இலங்கையின் 73ஆவது சுதந்திரதின விழா | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் 73ஆவது சுதந்திரதின விழா

இலங்கையின் 73ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் பிரதமர், முப்படைகளின் தளபதிகள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் படைகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பெப்ரவரி மாதம் 3, 4 ஆம் திகதிகளில் அரச நிறுவனங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இம்முறை சுகாதார வழிமுறைகளை முழுமையான முறையில் பின்பற்றிய நிலையில் எவ்வித குறைபாடுகளும் இன்றி தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழமை போன்று சிறந்த முறையில் நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரும் மற்றும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.  

நாட்டில் தற்பொழுது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு அழைப்பிதழ்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருகை தரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முப்படை வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதின விழாவை நாமும் சிறப்பாகக் கொண்டாடுவோம்...!
 

Comments