கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

“நம் பயம் எதிரிக்குத் தெரியும். நம் அமைதி அவனுக்குக் குழப்பம். குழப்பத்துடன் இருப்பவன் எப்போதும் ஜெயிப்பதில்லை.”  

--- இப்படி நறுக்குத் தெறித்தாற்போல நாலு வரிகளை கொழும்பு  ‘கண்ணகி’ கலாலயம்’ நாடகக்குழுவை அடையாளமிட்டு  ஏ. இளங்கோ ஜி. சுதாகர் என்ற  ஒரு துடிதுடிப்பானவர் முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கிறார்.  

இந்த இளங்கோவை ஆரம்பத்தில் ஒரு மேடை நாடகக் கலைஞராகவே  சமீபத்திய அரச நாடக விழா நாடகம் ஒன்றில் நடிக்க கண்டேன். பின்பு சில  வாரங்களில் ‘மித்திரன்’ வார இதழைப் புரட்டியபொழுது ‘கலாவானம்’ என்றொரு  பத்தி எழுத்துப் பக்கமும் வழங்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்!  

“இந்தக் கலைஞர் பேனாவும் பிடிப்பாரா?” என வியந்து படித்த பொழுது உண்மையிலேயே பிரமித்துப் போனேன்.  

எழுத்தில் சுத்தம், கண்ணியம், நிதர்சனம் உரைத்தல், நியாயம் பதித்தல் சகலமும் இருக்கக் கண்டேன்.  

மாதிரிக்கு 17/01/2021ல் வெளி யான” ந(ம)லிந்து போன விருதுகள்” தலைப்பில் இடம்பெற்றுள்ள வரி கள் சிலவற்றை அபிமானிகள் பார்வைக்கு வழங்குகின்றேன்.  

விருதுகள் என்பது படைப்புக்களை தோற்றுவிக்கவும் படைப்பாளிகளை  ஊக்குவிக்கவும் வழங்கப்படுவதாக அமையவேண்டும்.

ஆனால், அண்மைக்காலமாக சில நிகழ்வுகளை காணும்போது விருதென்பது “வியாபார பொருள், நட்பின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படும் சன்மானம்” போலுள்ளது.  

விருது என்பது உங்கள் திறமையை ஊக்குவிக்க வழங்கும்  அங்கீகாரம். இதனை சம்பந்தமே இல்லாதவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு  மத்தியில் வழங்குவதன் காரணம் என்ன? அது பணப் பரிவர்த்தனையாக இருக்கலாம்.
கைகூலிகளாக இருக்கலாம். வேறெந்த வித இணக்கப்பாடாகவோ இருக்கலாம்.. எதுவாக  இருந்தாலும் ஒன்றுமே தெரியாதவரை எல்லாம் தெரிந்தவராக காட்டுவது தவறுதானே!  

“அத்தோடு தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் சிலருக்கு அத்துறையில் அனுபவம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியதே!   ஒரு சிறந்த ஆற்றல் மிக்கவரைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல், அறியாமலே துரோகம் செய்துவிடுகிறார்கள்.  
ஆனால் உள்நோக்கம் என்னவென்று பார்த்தால் கசப்பான உண்மைகளே தெரியவரும்”  

-இவ்வாறாக, கொழும்புப் பகுதி விருதுகள் பற்றி ஒரு முழுப்பக்கம்  குத்திக் காட்டியிருக்கும் கலைஞர் இளங்கோ மிகுந்த பாராட்டுக்குரியவர். எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவராகவோ, முகஸ்துதி செய்து பொய் முகம் காட்டுபவராகவோ அவரில்லை.  

‘உடனே, எனக்கு இன்னொருவர் அதி லும் நங்கை ஒருவர் சரியாக ஐந்து  மாதங்களுக்கு முன் 2020 ஓகஸ்ட் 30, ‘செந்தூரம்” தினகரன் வாரமஞ்சரி இலவச  அன்பளிப்பில் கலைஞர் கே. ஈஸ்வரலிங்கத்திற்கு வழங்கியிருக்கும் நேர்காணல்  பதிவுகள் மனத்திரையில் படுபடு வேகத்தில்..  பத்திரப்படுத்தியிருந்த ‘செந்தூரம்’ 06, 07 ஆம் பக்கங்களைப் புரட்டுகிறேன், பார்க்கிறீர்களா?  

அதில் இப்படியொரு கேள்வி:  

“இலக்கியத் துறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்?”  

பதில்: “விருது வழங்கும் ஒரு தனியார் அமைப்பு. பத்திரிகைகளில் ஆய்வு  நூல் மற்றும் மொழி பெயர்ப்பு நூல் போன்றவற்றுக்கு விருது கொடுப்பதாக தகவல் தந்து, நூல்களை அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார்கள்.  

“அதற்கிணங்க நானும் எனது ‘விடியல்’ நூலைக் குறிப்பிட்ட  அமைப்புக்கு நேரில் கொண்டு போய்க் கொடுத்தேன். சில நாட்களில் தொடர்பாளர்  என்னை தனிப்பட்ட ரீதியில் அழைத்து ஒரு நேர்காணல் செய்தார்.  

அப்பொழுது,   முழுக்க முழுக்க எனது வருமானம், குடும்பப் பொருளாதார நிலைமை,  தந்தையின் தொழில், ஆண் சகோதரர்களின் தொழில், அதிலும் வெளிநாட்டில் யாராவது  குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்களா போன்ற கேள்விகள் முக்கிய பேசு பொருளாக  அமைந்தன. அவருக்கு சாதகமாக எந்தப் பதிலும் அமையவில்லை.  

நான் மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் உண்மையைச் சொன்னேன்.  

“அவரது பெயரை எனது விடியல் நூலில் குறிப்பிடவில்லை என்றும் கடிந்துகொண்டார்.  

“ஆகமொத்தத்தில் என் “விடியலுக்கு விடியலே " ஏற்படவில்லை.  

நூல் தேர்வுக் குழுவுக்கே போக வில்லை. இதுபற்றி மிகவும் உறுதியாகத் தெரிந்து கொண்ட நான், அவரிடம் எனது நூல் தொடர்பாக வினவினேன்.  

அவர் மிகவும் காரசாரமாகப் பேசினார். “உங்கள் நூலை தேர்வுக்  குழுவுக்கு அனுப்புவோம் அல்லது அனுப்பாமல் விடுவோம்.

அதனை முடிவு செய்வது  நாங்கள். அத்தோடு நாங்கள் நினைத்தவர்களுக்குத்தான் விருதும்  கொடுப்போம்” என்றார்.

இதனை ஒரு கேள்வியாக கேட்டுக்கொண்டு நீங்கள் வருவதுதான் சரியில்லை” என்றும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.  

“அவர்கள் விரும்பியவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கட்டும்.  அதில் பிரச்சினையில்லை. ஏன், அதைப் பத்திரிகைகளில் பெரிசாகப் போட்டு புத்தகங்களைக் கேட்டு ஏமாற்றுகிறார்கள்?  

என் நூல் தேர்வுக்குழு பார்வைக்குப் போய் விருது கிடைக்காது போயிருந்தால் அது நியாயமானதே! நடுவர்கள் ஒருவரும் என் நூலைக் கண்ணாலும்  காணவில்லை என்பதுதான் என் வருத்தம்.  

“ஏதோ ஒரு பொருளாதார காரணத்தால், குறிப்பிட்ட நபரின் நூல்  தரமாக, தகுதியாக இல்லாவிட்டாலும் விருது கொடுப்பார்கள் என்றே நான்  முடிவுக்கு வருகிறேன். இந்தப் புதுமையான அனுபவத்தை இன்றும் என்னால் மறக்க  முடியாதுள்ளது.”  

ஊடகவியலாளர், கலைஞர் ஈஸ்வரலிங்கம் கேட்டது சாதாரணமான கேள்விதான், “இலக்கியத்துறையில் மறக்க முடியாத சம்பவம் எது?” என்று.  

கிடைத்த பதிலோ மிகமிக அசாதாரணமானது. இலக்கியத் துறையில்  ஊடுருவிக் கொண்டிருக்கிற ஒன்றை, அனுபவரீதியில் அம்பலத்தில்  ஆடவைத்திருக்கிறார் ஒரு பெண்மணி!  

"யார் இவர்?" தென்னிலங்கை, மண்ணின் செல்வி “வெலிகம றிம்ஸா  முஹம்மத்” என்று மட்டும் தெரிவித்தால் போதும். இருந்தாலும் மேலும் இரண்டொரு  வரிகளில் அறிமுகம். “பூங்காவனம்” இலக்கிய சஞ்சிகை நடத்தும் இலட்சியவாதி. 

இலக்கியச் செயற்பாட்டாளர். கவிதைத் துறையில் ஓரிடம். நல்ல சமூக ஆர்வலர். திறனாய்வாளர். ஊடகவியலாளராகவும் மிளிர்ந்து வார இதழொன்றில், மறக்கப்பட்டவர், மறக்கப்படாதவர்கள் அனைவரையும் வெளிச்சமிட்டுவரும் ‘ஒரு  நேர்காணல்’ பெண்மணி!.  

இவ்வாறு இலக்கியத்துறைக்கே வாழ்வைத் தியாகித்துக் கொண்டு,  பெற்ற தாயை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் (2003) இழந்து விட்ட சோக வடுக்கள்  மாறா நிலையில்  தொழினிமித்தம் தொலைதூரம் வந்து, கல்கிஸை ஊர்ப்பகுதியில் தனி  அறையொன்றில் தன்னைப் போன்றதொரு இலக்கிய சினேகிதியை (எச்.எஃப்.றிஸ்னா)  துணையாக வரித்து, வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டிருக்கிற ஜிம்ஸாவின் அனுபவம் முகம் சுளிக்கச் செய்யும் படுகசப்பு.  

இப்பெண்ணின் நேர்காணல் பதிலுடன் “கண்ணகி கலாலய” கலைஞர் தம்பி இளங்கோவின் விருதுகள் பற்றி  பத்தி எழுத்துக்களையும், என் அபிமான  வாசகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.  

அது சரி! யார் அந்த “கறுப்பு ஆடு”? (Black Sheep) அதாகப்பட்டது, விருது அமைப்பின் தொடர்பு இணைப்பு ஆசாமி?  

தெரிந்தவர்கள், அல்லது யூகிப்பவர்கள் எனது 0770469339க்குத்  தெரிவியுங்கள். நன்றி. (ஓர் அடிக்குறிப்பு: Black Sheep என்பதற்கு ஆங்கில -  தமிழ் அகராதியில் போடப்பட்டுள்ள விளக்கம்: கருங்காலி. பொது நன்மைக்குத்  துரோகி. ஒத்துழைக்காதவன்)  

இனிப்புகள்

இந்த ‘காகம்’ இருக்கிறதே காகம், அதை ரொம்ப சாதாரணமாக நினைப்பதே எனக்கும் உங்களுக்கும் பழக்கம்!  

உண்மையில் அப்படியா?  

முஸ்லிம்களின் தித்திக்கும் திருமறை அல் குர்ஆனிலேயே அதற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது! அறிந்திருக்கிறவர்கள் யார், யார், கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்.  

உயரும் கரங்கள் குறைவாகத்தான் இருக்கும்.  

இங்கே இனிப்பில், இஸ்லாம் போதிக்க நான் தயாரில்லை. இப் பத்தி  அதற்குப் பொருத்தமும் அல்ல. எவ்வாறாயினும் காகம், முஸ்லிம் மானுடத்தில் மிகவும் முக்கியமான இடம் பிடித்துள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு  முன்பேயே! அதற்கு அல்- குர்ஆனில் ஆதாரங்கள்!  

அத்திருமறையின் ஒரேயொரு வசனப் பதிவை மட்டும் மிகப்பணிவுடன் பதிக்கிறேன்.  

“... தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க  வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை  அனுப்பினான்.  

அல்-குர்ஆனின் 5:31ஆம் வசனங்கள்.  எவருக்கும் எளிதாகப் புரிந்திருக்கும்.  

இறந்த மனிதனின் உடலை (ஜனாஸா) மனிதனுக்குக் கற்றுக்கொடுக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காக்காவொன்று “கா,  கா” எனப் பெரும் சத்தத்துடன் கரைந்து தரையில் இறங்கி, மண்ணை ஆழமாகத் தோண்டி,  காவிக் கொண்டு வந்திருந்த ஓர் இறந்த காக்கையை பவ்வியமாக அடக்கம் செய்து  விட்டுப் பறந்தே பறந்து போனது! 
(அல் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் Raven என அண்டங்காக்ைக உள்ளது).

இதைக் காண்கிறார் ஆதிபிதா ஆதம் நபி (அலை) அவர்களது காபில்  (qabil)    என்கின்ற இப்பெண்ணின் மூத்த மகன் அவன் தோளில் சகோதரன் ஹாஃபீல் (Habil) என்பானின் மரணித்த உடல்!(ஜனாஸா)  வர்ணிக்க வேண்டியதேயில்லை! காகங்கள் காட்டிய கற்றுக்கொடுத்த வழியில் நல்லடக்கம்!  

நல்லது, ஜனாஸா சம்பந்தமாக மேலும் எதையும் விவரிக்காமல் இந்த  21ஆம் நூற்றாண்டிலும் மனித ஜன்மங்களுக்கு மகத்தான சேவையைப் புரிந்து  கொண்டிருக்கின்றன காகங்கள் என்பதைப் பதிவிடுகிறேன்.  

எந்த நாட்டில் என்று குறிப்பாகச் சொல்வதானால் நெதர்லாந்து!  ஆனால் அதையும் விவரித்துப் பதிய இந்தப் பக்கத்தில் இடம்தான்  இல்லை! அன்பு கூர்ந்து அடுத்த கிழமை வரை பொறுமை! பொறுமை! நம் முண்டாசுக்  கவிஞன் பாரதி சும்மாவா பாடினான் “காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று!

Comments