான். காத்திருந்த றிஜிக்கு அந்தச் சேதி ஆத்திரத்தையும் வெறுப்பையும், உண்டு பண்ணியது, இருந்தாலும் என்ன செய்வது?
காலாகாலம், நடக்கும் கதைதானே, உலகில் நடந்து கொண்டேயிருக்கிறது என்பதை நினைத்து, தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டான்.

அந்தச் சமயத்தில்தான் வெளிநாட்டில் ஒரு ‘சுப்பர் மார்க்ட்’ வேலை அவனைத்தேடிக் காலடிக்கே வந்தது. தெரிந்த ஒருவர் அவனிடம் வந்து சொன்னார். ஒரு மாதத்தில் போகலாம். சம்பளமாக முதலில் ஐம்பதாயிரம் ரூபாய்கள் மாதச் சம்பளமாகவும், ஆறுமாதங்களின் பின்னர் அதில் அதிகரிப்பு ஏற்படுமென்றும், விசா, டிக்கட் அனைத்தும் இலவசம் என்றும் ஆசை காட்டிவிட்டுச் சென்றார்!

றிஜி சற்று யோசித்தான். பின்பு தனது பெற்றோரிடம் தான் வெளிநாடு போகவா, இல்லையா? எனக் கேட்டான். அவர்களோ பிள்ளையைப் பிரிவதர்க்கு மனமில்லாஹ் “இங்கே ஒரு வேல கெடச் சாப்பாருப்பா... இல்லாட்டி நாம குடிக்கிற கூழோ, கஞ்சியோ.... குடிச்சிக்கிட்டு ஒண்ணாவே இருப்போம்போ” என்று சொல்லிவிட்டார்கள். றிஜிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாப்பாவுக்கும் ஐம்பது வதையும் தாண்டிவிட்டது. பாவம், இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான், அவரும் ஓய்வு ஏதுமில்லாமல், தங்களுக்குக்காகக் கஷ்டப்படுவார்? என்பதை நினைக்கும் போது, அவனுக்கு மனதுக்குப் பாரமாகவும், வேதனையாகவுமிருந்தது.

குடும்ப வேலைப் பழுவால் ஓடாய்த் தேய்ந்ததும்; மனதிலே எந்தச் சளைப்போ; சலிப்போ இல்லாமல், தங்கள் வேலைக்காரியாகத் தினமும் வேலைசெய்யும், தனது உம்மாவை, என்றைக்கு நிம்மதியாக அமரச் செய்வது? தனக்குக் கீழுள்ள தம்பி,தங்கைமார்களை, எவ்வாறு செளிப்பாக வாழவைப்பது? அவர்களின், பொன்னான எதிர்காலம் போன்றன, றிஜியின் மனக் கண்களுள், கடல் அலைகள்போல, மாறி மாறிவந்து மோதிமோதிச் சென்றன.

நான்கைந்து நாட்கள் கடந்து சென்றன. நடந்து செல்லும் பாதைகளிலெல்லாம், றிஜி இதைப் பற்றியே சிந்தித்தான். நண்பர்களுடன் கூடி ஆலோசித்தான். “மச்சான் றிஜி... நீ வெளிநாடு போனாக்கா...ரெண்டு மூணு வருஷத்துல... நாட்டுக்கு வருவேதானே... அப்போ; ‘றெண்ட்’ காரொண்டு கொண்டுகிட்டுவாடா.... நாம எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து ஜாலியாச் சுத்தலாம்” அவனின் நண்பர்களிலொருவன் அவ்வாறு சொன்னான்.

“மச்சான் றிஜி.... நீ வெளிநாடு போனப்புறம், நல்ல இடமா... நல்ல’ ‘ஜொப்பாப்’ பாத்து... எங்களுக்கும் விஷா அனுப்புடா... நாங்களும் ஒன்கூடவே வந்துவிடுறம்” இன்னுமொரு நண்பன் அப்படி ரிஜியிடம் சொன்னான். அவனைப்போன்று படிப்பிலே, அரைகுறையாகச் சித்தியானவர்கள்தான், அந்த நண்பர்களும்.

நாட்கள் கடந்து, ஒரு வாரத்தை எட்டியது. ரிஜியின் உள்ளம் வெளிநாட்டுத் தொழிலை, எதிர்காலக் கற்பனைக் கனவுகளுடன் சேர்த்துப் பார்க்கத் தொடங்கியது. அதன் எதிரொலியாக, மனம் முடிவு கட்டியே விட்டது. ரிஜிவெளிநாடு போகவெனத் திடமாக நண்பர்களிடம் சொன்னான்.

வேலைதருவதாகச் சொன்ன உறவினரை நாட, அவரும் மிகவும் மகிழ்ந்தவராக, ரிஜி வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை, மிகவும் துரிதமாகச் செய்தார்.

சில நாட்களே ஓடி மறைந்தன. ஒருநாள் வெள்ளிக்கிழமை மாலை, தனது பெற்றோர்; மற்றும் நண்பர்களனைவரும், விமான நிலையம்வரை சென்று வழியனுப்ப, ரிஜி வெளிநாடு பயணமானான்.

வெளிநாடு சென்ற ரிஜி, ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டான். புதிய இடம்; புதிய மனிதர்கள்; தெரியாதவேலை; விளங்காத பாஷைகள், எல்லாமும் அவனை உண்மையாகவே திணற வைத்தன. அனைத்துக்கும் மேலாக பெற்றோர்; குடும்பத்தினர்; நண்பர்கள் போன்றோரின் பிரிவுதான் அவனைப் பெரிதும் மனவேதனைப் படுத்தியது.

வீட்டுக்குவரச் சற்றுத் தாமதித்தால், எத்தனையோ தடவைகள் கைபேசி அழைப்பை எடுக்கும் உம்மா; இரவு ஒன்பது மணியைத் தாண்டிவிட்டால், நுளம்புக்கடியைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டின் கடப்படியிலேயே, தனக்காக, எவ்வளவு நேரமாயினும் காத்துக் கிடக்கும் வாப்பா; தனது கலகலப்பான பேச்சையும், நகைச் சுவைகளையும் மனம் குளிரக் கேட்டுவிட்டுத் தினமும் மகிழ்ச்சியுடன் துயிலச் செல்லும், சகோதரன், சகோதரிகள்.

வீட்டிலும், ஊரிலும் தான் அன்றாடம் அநுபவித்த அந்தப் பாசச் சுகங்களை நினைக்கும் கணமெல்லாம், ரிஜியின் இருவிழிகளும் அருவியாகப் பெருக்கெடுத்தே விடும். “என்னதான் கஷ்டம் வந்தாலும்...இந்த வெளி நாட்டுக்கே வரப்போடாது.... ஜெயில்ல இருந்தாக் கூட, சொந்தக்காரங்கள் பாத்துட்டுப் போவாங்க... இங்க வந்தா?” இப்படி அவனுக்குள் சொல்லிச் சொல்லியே, நிதமும் அவன் கண்ணீர் வடிப்பான்.

நாட்கள் மிக வேகமாகப் பறந்தன. காலப் போக்கிலே ரிஜியும், வெளிநாட்டு வாழ்க்கைக்குத் தன்னையும், இசை வாக்கிக் கொண்டான்.

இப்போதெல்லாம் அவன் தனது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். வேலைக்குச் செல்ல அழகிய சொகுசுக்காரர்; கொண்டாடிக் குதூகலிக்கப் பல நண்பர்கள்; வேண்டியதை அநுபவிக்கக் கை நிறையப் பண நோட்டுகள்! ரிஜி வெளிநாடு வந்தும் மூன்று வருடங்கள்.

அவனுக்கோ தான் வெளிநாடு வந்தது, நேற்றுப் போலிருந்தது. அத்தனை வேகமாக நாட்கள் பறந்து விட்டன.

தன் உழைப்பையெல்லாம் மாதா மாதம் வீட்டுக்கு அனுப்பி விடுவான். அந்தப் பணத்தையெல்லாம் சேகரித்து, அவனின் பெற்றோர், தாங்கள் வாழ்ந்த சிறிய குடிசையை அகற்றிவிட்டு, பெரிதாய் ஓர் வீட்டைக் கட்டினார்கள். இன்னும் ஒரு மாதத்தினுள் ரிஜி ஊருக்கு வந்ததும், அந்தப் புதிய வீட்டினுள் அவனின், மூத்த தங்கைக்குத் திருமணம் நடக்க இருக்கிறது.

ரிஜி தனது கையிலே, தற்போதைக்கு, ஐந்து இலட்சம் ரூபாய்களை சேகரித்துத் தனக்கென்று பத்திரப் படுத்திவைத்திருந்தான். தான் நாட்டுக்குப் போகும் நாட்களையும்; அங்கு சென்று, நண்பர்களுடன் காரிலே சுற்றித் திரியும் நாட்களையும்; தங்கையின் திருமணக் காட்சியையும், நினைத்து நினைத்து, அவனின் உள்ளம் பூரித்துப் போனது.

எண்ணற்ற இன்பக் கனவுகளோடு, நாட்களை எண்ணிக் காத்திருந்தான். அந்த வேளையில் தான், தனது தாயாரின் தொலைபேசி அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் கைபேசியை எடுத்தவனுக்கு, தாயார் சொன்ன வார்த்தைகளும், சேதியும் மனதை அப்படியே சற்று ஆடவைத்து விட்டது. தன் மனக் கோட்டைகள் சரிந்து வீழ்ந்தன. எதிர்பாராத அதிர்ச்சியோடு தொலைபேசி அழைப்பை நிறைவு செய்தான்.

தனது தங்கைக்குப் பேசி வைத்துள்ள, மாப்பிள்ளையின் தந்தைக்கு, இதய வருத்தமாம். உடனடியாக, அறுவைச் சிகிச்சைக்காக ஏழு இலட்சம் ரூபாய்கள் தேவையாம். கையிலே மாப்பிள்ளையிடம், இரண்டு இலட்ச ரூபாய்கள் இருக்கின்றதாம். இன்னும் ஐந்து இலட்ச ரூபாய்கள், உடன் தேவையாம். அதற்கு எப்படியேனும், வழிசெய்யுமாறு தான், ரிஜியின் தாயார், ரிஜியிடம் நம்பிக்கையுடன் வேண்டினார். ரிஜியும் தாயாரிடம், முயற்சிப்பதாகச் சொல்லிவிட்டான்.

ரிஜி சிந்தித்தான். அன்றிரவெல்லாம் நன்றாகச் சிந்தித்தான். தனது தங்கையும் கணவரும் சந்தோசமாய்க் கைகோர்த்துக் கொண்டு; தமது குழந்தைச் செல்வங்களோடு, குதூகலமாகப் பூங்காவிலே, சுற்றித் திரிந்து, மகிழும் காட்சி அவனின் மனக் கண்களில் ஒரு திரைப்படக் காட்சிபோன்று தெரிந்தது. அதைக்கண்டு அவனின் உள்ளம் பூரித்தது.

காலைப் பொழுது அழகாய்ப் புலர்ந்தது. ரிஜி, மகிழ்ச்சியுடன் காரில் ஏறினான். கார், வங்கியை நோக்கிப் பறந்தது. காரின் வேகத்தை விட, அவனின் மனதிலிருந்த அத்தனை ஆசைக் கனவுகளும், அவனுள்ளிருந்து வேகமாக வெளியே பறந்து, சென்று மறைந்து விட்டன.

ஐந்து இலட்சம் ரூபாய்களை, தனது உம்மாவுக்கு அனுப்பிவிட்டு வங்கியை விட்டு வெளியே வருகிறான். ரிஜியின் உள்ளம் இப்போது, பழைய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; அமைதியுடன் மகிழ்கிறது. வீணாகக் கரைய இருந்த, தனது, உழைப்பினை இறைவன், மேலான ஓர் மனித உயிரைக்காக்கத் திருப்பி விட்டதை நினைத்து; ஆச்சரியப்பட்டு; இறைவனைப் புகழ்ந்தவாறே, மெதுவான வேகத்தில், காரைச் செலுத்துகிறான். அவனின் உள்ளமும் இப்போது, அமைதியான நீரோட்டம்போல, புதிதாக மாறியிருந்தது! ஆசை என்பது யாருக்கும் வருவதுதான். அதை, எவ்வாறு அமைப்பதென்பதோ படைத்தவனின் கைகளில் தான்!

நிந்தவூர்
எம்.ஐ. உஸனார்ஸலீம்

Comments