கூட்டு ஒப்பந்தம்: என்ன முடிவெடுக்கப் போகிறது இ.தொ.கா? | தினகரன் வாரமஞ்சரி

கூட்டு ஒப்பந்தம்: என்ன முடிவெடுக்கப் போகிறது இ.தொ.கா?

பெருந்தோட்ட மக்களின் சம்பள நிர்ணயம் மற்றும் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அதனை சற்று பின்னோக்கி பார்ப்பதற்கு முன் பிந்திய தகவல் ஒன்றைப் பதிவு செய்வது சிறப்பு.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச்சம்பளமாக 1025 ரூபாவை வழங்க முன்வந்திருக்கிறது தோட்ட முதலாளிமார் சம்மேளனம். அப்பாடா..! அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று யாரும் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து விடாதீர்கள்.  

இது ஒன்றும் அடிப்படைச் சம்பளமல்ல, இதர கொடுப்பனவுகளுடன் கூடிய சம்பளமேதான். ஆகக்கூடினால் தற்போது 700 ரூபாவாக இருக்கும். அடிப்படைச் சம்பளம் இனி 725 ரூபாவாக உயரலாம். அவ்வளவுதான். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பார்ப்பு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் என்பதே. அதனையே அவரது புதல்வரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் வலியுறுத்துகின்றார். இதன் பின்னணியில் இ.தொ.கா. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவை ஏற்குமா? அல்லது கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முன்வருமா? ஏற்கனவே இ.தொ.கா. இப்படியொரு தீர்மானத்தை எடுப்பது பற்றி குழப்பத்தில் இருக்கின்றது. ஏனெனில் கூட்டு ஒப்பந்த சூத்திரதாரியே இ.தொ.கா.தான்.  

1865இல் கொண்டுவரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் சம்பள முறைமைகளை ஒழுங்குபடுத்த உதவியது. இதன் மூலம் முதலாளி, சம்பளம் என்னும் சொற்பிரயோகங்கள் நடைமுறைக்கு வந்தன.

செக்ரோல் என அழைக்கப்படும் பதிவேடு ஆரம்பமானது. இதன் பின்னர் 1927 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச சம்பள (இந்திய) சட்டத்தினை அடிப்படையாக கொண்டு 1941இல் சம்பளச் சபைகள் சட்டம் வடிவமைக்கப்பட்டது. இச்சபையே தொழிலாளர்களது சம்பளத்தை தீர்மானிக்கும் சகல உரிமைகளையும் கொண்டிருந்தது.  

எனினும் அன்றைய தோட்டக் கட்டமைப்பின் செயற்பாடுகளின் பின்புலத்தில் இலவச வதிவிடம், குடி நீர், மலசலகூடம், அரிசி, மா விநியோகம், 10 வயது வரை குழந்தைகளுக்கு இலவச உணவு, பேரீச்சம்பழம், சலவை சிகையலங்காரம், சுகாதார ஏற்பாடுகள் எல்லாமே கம்பனி தரப்புகளாலேயே வழங்கப்பட்டது. இதனால் குறைந்த சம்பளமே தீர்மானிக்கப்பட்டு வந்தது.  

நாடு சுதந்திரமடைந்த பின்னரும் 1972 வரை இதே முறைமையை பின்பற்றி வந்தது கம்பனி தரப்பு. 1972 அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. இதன் பின்னரும் சில நிர்வாக நடவடிக்கை மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு அரசு சம்பள நிர்ணய சபைக்கூடாகவே சம்பளத் தொகை நிர்ணயமானது.  

இச்சபையில் அரசு துறைசார் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் சம்பளக் கோரிக்கைகள் தோல்வியடைந்து வந்தன. அன்று அமைச்சரவையில் வீற்றிருந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுக்கு இது சங்கடத்தை தந்தது. எனினும் இம்முறையை மாற்றக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

அதற்காக அவர் 1992 ஆம் ஆண்டு வரை காத்திருக்க நேர்ந்தது. பிரேமதாச அரசாங்கம் இந்த ஆண்டில் தான் பெருந்தோட்டங்களைத் தனியார் கம்பனிகளுக்கு நீண்டகால குத்தகைக்கு விடும் முடிவை எடுத்தது. ஆங்கிலேய கம்பனிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியதாலேயே இத்தீர்மானம் அப்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.  

இதில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுக்கும் உடன்பாடு இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், தோட்டத் தொழிலாளா்களின் சம்பள நிர்ணயம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்த முறைமையை முன்மொழிந்தார். இதற்கு பெருந்தோட்டங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட கம்பனிகளும் உடன்பட்டன. எனவே இதற்கான சட்டவரைபு தயாரானது. இது அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றது. பின்னர் பாராளுமன்றத்தில் இது முன்மொழியப்பட்டு சட்டரீதியான ஒப்பந்தமானது.  

கூட்டு ஒப்பந்த முறைமை நீண்டகாலத்துக்கு முன்பே பல சர்வதேச நாடுகளில் அறிமுகமாகியிருந்தது. இலங்கையிலும் சில தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்களில் நடைமுறையில் இருந்து வெற்றியும் கண்டிருந்தது. ஏனெனில் இவ் வொப்பந்தத்தின் மூலம் தொழில் உறவுகளை ஒழுங்கமைப்பது, தொழிலாளர்களுக்கான பங்கினை உறுதிப்படுத்துவது போன்ற நியாயமான ஷரத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஒப்பீட்டளவில் இது முற்போக்கான அம்சமாகவே காணப்படுகின்றது.  

அச்சமயத்திலும் கூட்டு ஒப்பந்தம் பற்றிய காரசாரமான விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சட்டத்தின் ஒரு குறை நிரப்பேயன்றி தொழிற் சட்டத்திற்கான பதிலீடு அல்ல என சட்டத்தரணியும் தொழிற்சங்கவாதியுமான இ. தம்பையா 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வாதிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

1992ஆம் ஆண்டு சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்தமே நடைமுறைக்கு வந்தது. 2003ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த விடயங்களை உள்ளடங்கிய கூட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. எனினும் தொடர்ந்து வந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாக கம்பனி தரப்பு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏலவே தொழிலாளர்கள் அநுபவித்து வந்த உரிமைகள் சூசகமாக பறிக்கப்பட கூட்டு ஒப்பந்தத்தை சாதனமாக பயன்படுத்துவதாகவும் தொழிற்சங்கத்தரப்பு குரல் எழுப்பத் தொடங்கின.  

உதாரணத்துக்கு, 1951ஆம் ஆண்டு 14அம்ச உடன்படிக்கையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை சேவையிலிருந்து நீக்குவதை தடுப்பதற்காக இருந்த ஏற்பாடுகள் 2003ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி உள்ளடக்கப்படாமலே விடப்பட்டமை அவதானிப்புக்குரியது. கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்களை தோட்ட நிர்வாகங்களே அநுபவித்து வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.  

இதனை தடுப்பதற்கு திராணியற்ற நிலையிலேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்படாத தரப்புகள் இதில் தலையிட முடியாது என்பதை நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. ஆனால் கம்பனி தரப்போ அரசாங்கம் தன்னிச்சையாக அடிக்கடி தலையிடுவதால் தாம் அசெளகரியங்களுக்கு உள்ளாவதாக பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகின்றது. எனினும் யாமறிந்தவரை அரசாங்கம் மத்தியஸ்த நிலையில் நின்று சமரசம் செய்யும் தரப்பாகவே அன்று முதல் இன்றுவரை இருந்து வருகிறது.  

2016களில் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமான எதிர்வலைகள் தலைதூக்கியிருந்தன. அமரர் ஆறுமுகன் தொண்டமான் அதிரடியாக விடுத்திருந்த ஓர் அறிக்கையில் கூட் டு ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் என்றார். கம்பனி தரப்பு மசியவில்லை. இதனையே பின்னால் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மாற்றாக ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கம்பனி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எத்தரப்பும் எதனையும் செய்தபாடில்லை.  

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இ.தொ.காவே அதிகமான அங்கத்தவா்களைப் பிரதிநித்துவப் படுத்தும் பொிய சக்தியாக உள்ளது. அது கூட்டு ஒப்பந்தத்தை தமது பலப்பிரயோக கருவியாக பயன்படுத்த முயலவே செய்யும். அதேவேளை அதன் சறுக்கல்களை மூடி மறைக்கவும் இதனையே கவசமாகவும் கொள்ள முயலும். ஏனெனில் சம்பளத்தை மட்டுமே பெருந்தோட்டப் பிரதேசங்கள் எதிா்கொள்ளும் பாாிய பிரச்சினையாக உருமாற்றம் செய்யப்பட்டு நெடுநாளாயிற்று. தோ்தல் வாக்குறுதியாக சம்பள விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டு வந்துதுள்ளது. இவ்வாறான வாய்ப்பை இ.தொ.கா. இலகுவில் கைவிடுமா?  

தமிழ் முற்போக்குக் கூட்டணி சம்பளச் சமாச்சாரம் மட்டுமே பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மாற்றத்துக்கான வடிகால் என்பதை மறுக்கிறது. இதனை கையிலெடுக்கப்போய் சூடுபட்ட அநுபவமும் அக்கூட்டணிக்கு இருக்கவே செய்கிறது.              

இதன் பின்னணியில் இப்போது கம்பனி தரப்பு நாசூக்காக பந்தை கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பக்கம் நகர்த்திவிட்டுள்ளது. ஏற்கனவே 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைக்காத நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக இ.தே.தோ. தொ.சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன வெளிப்படையாக அறிவித்து விட்டன.

இ.தொ.கா. கூட்டு ஒப்பந்த ஷரத்துக்களை தூசுதட்டி அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது. என்ன முடிவை எடுக்கப்போகிறது இ.தொ.கா.? ஏனெனில் அது எடுக்கப்போகும் அதிரடி முடிவு தான் கூட்டு ஒப்பந்த அடுத்தக்கட்ட நகா்வினை தீர்மானிக்கும்.

இந்த கூட்டு ஒப்பந்தம் பற்றிய ஒரு வியாக்கியானம் இருக்கிறது. கூட்டு ஒப்பந்தமுறை மூலம் வாழ்கைப்படி சம்பளத்தையும் பெறமுடியும். எனினும் பேச்சுவார்த்தைகளின் போது தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும். அடிப்படைச் சம்பளம் 1000 வேண்டும் 2000 வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கேட்க முடியாது. அதற்கான காரணங்களை சரியாக முன்வைக்க வேண்டும். முதலாளிமார் பக்கமிருக்கும் பிரச்சினைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

இதுதான் அந்த வியாக்கியானம். இதனை முன்வைத்தவர் வேறு யாருமல்ல. கூட்டு ஒப்பந்தகர்த்தா அமரர் செளமியமூர்த்தி தொண்டமானேதான். சரி, இதன்படி பார்க்கப்போனால் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் மலையக தொழிற்சங்கங்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பள அதிகப்புக்கான சரியான வாதங்களை முன்வைக்க முடியாமல் திண்டாடுகிறதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

பன். பாலா
 

Comments