ஈழத்து இதழியல் வரலாற்றில் மகத்தான சாதனை புரிந்த அமரர் டொமினிக் ஜீவா | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இதழியல் வரலாற்றில் மகத்தான சாதனை புரிந்த அமரர் டொமினிக் ஜீவா

ஈழத்து இதழியல் வரலாற்றில் இணையற்ற தடம்பதித்த  டொமினிக் ஜீவா 28.-01-.2021 அன்று மாலை அமரரானார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகை ஆறாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

1966 ஆகஸ்ட்டில் மல்லிகை இதழைத் தோற்றுவித்தவர் ஜீவா. மல்லிகை இதழ் நாற்பத்தாறு ஆண்டுகள் வெளிவந்து சாதனை புரிந்தது. வேறு எந்த ஈழத்துச் தமிழ்ச்சிற்றேடும் நாற்பத்தாறு ஆண்டுகளை எட்டிப் பிடித்ததாகச் சரித்திரம் இல்லை. தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதையாளர் டொமினிக் ஜீவாவைவிட மல்லிகை ஜீவா ஏற்படுத்திய தாக்கம் அதிகமானது.

மல்லிகை ஆரம்பித்து முப்பது ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்துப் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த ஜீவா, மல்லிகைப் பந்தல் மூலம் பல தரமான நூல்களை வெளிக்கொணர்வதில் மும்முரமாக உழைத்தார். 50 நூல்கள்வரை வெளியிட்டார்.
05.-02.1997 மல்லிகைக் காரியாலயம் கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் மல்லிகை வெளிவரத் தொடங்கியது.
டிசம்பர் 2012 வரை மல்லிகை வெளிவந்தது.

மல்லிகை இதழ் பல பிரதேசச் சிறப்பு மலர்களை வெளியிட்டுள்ளது. பல புதிய எழுத்தாளர்கள் மல்லிகை மூலம் இனங்கண்டு வளர்த்தெடுக்கப்பட்டார்கள். மல்லிகை பல இலக்கிய கர்த்தாக்களின் படங்களை அட்டையில் பொறித்து அவர்கள்பற்றிய விபரங்களையும் வெளியிட்டு அவர்களைக் கௌரவித்தது. சிங்கள எழுத்தாளர் சிலரையும் அட்டையில் பொறித்துக் கௌரவித்தார் ஜீவா. சிங்கள இலக்கிய வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாதான்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா யாழ்ப்பாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் 27-.06.1927இல் பிறந்தவர். இவரது  தந்தை அவிராம்பிள்ளை ஜோசப் யாழ் நகரில் சலூன் நடத்தியவர். தாய் பெயர் ஜோசப் மரியம்.

டொமினிக் ஜீவா ஐந்தாம் வகுப்புவரை யாழ். சென்.மேரிஸ் பாடசாலையில் படித்தவர்.

டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பிரவேசத்திற்குக் காரணம் அவர் தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது அந்தப் பிஞ்சுப் பருவத்திலே அவரது இதயத்திலே விழுந்த அடி. வகுப்பறையில் ஆசிரியர் கரும்பலகையில் போட்ட கணக்கு தவறானது என்பதைச் சுட்டிக் காட்டினார் மாணவனான ஜீவா.

சகமாணவர்கள் வகுப்பறையே அதிரும்படி சிரித்துவிட்டார்கள். ஆத்திரம் கொண்ட ஆசிரியர் ஜீவாவின் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி இரண்டாகக் கிழித்து அவரது முகத்தில் எறிந்து 'நீங்கள் எல்லாம் ஏண்டா படிக்க வந்தீர்கள். சிரைக்கப் போவதுதானே!" என்று ஜீவாவின் பிறப்பை, தந்தை செய்த தொழிலைச் சுட்டிக்காட்டியபோது ஜீவாவின் இதயத்தில் விழுந்த காயந்தான் கனன்று கனிந்து அவரது எழுத்தில் எரியத்தொடங்கியது.

ஆரம்ப காலத்தில் பொதுவுடமைச் சித்தாந்த நூல்களை  வாசிப்பதற்கு ஜீவாவுக்கு உதவியவர் திரு.ஆர்.ஆர். பூபாலசிங்கம். பொன் கந்தையா, கார்த்திகேசன், லிங்கன் ஆகியோரின் வழிகாட்டலில் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த டொமினிக் ஜீவா பிற்பட்டகாலத்தில் அக் கட்சியில் சித்தாந்தப்பிளவு ஏற்பட்டபோது மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்டாகச் செயற்பட்டார்.

1948ஆம் ஆண்டில் தனது இருபதாவது வயதில் ஜீவா எழுதிய முதற்கதை எழுத்தாளன்| சுதந்திரனில் பிரசுரமாகியது. ஆரம்பத்திலிருந்து அவரை வளர்த்து நிலைப்படுத்திய பெருமை சுதந்திரன் பத்திரிகைக்கே உரியது.

'சலூன் தொழிலாளியாகிய நான், அந்தச் சவரச் சாலையை சர்வகலாசாலையாக நினைத்தேன், மதித்தேன், படித்தேன் இயங்கினேன்" எனக்குறிப்பிட்டுள்ளார் டொமினிக் ஜீவா. சிகை அலங்கரிப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்த ஜீவா பிற்பட்ட காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு உழைப்பதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டார்.

1948இல் தமிழகத்திலிருந்து இலங்கை வந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட தோழர் ப. ஜீவானந்தத்தை சந்திக்கும் வாய்ப்பு டொமினிக் ஜீவாவுக்கு ஏற்பட்டது. அச்சந்திப்பே ஜீவாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் ஜீவாவிடம் சாதியுணர்வு மேலோங்கியிருந்தபோதிலும் வெகு விரைவிலேயே தான்வாழும் சமூகத்தின் சமூக பொருளாதார ஒடுக்கு முறைகளையும் தெரிந்து கொண்டார். மார்க்சியக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஜீவாவின் எழுத்துப்பணி பரிணமிக்க வழிகாட்டியவர் ப. ஜீவானந்தம்.  அவர்மீது கொண்ட பக்தியினால், டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துக் கொண்டு டொமினிக்ஜீவா என எழுத்துலகில் இவர் இயங்கத் தொடங்கினார்.

ப. ஜீவானந்தத்தின் சந்திப்புக்குப் பின்னர் ஜீவா தனது தமிழ்நாட்டு உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டார். விஜயபாஸ்கரனின் சரஸ்வதி என்னும் இலக்கிய சஞ்சிகை டொமினிக் ஜீவாவின் சிறுகதைகளுக்கு அதிகளவில் இடம் கொடுத்தது.

சரஸ்வதி இதழில் ஜீவாவின் நிழற்படத்தை அட்டையில் பதித்துப் பெருமைப்படுத்தியது. தமிழக இதழான தாமரையும் ஜீவாவின் கதைகளை ஏற்றுப் பிரசுரித்தது. 1968 ஜூலையில் வெளிவந்த தாமரை சிறுகதைச் சிறப்புமலர் ஜீவாவின் உருவத்தை அட்டையில் தாங்கி வெளிவந்து ஈழத்து எழுத்தாளர்களுக்குக் கௌரவத்தை ஏற்படுத்தியது. ஜீவாவின் தமிழக உறவு சரஸ்வதி, தாமரை ஆகியவற்றினூடாக மலர்ந்த, அவர்  தமிழகத்துக்கு அடிக்கடி பயணித்துத் தனது நூல்களை தமிழகத்திலேயே பதிப்பிக்க வழிவகுத்தது. 

1957இல் தேசிய சாஹித்திய மண்டலம் உருவாக்கப்பட்டது. இக்காலகட்டத்திலேதான் டொமினிக் ஜீவாவின் 'தண்ணீரும் கண்ணீரும்' என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை சரஸ்வதி ஆசிரியர் வெளியிட்டார். ஈழத்தின் தமிழ் இலக்கியம் தென்இந்தியத் தமிழ் இலக்கியத்தின் பிரதியாக அமையாது ஈழத்தின் மண்வாசனையைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜீவாவின் சிறுகதைத் தொகுதி அமைந்தது.

1960இல் இச்சிறுகதைத் தொகுதி அவ்வாண்டின் சாஹித்திய மண்டலப்பரிசினைப் பெற்றது. அதுவே இலங்கையில் முதன்முதலில் நவீன புனைகதை இலக்கியத்திற்கான சாஹித்திய விருது பெற்ற நூலாகும். பரிசு பெற்றுவந்த ஜீவாவை யாழ். புகையிரத நிலையத்தில் 13.10.1961 அன்று மலர்மாலை அணிந்து வரவேற்றார் யாழ்நகரசபை முதல்வர் ரி. எஸ். துரைராசா.

1970இல் சாஹித்திய மண்டல உறுப்பினர் பதவியும் ஜீவாவுக்குக் கிட்டியது. இவரது தண்ணீரும் கண்ணீரும்| சிறுகதைத் தொகுதியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.ஏ. பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டது.

செக்கோசிலவக்கிய, ஆங்கில, சிங்கள மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெள்ளை வேட்டி, வெள்ளை உடையுடன் காணப்படும் ஜீவா அதே உடையுடன் இந்தியப் பயணங்கள், சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகள் எனப் பல நாடுகளுக்கும் சென்று வந்ததோடு தனது பயண அனுபவங்களையும் மல்லிகையில் பதிவு செய்துள்ளார்.                                                            

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்| டொமினிக் ஜீவாவின் சுயசரிதை நூல். இதன் இரண்டாவது பாகம் அச்சுத் தாளின் ஊடாக ஓர் அனுபவப் பயணம் என்பதாகும்.

டொமினிக் ஜீவாவின் நூல்களாக தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை (1962) சாலையின் திருப்பம் (1967) வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள், அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரில் முப்பது நாட்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. இலக்கியப் பணிக்காக டொமினிக் ஜீவா  முப்பதுக்கும் மேற்பட்ட பரிசில்களைப் பெற்றுள்ளார். கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2013) இவருக்கு 13-07-.20.14இல் கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு இலங்கை அரசின் இலக்கியத்துக்கான உயர்விருதான  சாஹித்தியரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஈழத்து இலக்கிய வரலற்றில் அழியாத்தடம் பதித்த ஜீவா ஈழத்து இதழியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

தி.ஞானசேகரன்

Comments