கொரோனாவின் தாக்கத்தினால் கல்வியைச் சீரழிக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவின் தாக்கத்தினால் கல்வியைச் சீரழிக்க முடியாது

எதிர்காலத்தில் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கின்றது.

இதன்படி, வைரஸ் பரவலுக்கு ஏற்ப நாடும் நாட்டு மக்களும் இசைவாக்கம் அடைய வேண்டுமேதவிர, நாட்டுக்கும் அன்றாடச் செயற்பாடுகளுக்கும் தாழிட்டுக்கொண்டிருக்க முடியாது என்பது புலனாகிறது. இதில் கல்வித்துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஏனெனில், வைரஸ் காரணமாக நாட்டின் எதிர்காலத்திற்கு விலங்கிட முடியாது என்பதே இதன் பொருளாகும்.

நாட்டின் பொருளாதாரத்திற்குச் சிறு தொழில் முயற்சியாளர்களும் தொழிற்றுறையினரும் எவ்வாறு பங்களிப்பு செய்கிறார்களோ, அதேபோன்று அரசின் செயற்பாடுகளை சமூகமயப்படுத்துவதற்காக  பாடசாலை சமூகம் எண்ணற்ற பங்களிப்பை நல்குகிறது.

அதிலும் இந்தக் கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகளை சமூகமயப்படுத்துவதற்குப் பாடசாலைகள் அளப்பரியதொரு வகிபாகத்தைச் செய்ய முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள். பாடசாலைச் சமூகத்திற்குச் சுகாதார வழிமுறைகளை அறிமுகப்படுத்திவிட்டால், அஃது இலகுவாகக் குடும்பங்களுக்குச் சென்று சமூகமயமாகிவிடும் என்பது அவர்களின் கருத்து. எனவே, இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகளைப் பூட்டிவைப்பது சிறந்ததன்று. எந்தளவிற்குப் பாடசாலைகளைத் திறக்க முடியுமோ அந்தளவிற்கு நாட்டிற்கு நன்மையே. அதேநேரம், மாணவர்களின் மன உளைச்சலைத் தவிர்க்கவும் பாடசாலைகளைத் திறப்பது அத்தியாவசியமாகும்.

இந்தப் பின்னணியில்தான் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளைத் தாமதப்படுத்த இடமளிக்க முடியாதெனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றிப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பைப் பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹோமாகம, மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் Zoom தொழில்நுட்பம் மூலம் தொடர்புகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இந்தக் காலப்பகுதியில் நவீன தொழில்நுட்பம் கற்றல் செயற்பாடுகளுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்வதுபோலவே, பொது நிகழ்ச்சிகளுக்கும் துணைபுரிகிறது. இந்த வைபவத்தில் உரையாற்றிய பிரதமர்:- கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முழு உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளைத் திறப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எவர் எதைக் கூறினாலும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தாமதிக்க அல்லது அதில் பின்னடைவுகளை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளில் பிள்ளைகளின் வரவு குறைந்து காணப்படுவதாக அறியமுடிகிறது. இந்தச் சூழ்நிலையில், பெற்றோருக்குப் பாரிய பொறுப்புள்ளது. அதன்படி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றிப் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் பிள்ளைகள் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழல் இயல்பாக உருவாக்கப்படுவது அவசியமென்றும் தெரிவித்திருக்கின்றார்.

கொவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள், முடக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதன்போது முதல் நாளிலேயே 51% மாணவர்கள் வருகை தந்துள்ளனர். அதேநேரம், 83% ஆசிரியர்களும் வருகை தந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  என்னதான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், மாணவர்களின் முகத்தைப் பார்த்து நேருக்கு நேராகக் கற்பிக்கும்பொழுது ஏற்படும் பெறுபேறு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

நேரடியாக மாணவர்களின் முகத்தையும் அசைவுகளையும் பார்த்தும், மாணவர்கள் வழங்கும் பதில்களைக் கேட்டும் பரஸ்பர பரிமாற்றம் இடம்பெறும்போது கிடைக்கின்ற பெறுபேறுக்கும் ஷூம் முதலான தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் பார்த்துக் கற்பிப்பதால் ஏற்படும் பெறுபேறுகளுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன என்கிறார்கள் அவர்கள்.

மேலும், இலங்கையைப் பொறுத்தவரை இன்னமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைய வேண்டியுள்ளது. இணைய வழிக் கற்பித்தலை மேற்கொள்ளக்கூடிய வசதி நாட்டில் நாலா புறங்களிலும் முழுமைபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோன்று பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் இணைய வழிக் கற்பித்தலை மேற்கொள்ளக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.

ஆகவே, மாணவர்கள் ஆசிரியர்களுடன் நேருக்கு நேராக அமர்ந்து கற்றுக்கொள்வதை எந்தக் காரணத்திற்காகவும் கைவிட்டுவிட முடியாத நிலையே காணப்படுகிறது. ஆதலால், தற்போது அரசாங்கம் அறிவுறுத்தி அறிமுகப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்ததாகும். பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதன் மூலம் பெற்றோர்களுக்குத் தெரியாத வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதற்கும் பெற்றோர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.
இதனையே பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதற்கொண்டு அனைவரும் வலியுறுத்துகிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாகப் பிள்ளைகளின் கல்வியைச் சீரழிக்க இடமளிக்க முடியாது என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.

Comments