
கசப்பு
நம் நாட்டுத் தமிழ் வார இதழொன்றில் கிழமை தோறும் ஒரு விசித்திரமான செயல்பாடு தமிழ் மணியான எனக்கு ரொம்பவே கசப்பாக இருக்கிறது.
ஆங்கில மோக வெறிபிடித்து அலைகிற தமிழ்நாட்டில் வெளியாகும் எந்தத் தமிழ் ஏடுகளிலும் கூட இந்த விசித்திர வியாதி இல்லை!
அதுவும் சிறுவர் பகுதியில், பாலர் வட்டாரப் பக்கத்தில்!
ஆசை ஆசையாக நம் வீட்டுச் செல்வங்கள் எழுத்தார்வம் கொண்டு சுயமாகவோ, பெற்றோர், ஆசிரியர் உதவியாலோ அனுப்பும் சிறுசிறு விடயங்கள், சித்திரங்கள் ஆகியனவற்றை அழகழகாகப் பிரசுரிக்கும் இவ்வார இதழ், எழுதியவர் பெயர், முகவரி பாடசாலைப் பெயரை மட்டும் ஆங்கிலத்தில் பிரசுரித்து ஒரு விசித்திரம் செய்கிறது!
நான் பதிவது பொய் என்றால் இங்கே பிரசுரமாகியிருக்கும் அந்தச் சிறுவர் சிறுமியரது ஆக்கங்கள் வரைந்த சித்திரங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் பாருங்கள். இரண்டு மூன்று இதழ்களிலிருந்து இரண்டொன்றுத் தேர்ந்து வழங்கியுள்ளேன்.
இப்படி சின்னஞ்சிறுசுகளின் விடயங்களுக்கு அவர்கள் பெயர், முகவரி, பாடசாலைப் பெயர்களை ஆங்கிலத்தில் பிரசுரிப்பதன் பின்னணி என்ன?
“பிள்ளைகளே, இனி மெல்லத் தமிழ் சாகும். அதனால் மெதுமெதுவாக ஆங்கிலத்திற்கு மாறுங்கள்” என்று ஆலோசனை சொல்கிறார்களா?
அல்லது விடயங்களை அனுப்பும் சிறு பிள்ளைகளே, “தயவு செய்து எங்கள் பெயர் முகவரிகளை, ஆங்கிலத்தில் பிரசுரித்து உதவுகள்” எனக் கோரிக்கை விடுக்கிறார்களா?
ஓர் ஆறுதல்: சிங்களத்தில் போடாமல் விட்டது! பிரெஞ்சு (பிரான்ஸ்) நாட்டில் ஆங்கிலம் எழுதினால், பேசினால் குற்றம் தெரியுமா?
ரஷ்யாவிலும் ரஷ்யமொழி மட்டுமே உபயோகிக்க முடியும். தப்பித் தவறியும் இதழ்களில் ஆங்கிலம் இடம்பெறாது.
ஆசிய நாட்டவராகிய நாம் ஆங்கில அறிவு பெறல் நன்றே. அதற்கு ஆர்வத்தைத் தூண்டல் ஏற்புடையதே. ஆனால் இப்படியன்று. வேறு நடைமுறைகள் உள்ளன.
சின்னஞ் சிறுசுகளே, உங்களுக்கு என் கண்ணீரே காணிக்கை.
இனிப்பு
கடந்த வாரத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க அநுராதபுரத்திலிருந்து இனிப்பு வரவழைத்து வழங்கியது போல் இவ்வாரமும் அங்கிருந்தே!
ஒரு மேலோட்டமான கணிப்பில், பார்வையில் பார்த்தால் அப்பிரதேசம் பெரும்பான்மை மக்களைக் கொண்டது எனக் கருதலாம்.
நிலைமைவேறு, தமிழக முஸ்லிம்கள் பேசும் தமிழ், கலந்து உரையாடும் முஸ்லிம்களின் பரம்பரை அங்கே பெருவாரியாக சுமார் 127 முஸ்லிம் குடியிருப்பு கிராமங்கள் உள்ளனவாம்.
அத்தனை பேரும் இன்றுவரை பெரும்பான்மை மக்களுடன் மிக அந்நியோன்யமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நாமே வெளிச்சத்திற்குக் கொண்டு வரவில்லை. எவர் கண்திருஷ்டியும் பட்டுவிடக் கூடாதென்ற பிரார்த்தனைகளுடன் இனிப்பை வழங்கத் தயாராகிறேன்.
அநுராதபுரத்திலிருந்து 12 அல்லது 14 கி.மீ. தூரம் உள்ள ஓர் அழகிய கிராமம் அது. அங்கேயும் ‘தினகரன்’ சென்றடைந்திருக்கிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் என் ‘லைட்ரீடிங்’ காலத்து தீவிர வாசக அபிமானி ஒருவர் அங்கே. இன்று இவர், புகழுக்குரிய புதுக் கவிதையாளர். (ஆனால், வரிக்குதிரை சவாரி செய்யமாட்டார்!)
அவரைப் போல, தொலைக்காட்சி, ‘யுடிவி’ உதயத்தில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் றினோஷா நௌஷாத் அந்தக் கிராமமே மற்றும், ஸாஹிரா சரீபுத்தீன் அபூநுஹா, எம். ஸஹ்ரின் அகமத் சலீமா சுபுஹானியா, எம்.ஆர். எஃப் பஹ்மியா எனப் பலர்.
என் பழக்கமெல்லாம் அந்தத் தீவிர வாசகருடன் மட்டுமே! ஆரம்பத்தில் அவர் பெயர் கண்டு, ஒரு ‘மின்னும் தாரகை பெண் என ஏமாந்து விட்ட ஆசாமி! என்னைப் போல ஏமாறிய இன்னொருவர் தமிழக மாநாட்டு மேடையில் 2011ல்
பத்தாண்டுகளுக்கு முன் வரலாற்றுப் புகழ் தமிழகக் காயல்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் ஏமார்ந்தார் அந்த அறிவிப்பாளர்!
கவிஞரை, கவி அரங்கேற்றத்திற்கு மேடைக்கு அழைத்தவர், என்னைப் போல ஏமாந்தவராய், “அடுத்ததாகக் கவிதை அரங்கேற்ற, நான் அழைப்பது இலங்கையிலிருந்து வந்துள்ள நாச்சியா ஃபர்வீன் அவர்களை!” என்று ஒலிவாங்கியில் ஒலித்ததும்,
மிகக் கூச்சத்துடன் ஒலிவாங்கி முன் வந்து நின்றார் நமது புதுக் கவிதைக்காரர் “நாச்சியா தீவு ஃபர்வீன்” என்கிற “அப்துல் ரஹீம் முகம்மது ஃபர்வீன்”!
அறிவிப்பாளரிடம் சரியாகவே “நாச்சியா தீவு ஃபர்வீன் என்றே ஏற்பாட்டாளர்கள் அச்சடித்து வழங்கியிருக்க, “அதென்ன நாச்சியாவில் ஒரு தீவு!
அச்சுப் பிழை! இருக்கவே முடியாது” என்று அவராகவே “தீவு” என்பதை விழுங்கி ‘நாச்சியா ஃபர்வீன்’என்று அறிவிப்பு!
நல்லது கொஞ்சம் சிரித்து வைப்போம். இப்போது நான் உங்களுக்கு இனிப்பை வழங்க அழைத்துப் போகப்போகிற இடம் அந்தக் கவிஞரின் அழகு கொழிக்கும் கிராமத்திற்கே.
ஆனால் புதுக்கவிதையாளர் தன் பெயருடன் சேர்த்திருப்பது போல் அரச பதிவுகளில் ஊர்ப் பெயர் இல்லை.
“நாச்சாதுவ’ என்றே உள்ளது. சிங்களமாக அமைந்து போன பெயரில் நாச்சியார் ‘நாச்சா’வாக ஆனது ‘துவ’ (மகள்)வும் இணைந்தது.
‘நாச்சா மட்டுமே பெயர்ப்பலகையில் வந்ததற்கு உச்சரிப்பில் ஏற்பட்ட கோளாறாகவோ எழுத்துப் பிழையாகவோ இருக்கக் கூடும். ‘துவ’ சேருவதற்கு ஒரு சரித்திர சம்பவம் காரணம்.
‘நாச்சியாதீவு’ என கவிஞர் ஃபர்வீன் போன்றோர் பெயருடன் சேர்ப்பதற்கும் மூத்த பெரியவர்கள் அப்படி மாற்றி அழைக்கத் தொடங்கியது காரணம்.
நல்லது. அனைத்தையும் நறுக்கென்று நான்கு வார்த்தைகளில் சொல்லிப்பார்க்கிறேன்.
அநுராதபுரப் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பல கிராமங்களுள் ஒன்றாக இந்த ‘நாச்சாதுவ’ விளங்குகின்றது. இங்கே அமைந்துள்ள அழகு சொட்டும் குளமும் அதனைச் சூழ அமைந்துள்ள மருத நிலமும் கண் கொள்ளாக் காட்சிகள்.
ஆரம்ப காலத்தில் இந்தக் குளம் அமைந்திருக்கவில்லை. கானகத்தின் நடுவே காணப்பட்ட ஒரு காட்டு நிலம். செழிப்பாக பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது.
அப்பொழுது கண்டி ராச்சியத்தில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்தன. போர் ஒன்றினால் முடங்கிப் போயிருந்த வேளை, அங்கிருந்து புகலிடம் தேடி சிங்களவரும் முஸ்லிம்களும் புறப்பட்டிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்தினர் மல்வத்து ஓயாக் கரையோரமாக வந்தவர்கள் மேலே குறிப்பிட்ட இடத்தைக் கண்டறிந்து நிரந்தரமாகக் குடியேறத் தீர்மானித்தனர்.
ஒரு கணிசமான பகுதி “நாச்சியார்” என்ற செல்வாக்கு மிக்க கண்டிப் பெண்மணியின் குடும்பத்தாருக்கு சொந்தமாகிப் போனது.
அதே சமயம், பயிர்ச் செய்கைகளுக்கும், நீர் வளங்களைச் சேமிக்கவும் பொருத்தமான இடமாக இருப்பதைக் கண்டு, கேட்டறிந்த அநுராதபுரத்தை ஆண்ட அரசன் இரண்டாம் சேனன், நாச்சியார் என்ற அந்தப் பெண்மணியை அழைத்து அவர் வசமிருந்த நிலப்பகுதியைக் கோர, அப்பெண்மணியும் பொது நலம் கருதி உடன் சம்மதம் தெரிவித்து விட்டார்.
அதனால் பெருமிதம் பேரானந்தமும் கொண்ட மன்னன், “நாச்சியா துவ சம்மதித்து விட்டார்” என சிங்களத்தில் சகலரது முன்பும் ஆரவாரப்பட்டு அறிவித்தான்! அதுவே அந்தக் குடியிருப்புக்கும் குளத்திற்கும் அழகிய பெயராக வழங்கப்படலாயிற்று.
மேலும் மற்றுமொரு சம்பவமும் வாய்மொழிக் கதையாக வழக்கிலுள்ளது.
கண்டிப் போரில் தாக்குபிடிக்க முடியாது போன கண்டி அரசன் முஸ்லிம் மக்கள் கூட்டத்துடன் மறைந்து அவர்களுடன் வந்ததாகவும், அவனையும் பிரதானிகளையும், கண்ணில் தென்பட்ட மலைக் குன்று ஒன்றுக்குள் ஒளித்து வைத்து முஸ்லிம்களே காப்பாற்றியதாகவும் வழி வழிக் கதைகள்.
“மன்னன் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலைக்குன்று குளத்தின் ஒரு கரையில் இன்றைக்கும் காணப்படுகிறது. வாருங்கள், வந்து பாருங்கள்” என்றழைக்கிறார் நம் இதயத்துக் கவிஞர் நாச்சியாதீவு ஃபர்வீன்!
அத்தோடு பாழடைந்த ஒரு பள்ளி வாசலின் சிதைந்த பகுதிகளும், அன்று ஞானியாக வாழ்ந்து மறைந்த ஒரு மகானின் அடக்கஸ்தலத்தையும் காட்டுவாராம்.
ஒரு சுற்றுலா ஏற்பாடுசெய்து பார்க்கத் துடிக்குது மனசு.
நன்றி : இங்கு நாம் ரசிக்கும் படங்களிரண்டையும் வழங்கியவரும் கவிஞர் நாச்சியாதீவு ஃபர்வீனே! நன்றிக்குரியவர்.