எல்லா கட்சிகளையும் போன்றே எமது கட்சியிலும் ஓட்டைகளுண்டு | தினகரன் வாரமஞ்சரி

எல்லா கட்சிகளையும் போன்றே எமது கட்சியிலும் ஓட்டைகளுண்டு

அரசியல்  கைதிகள் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இதுவரை முன்னேற்றகரமாக எதனையும் செய்ததாக இல்லை. குறிப்பாக, பல்வேறுபட்ட அழுத்தங்கள் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருப்பதாக  தெரியவில்லை  என்கிறார் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.  தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தொடர்ச்சியாக முயற்சிப்பதாகக் கூறினார்.

கேள்வி:- நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வின்போது தமிழர்  தரப்பு  சார்பாக நீங்கள் எவ்வாறான விடயங்களை  வலியுறுத்தப் போகின்றீர்கள்?

பதில்:- எங்களுடைய  தரப்பினால் என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது செய்திகளாக வந்திருந்தாலும், கடந்த காலங்களில்  தீர்மானங்களாக  வந்தவை அல்லாமல்  சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தினூடாக ஒரு  பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

உயிரோடு கையளிக்கப்பட்டவர்கள் உயிரோடு கைது  செய்யப்பட்டவர்கள் சிறைகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,  கடத்தப்பட்டவர்கள் என்று தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.

ஆகவே இந்த விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் புதிய விடயங்கள் கையாளப் படுகின்றன.

சர்வதேச  ரீதியான அமைப்புக்கள் நேரடியாக சென்று சாட்சிகளை பதிவு செய்தல் நேரடியாக சர்வதேச அணிகள்  சென்று விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்ற புதிய பொறிமுறைகள் இலங்கையில்  உருவாக்கப்படவேண்டும் என்பதை தமிழர் தரப்புக்கள் பல்வேறு வழிகளிலும்  முன்வைத்துள்ளது.

குறிப்பாக, மியன்மார் சிரியா போன்ற நாடுகளில்  மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணைகளை மையமாக வைத்து இதற்கு ஒரு முடிவு  எட்டப்பட வேண்டும் நீண்டகாலமாக இழுபட்டு செல்லும் காணமல்  ஆக்கப்பட்டவர்களின் விடயங்கள் எல்லாவற்றுக்கும்  புதிய பொறிமுறை ஒன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இது அடுத்த கட்டத்திற்கு அதாவது சர்வதேச விசாரணைக்கு எடுத்துச்செல்வதாக அமைய வேண்டும் என்பதே பொருத்தமாகும்.

கேள்வி:- கடந்த  காலங்களில் இவ்வாறு காணமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களுக்கான  தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஏன்  ஒரு பொறிமுறையை  வலியுறுத்தவில்லை?

பதில்:-கடந்த அரசாங்கம் இருந்தபோது உள்ளக பொறிமுறை  மூலம் தீர்வு கொண்டு வரப்படலாம் என்று 2015 ஆண்டு செம்டம்பர்  மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அப்போதைய வெளியுறவுத்துறை  அமைச்சர் மங்கள சமரவீர தாங்கள் இதனை உடனடியாக விசாரணை செய்கின்றோம் இரண்டு  வருடகால அவகாசம் தாருங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  அலுவலகம் ஒன்றை உருவாக்கி அதனூடாக செய்கின்றோம் என உத்தரவாதம் வழங்கியதற்கு  அமைவாக நாங்கள் அதற்கு எமது பக்க அபிப்பிராயங்களையும்  வழங்கி  வழங்கியிருந்தோம். அதனடிப்படையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  அலுவலகம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி பீரிஸ் அதன் தலைவராக  நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அலுவலகத்தினால் ஒரு அங்குலம் கூட நகர  முடியவில்லை  முன்னேற்றம் காணமுடியவில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு  ஒரு பரிகாரமாக அது அமையவும்இல்லை. அந்த விடயம் தோற்றுப்போனதால் இனிமேலும்  அந்தவிடயத்தில் கவனம் செலுத்துவது காலப்பொருத்தமற்றது.

கேள்வி:- தமிழ் மக்களிடையே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என நீங்கள்  ஏன் கோருகின்றீர்கள் ?

பதில்:- ஒரு  நாட்டில் வாழும் இனம் தனியான ஒருதேசிய இனம், தன்னுடைய உரித்துகளோடு  வாழுகின்ற உரிமைகளை கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனம்  வெளிப்படையாக சொல்லுகின்றது.

அதனடிப்படையில் தன்னுடைய தேசிய மொழி  தனக்கான தேசிய நிலம் தேசிய கலைப்பண்பாடுகளை கொண்ட தமிழ் தேசிய இனம் இந்தமண்ணினுடைய தேசிய இனமாகும் சிங்கள தேசிய இனத்திற்கு உள்ள அனைத்து  உரிமைகளும் தமிழ் தேசிய இனத்திற்கும் உள்ளது.
இந்த மண்ணில் சிங்கள தேசிய  இனம் தோன்றுவதற்கு முன்னர் அல்லது குடியேறுவதற்கு முன்னரே தமிழ் தேசிய இனம்  தான் இயக்கர்கள் நாகர்கள் என்ற அடிப்படையில் இலங்கை  தீவின் நாலா பாகங்களிலும் பஞ்ச ஈச்சரங்களை வைத்து  வாழ்ந்துள்ளார்கள்.

ஆகவே அவர்களுக்கான ஒரு  தொடர் நிலப்பரப்பு உண்டு. அவர்களுக்கே உரித்தான கலாச்சார பண்புகள் உண்டு. அடிப்படை கல்வி முறையுண்டு.

அவர்களுக்கே உரித்தான  செந்தமிழ் மொழியுண்டு. அவர்கள் எப்போதும் தனித்துவமான இனமாக   இழந்துபோன தமது இறைமையை மீட்டெடுத்து தங்களுடைய சொந்தமண்ணிலே வாழுகின்ற உரித்தை கொண்டவர்கள். தங்களது இழந்து போன இறைமையை  தான் கேட்கின்றனர்.

இன்று தமிழர்கள் வாழ்ந்த  பிரதேசங்களில் எல்லாம் பௌத்த அடையாளங்கள் இருப்பதாக கூறி  தமிழர் நிலங்களைப் பறிக்க முனையும் இந்த சூழலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம்  நீங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள். அந்த வாக்கெடுப்பிலே தமிழ்  மக்கள் தீர்மானிக்கட்டும் சேர்ந்து வாழலாமா?  இல்லையா? என்பதை என்கிறேன்.  உரிமையும் மனிதாபிமான கடமையும் அவர்களுக்கு உண்டு. ஆகவே  ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் அந்த உரித்து அவர்களுக்கு  வழங்கப்படவேண்டும்.

கேள்வி:- அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயத்தில் முன்னேற்றங்கள் எவையும் உள்ளனவா?

பதில்:- அரசியல்  கைதிகள் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இதுவரை முன்னேற்றகரமாக   எதனையும் செய்ததாக  இல்லை குறிப்பாக, பல்வேறுபட்ட அழுத்தங்கள் பல்வேறுபட்ட  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அரசியல் கைதிகளை விடுதலை  செய்யும் எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருப்பதாக  தெரியவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை எடுத்து  கொண்டு தான் இருக்கின்றோம்.

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள  உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் வினைத்திறனற்று காணப்படுவதாக  விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஏன்?

பதில்:- எந்த இடத்திலும்  எங்களுடைய சபைகள் மாநாகர சபைகள் பிரதேச சபைகள் ஆளுகையில்லாமலோ அல்லது  வலுவற்றதாகவோ இல்லை. அனைத்தும் வினைதிறனாக இயங்கி வருகின்றன.

ஆனால்  அவற்றுக்கான நிதி வளங்கள்  போதாது. அரசாங்கம் சார்பாக உள்ள  சபைகள்  அல்லது அரசோடு இணைந்துள்ள சபைகள் அநேகமாக,  த.தே. கூட்டமைப்பு  ஆளுகைக்குள் இருக்கும் சபைகளில் இருக்கும் அரச பிரதிநிதிகளுக்கு கூட  பிரதேச சபைகளுக்கு புறம்பாக நிதியொருக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இந்த   நிலையில்  பிரதேச சபைகளுக்கான நிதி ஒரு வேலைத்திட்டத்தை  முன்னெடுத்துச்செல்லக்கூடிய வகையில் ஒதுக்கப்படுவதில்லை அதனால் சபை வேலைகளை செய்யமுடியாதுள்ளது.

ஆனால் பிரதேச சபைகள் தமது ஆளுகை  பிரதேசத்தில் சுவீகரிக்கின்ற வரிப்பணத்தை கொண்டும் ஏனைய  வருமானங்களைக் கொண்டும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

வேகம் குறைவாக இருப்பதனால் இவ்வாறான சொற்பிரயோகங்கள் எழுகின்றன.

தமிழர்  பிரதேசங்களில் உள்ள அனைத்து சபைகளும் தமிழர்களுடைய தலைமைகளால் மிக  நிதானமாகவும் ஆளுமையோடும் நல்ல ஒரு கனதியான முறையிலும் நடத்தப்படுகின்றன.

கேள்வி:- தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள்  தொடர்ச்சியாக கட்சி முரண்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை தீர்ப்பதற்கான  முயற்சிகள் ஏன் இதுவரை எடுக்கப்படவில்லை?

பதில்:- எல்லா கட்சிகளிலும்  உள்ளது மாதிரியான ஜனநாயக ஓட்டைகள் எமது கட்சிகளுக்குள்ளும் உள்ளன.  குறிப்பாக எமது கட்சியில் ஜனநாயக தன்மை கூடுதலாக உள்ளது.

தமிழ்  தேசியக்கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் உள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ,  புளொட் இதில் இலங்கை தமிழரசுக்கட்சியென்பது பாரம்பரியமாக  ஜனநாயக முறைப்படியே கொள்ளை ரீதியாக வளர்த்து வரப்பட்ட கட்சி. இலங்கை  தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையிலான கடிதப் போக்குவரத்துக்கள் அல்லது தொடர்பாடல்கள் மக்கள் மத்தியில் சில  விசனங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.

தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கடிதம் எழுதுகின்ற போட்டிகளை  நிறுத்திவிட்டு தங்களுக்குள்  முதலில் கூடிப்பேசி இந்த விடயத்திற்கான  தீர்வுகளை எட்டவேண்டும் குறிப்பாக  கட்சியின் தலைவர் சம்பந்தன்  ஐயா தேர்தல் முடிந்த பின்பு  எல்லோரையும்  சந்தித்து வெளிப்படையாக கலந்து பேசவில்லை. தனக்கு வைத்தியர்கள்  அறிவுறுத்தியுள்ளததால் சந்திப்புக்களை குறைத்துக்கொள்வதாக குறிப்பிட்டு  வருகின்றார்..

ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியின் உயர் மட்டக்குழுவையோ  அல்லது மத்திய குழுவையோ கூட்டி முடிவுகள் எடுக்கப்படாததால் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு கட்சியினுடைய தலைமைக்குள்ளது.
அந்தப்பணி இப்போது முன்னெடுக்கப்படும் என நான் நம்புகின்றேன்.

கேள்வி:- கட்சிக்குள்  காணப்பட்டு  வருகின்ற உள்ளக முரண்பாடுகள் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு  சரிவுக்கு ஒரு காரணமாக இருந்துள்ளது  என்று கருதுகின்றீர்களா?

பதில்:- வாக்கு சரிவுகளுக்கு  பல்வேறுபட்ட காரணங்கள் உண்டு. உள்ளக முரண்பாடுகள் மட்டுமல்ல. எங்களுடைய  செயற்பாடுகள் குறிப்பாக 2013 ம்ஆண்டு நாங்கள் ஒரு மாகாண சபையை  பொறுப்பேற்றிருந்தோம். அந்த சபை கட்சியினுடைய கட்டுப்பாட்டிற்குள்  இருக்கவில்லை மாகாண சபையால் செய்ய வேண்டிய பல பணிகள் செயல்படுத்தப்படாமலே  முடிவுறுத்தப்பட்டன. மாகாண சபையிலே இருந்தவர்கள் தாங்கள் தலைவர்களாக  தனித்தனி கட்சிகளாக ஆரம்பிக்க முனைந்ததும் கட்சியை உடைத்து சிதறச்  செய்தமையும் 2013இற்கு பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட ஒரு  பாரிய பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

அதனைவிட பொருளாதார  அபிவிருத்தி,வீதி அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற  விடயங்கள் இந்த  பாராளுமன்ற தேர்தலில் மக்களிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.

இன்று  அந்தமாயை கலைக்கப்பட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் குறிப்பாக குருந்தூர் மலை,  வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு, நிலாவரை உருத்திரபுரம் சிவன்கோவில் போன்ற  இடங்களில் ஆய்வுகள் என்ற அடிப்படையில் தமிழர் நிலங்களை பறிக்கின்ற  முயற்சிகள் என்ன செய்தியைச் சொல்கின்றன?

Comments