அவளொரு ராஜ்யம்! | தினகரன் வாரமஞ்சரி

அவளொரு ராஜ்யம்!

கார்முகில் கூந்தற்கட்டு  
கண்கவர் நெற்றித்திட்டு  
வாளுரு வளைவைத்தொட்டு  
வானவில் புருவவெட்டு!  
நீலமாய் கயல், மான் கண்கள்  
நீளமாய் ஊசிநாசி
பலாச்சுளைச் செவிகள் வெண்மை  
பளிச்சிடும் பளிங்குப் பற்கள்!  
செவ்விதழ் இரண்டும் கொவ்வை  
செய்யுளாய் வடிப்பாள் அவ்வை  
செக்கர்வான் சிவக்கும் கன்னம்  
செந்தா மரைப்பூ வண்ணம்  
நடையணி கண்டு அன்னம்  
தன், நடை வெட்கும்; இன்னும்  
படையணி பிந்தும்; எண்ணம்  
தடையிட கால்கள் பின்னும்!  
பண்புகள் நான்கும் அற்று,  
பரவணி நாசமுற்றால்...  
அரிவையர் பண்ணையின்கண்,  
அவளொரு பூஜ்ஜியம் தான்!  
அழகெழும் தங்கையாகி,  
அன்பெழும் நங்கையாகி,  
பண்பொளிர் மங்கையாகி  
பாங்கியாய் வாழ்வாளாயின்  
அச்சமும், மடமும் நாணம்  
அடங்கலாய் பயிர்ப்பும் பற்றின்  
அரம்பையர் பண்ணையின்கண்  
அவளொரு ராஜ்யம்தான்!

கலாபூஷணம், ஏறாவூர் தாஹிர்   

Comments