தேசிய ஒற்றுமையில் தேசத்தின் அபிவிருத்தி | தினகரன் வாரமஞ்சரி

தேசிய ஒற்றுமையில் தேசத்தின் அபிவிருத்தி

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம். இம்முறை சுதந்திரத் தினத்தில் தேசிய ஒற்றுமையின் ஊடாகத் தேசத்தின் அபிவிருத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. 

நாட்டின் பிரஜைகளுக்கிடையில் தேசிய உணர்வுடன்கூடிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் ஊடாகத் தேசிய அபிவிருத்தியைச் சாதகமாக்கிக்கொள்ள முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 

தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் அதுவும் இனங்களுக்கு மத்தியில் தேசிய உணர்வை வலுப்படுத்துவது அவசியம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், இலங்கையின் அரசியல் தலைமைத்துவமானது, சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த தவறியிருந்தன.

எனவே, நாடு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உறுதியற்ற நிலையை எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையை ஆழமாக ஆராய்ந்து பார்த்து, அவற்றுக்குத் தீர்வுகளை காணும் வகையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை​யை ஏற்படுத்துவது அவசியமாகும். 

கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவு செல்வாக்கைச் செலுத்தியிருந்ததையும், சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டிருந்தமையும் உதாரணங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் வெளிப்பாடாக, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகள் அவர்களின் தலையில் ஊடுருவியிருந்தது. மேலும், சிறுபான்மையினர், அவர்களின் உரிமைகளிலிருந்தும், மொழி, குடியுரிமை, சிறுபான்மை உரிமைகள், காணி, நேர்மை, தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற சகல விடயங்களிலும் பின்தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்தனர். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற சிந்தனையைப் பலவீனப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச, இன ரீதியான பிறழ்வுகளைப் புறந்தள்ளி நாடெங்கும் சமமான அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், ஒரு சில பகுதிகளில் மக்களும் சரி, மக்கட் பிரதிநிதிகளும் சரி அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தியில் பெரிதாகப் பங்கெடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. 

அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டு அபிவிருத்திக்கான நிதி வளங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுத்திருந்தும், அந்நிதியில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாமல், அரசின் நிதி ஒதுக்கீடுகள் மீளவும் திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்குக் காரணம் அரசியல் கட்சித் தலைமைகள் மத்தியில் தேசிய உணர்வு மங்கிய நிலையில் காணப்பட்டமையே. அதனால், அவர்கள் மக்களுக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தவில்லை. தாங்கள் ஒரு பிரதேசத்திற்குப் பிரதிநிதியாக இருந்தபோதிலும், அந்தப் பிரதேசத்தின் அல்லது தேசத்தின் பிரதிநிதியாகத் தம்மைக் கருதவில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பிரதிநிதியாகவே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். அதன் காரணமாகக் குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள்கூடப் பொதுவான நோக்கில் கருதப்பட்டுத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் அரசியல் அவதானிகள். 

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே சுதந்திரத்தினத்தின்போது தேசிய ஒற்றுமையின் ஊடாகத் தேசிய அபிவிருத்தியைச் சாத்தியப்படுத்துவதுபற்றிக் கூடுதல் கரிசனைகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. மேலும், கல்வியறிவை மேம்படுத்துவது, பசுமையை ஏற்படுத்துவது, வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு விருத்தி, வெளிநாட்டு முதலீடுகள், மனித வள அபிவிருத்தி மற்றும் பொருளாதார உறுதிப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சமூகங்களுக்கிடையில் சமய மற்றும் இன ரீதியான வேறுபாடுகளை இல்லாமல் செய்து இலங்கையை அனைவரும் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக மாற்றுவதுடன், அனைவரும் சம உரிமையுடன் வசிப்பதற்கான நாடாக மாற்றியமைப்பது சுதந்திரத் தினத்தின் இலக்காக அமைந்துள்ளது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை பலப்படுத்தி நாட்டை வளமாக்குவதற்குத் திடசங்கற்பம் பூணவேண்டும். 

எனவே, இதுவிடயத்தில் அரசியல்வாதிகளுக்குப் பெரும்பங்கு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். அவர்கள், மேடைகளில் தங்களின் அரசியல் கட்சியின் கொள்கையைப் பரப்புவதை மாத்திரம் நோக்காகக்கொண்டிராமல், இனங்கள் மத்தியில் தேசிய உணர்வையும் தேசிய ஒற்றுமையையும் செழிப்புறச் செய்வதற்கு ஏதுவான விடயங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்கள் 50 இலட்சம் பேரின் ஊடாகத் தேசிய உணர்வையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்குப் பல்வேறு வழிகளிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதைப்போன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் அரசியல் செயற்பாடுகளில் தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்களாக!

Comments