நா காக்க மறந்த ரஞ்சனின் எதிர்காலம்! | தினகரன் வாரமஞ்சரி

நா காக்க மறந்த ரஞ்சனின் எதிர்காலம்!

நடிகர், அரசியல்வாதி ஆகிய பாத்திரங்களை வகித்த ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும், சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்குகளிலும் அவருடைய பெயர் முன்னரை விட அதிகம் இப்போது உச்சரிக்கப்படுவதையே காணக் கூடியதாகவுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அவருக்கான தீர்ப்பை கடந்த 12ஆம் திகதி வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பினால் அவர் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் அவரை விடுதலை செய்வதற்கான கடும் பிரயத்தனத்தை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சிறைக்குச் சென்ற இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்க காணப்படுகின்றார். இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு, நீதிமன்றத் தீர்ப்பொன்றை விமர்சித்ததன் காரணமாக இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், அவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததுடன், 2004ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றிருந்த அவர், 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுலை செய்யப்பட்டார்.
ஆனாலும், ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு வித்தியாசமானதாகும்.

திரைப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயக நடிகராகவிருந்து அரசியல்வாதியாக மாறிய ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் பேச்சுகளும் திரைப்படப் பாணியில் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாகவிருக்கும். தனது வாய்க்கு கடிவாளம் போடாமல், நா காக்க மறந்து, தனது மனதில் தோன்றுவதை கூறும் ஒரு விசித்திரமான அரசியல்வாதியாக அவர் காணப்பட்டார்.

அவருடைய இந்த அரசியல் அணுகுமுறை சிலருக்குப் பிடித்திருந்தாலும், பலர் அவருக்கு எதிரியாகிப் போனார்கள் என்றே கூற வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் மிகவும் அவசியமென்பதை ரஞ்சன் மறந்தவராகவே நடந்து கொண்டார்.

ரஞ்சன் ராமநாயக்க ஏன் சிறைசெல்ல வேண்டி ஏற்பட்டது என்பதை இங்கு பார்ப்போம்.

2017ம் ஆண்டு ஓகஸ்ட் 21ம் திகதி அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, 'இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுள் அநேகமானோர் மோசடி மிக்கவர்கள்' எனத் தெரிவித்திருந்தார்.

அவரது இக்கருத்து ஏற்புடையது அல்ல. அக்கருத்து மிகவும் தவறானது. நாட்டின் சட்டத்தின்படி அவர் கூறியது மிகவும் குற்றம். நீதித் துறையை அவமதிப்பதாகும். நீதித் துறை மீது மக்களுக்கு அவநம்பிக்ைகயை உண்டாக்கும் பாரிய குற்றமொன்றையே ரஞ்சன் செய்திருந்தார்.
அக்கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இராஜாங்க அமைச்சராகவிருந்த அவர் கூறிய இந்தக் கருத்து, ஒட்டுமொத்த நீதிமன்ற கட்டமைப்பு மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம்  நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தி மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்குச் சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க, தான் முன்னர் கூறிய கருத்தின் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லையெனக் கூறியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செயயப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், பாராளுமன்றத்திலும் பல தடவைகள் நீதிபதிகள் பற்றி சட்டத்துக்கு முரணான விதத்தில் பொறுப்பற்ற மோசமான கருத்துகளை தொடர்ந்தும் தெரிவித்து வந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது குறித்து பலரும் விசனம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் தொடர்பான இந்தக் கருத்துகளுக்கு அப்பால் அரசியல்வாதிகள், நீதித்துறையினர், சட்டத்தரணிகள், நடிகைகள் எனப் பலருடன் அவர் நடத்திய தொலைபேசி கலந்துரையாடல்களை ஒலிப்பதிவு செய்து அவற்றை வெளிப்படுத்தியும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

வழக்குகளிலிருந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினருடன் கலந்துரையாடும் ஒலிப்பதிவுகளும் 'ரஞ்சன் லீக்' மூலம் சமூக ஊடகங்களில் உலாவியிருந்தன.

அது மாத்திரமன்றி நடிகைகள் மற்றும் பெண் அரசியல்வாதிகளுடன் ஆபாசமாகப் பேசிய விடயங்களும் பலரை அருவருக்கச் செய்ததுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கியிருந்தது. ஆக மொத்தத்தில் ரஞ்சன் ராமநாயக்க நடிகராக இருப்பதாலோ என்னவோ எப்பொழுதும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாதவராகவே காணப்பட்டார்.

இருந்த போதும், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அது மாத்திரமன்றி, அனுமதிப்பத்திரம் இன்றி ஆயுதம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக சபையில் உரையாற்றும் போது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதை மறுக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்திருந்தார். இருந்தாலும் மோசடி பற்றிப் பேசும் போது எவர் பற்றியும் எந்த ஆதாரமும் இன்றி குற்றங்களை அடுங்கிக் கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை உண்டு எற்பதற்காக வாயை கட்டுப்பாடு இன்றி பயன்படுத்துவது எந்தளவுக்கு அரசியல் நாகரிகமானது என்பது பல அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக பிரதான எதிர்க் கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தி போராடத் தொடங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்றத்தில் இது தொடர்பான கருத்துகள் எதிரொலித்தன. பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவை ஏன் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையென சபாநாயகரிடம்  கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து ரஞ்சன் விவகாரம் சபையில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

கொலைக் குற்றவாளியாக மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியுமாயின் ஏன் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்து வர அனுமதி வழங்கவில்லையென எதிர்க் கட்சித் தலைவர் வினவியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சியில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தன.

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரஞ்சன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்பதற்கான தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அரசியலமைப்பின்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு சிறையில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதுடன், அவ்வாறானதொரு நபர் 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. எனினும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அவ்வாறான நிலை ஏற்படாது என்றும், இதற்காகத் தாம் தொடர்ந்தும் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த நீதிக் கட்டமைப்பையும் மோசடி மிக்கது என விமர்சிக்கும் ஒருவரை மீண்டும் சபையில் அமர வைத்து அழகு பார்க்க அனுமதிக்க முடியாது என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் சுட்டிக் காட்டியிருந்தனர். இதனால் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க் கட்சியினருக்கும் இடையில் சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

அனைத்துத் தரப்பினதும் கருத்துகளை செவிமடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி ஒரு மாத காலத்துக்குள் முடிவொன்றை அறிவிப்பதாகக் கூறினார். நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை எதுவும் இல்லையென்பதால் நீதிமன்றமே தண்டனையை தீர்மானிக்கின்றது. இந்த அடிப்படையில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்றும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இருந்த போதும் தற்பொழுதிருக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இவ்விடயத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்த முடியாது.
வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ள முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார்.

அரசியல்வாதியாக இருந்தாலும் நாவடக்கம் முக்கியமானது என்பது ரஞ்சன் ராமநாயக்கவின் விடயத்தில் புலப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி நாட்டின் மூன்று தூண்கள் என வர்ணிக்கப்படும் நீதித்துறை, சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்றும் சமாந்தரமாக ஒன்றுடன் ஒன்று இணங்கிச் செயற்படுவது நாட்டின் சுமுகமான நகர்த்தல்களுக்கு அடிப்படையாக அமையும். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை காணப்படுகிறது என்பதற்காக வாய்க்கு கடிவாளம் இன்றி வார்த்தைகளை விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு இது ஒரு உதாரணம் எனக் கூறலாம்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வாக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்னவோ நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் என்றாலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது புதிய அரசாங்கத்தின் காலத்திலாகும். எனவே, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திசைதிருப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எதுவாக இருந்தாலும், ரஞ்சன் ராமநாயக்க தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதாயின் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைக் கோர வேண்டியவராக உள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விடயத்தில் நீதிமன்றத்திடம் அவர் பொதுமன்னிப்பு கோரவில்லை. எப்போதே அதிலிருந்து வெளியில் வந்திருக்க முடியும். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்று தொடர்ந்தும் அரசியல் அரங்கில் அவர் நீடிப்பாரா அல்லது இத்துடன் அவருடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடுமா என்பது சிறிது நாட்கள் சென்ற பின்னரே தெரியவரும்.
 

Comments