துயரார்ந்த மறைவுகள் | தினகரன் வாரமஞ்சரி

துயரார்ந்த மறைவுகள்

சின்ன காம்புகளையுடைய பூக்களும் நீளத்தண்டுகளையுடைய வெள்ளைப் பூக்களும் தேவாலய பலிபீடத்தை அலங்கரித்திருந்தன. அவ்விடத்திலே ஒளியிலே நிற்கிறேன் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் உயரமான ஒரு மெழுகுவர்த்தி தேவமகனின் உயிர்ப்பின் ஒளியை புனிதத்தன்மையில் உமிழ்ந்து கொண்டிருக்கிறது. பீடத்தின் கீழே கிறாதியின் அருகில் சாவிலிருந்து வல்லமையுடன் உயிர்த்தெழுந்த யேசுவின் திருச் சொரூபத்தின் காட்சி அளவு காண முடியா தேவவல்லமையின் உயர்வை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 

திருச் சொரூபத்தின் கண்களின் ஆழத்திலிருந்தாய் வெளிப்படும் தெய்வீகப் பார்வை விண்ணை நோக்கி மலர்ந்திருப்பதாகவே வெளிப்பட்டதாக இருக்கிறது. உடலில் துளையிட்ட ஐந்து திருக் காயங்களின் காட்சியும் மனித குல ஈடேற்றத்துக்காக பாடுபட்டு மரித்த தேவமகனின் தியாகப் பலியை பறைசாற்றுகின்றன. கையிலே பிடித்த படி இருக்கும் வெற்றிக்கொடியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள சிலுவைக் குறி மனிதகுலத்துக்கு ஈடேற்றம் கொடுத்த அடையாளப்படுத்தலை ஞாபகப்படுத்துகிறது. 

தேவாலயத்திற்கு வெளியே தங்கள் உறவினர்களோடும் நண்பர்களோடும் முக மலர்ச்சியுடன் உரையாடிக் கொண்டு வந்தவர்களெல்லாம் இப்போது உள்ளே தேவாலயத்துக்குள்ளாக வந்ததும் மண்டியிட்டு கை குவித்து மௌனமாக இருக்கிறார்கள்.

திருப்பலிப் பூசை ஆரம்பமாகிறதற்கு முன்பு தேவாலயத்துக்குள் இருப்பவர்கள் எல்லாம் உயிர்த்த ஆண்டவர் சொரூபத்தைப் பார்த்துக் கொண்டு தங்கள் வாழ்வின் இருண்ட துயரங்களெல்லாம் விலகிப்போய் பொன்னான நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற வேண்டுதலோடு பக்தியோடு மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறு மணிக் கொத்துக்கள் குலுங்கவும், அவை ஒன்றாக சேர்ந்தொலி செய்யும் சத்தத்தோடு குருவானவர் இப்போது பலிப்பூசை ஒப்புக் கொடுப்பதற்காக பீடத்தை நோக்கி வருகிறார். முழந்தாள் மண்டியிட்டபடி இருந்தவர்களை விட இருக்கைகளில் இருந்து கொண்டவர்களும் இப்போது பூசை காணும் வணக்கத்திற்காக தாங்களும் இப்போது முழந்தாள் படியிட்டு திருப்பலிப் பூசையில் பங்கேற்க தயாராகுகிறார்கள். பலிப் பீடத்தின் அருகே குருவானவர் வந்துவிட்டார். பலி ஒப்புக்கொடுத்தலின் முன்பு அவர் அணிய வேண்டிய சம்பிரதாயமான மேலங்கிகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை எல்லாம் ஒழுங்கமைய அணிந்து முக்கிய அங்கியையும் இறுதியாக கையிலெடுத்து முத்தம் கொடுத்து அணிந்து கொண்டு பலி ஒப்புக் கொடுக்கும் ஆராதனைகளை அவர் ஆரம்பிக்கிறார். 

நறுமணப் புகை விடும் தூபம் காட்டுகிற சங்கிலித் தூக்குச்சட்டியின் தகர விளிம்பை நகர்த்தி குமஞ்சான் போடுவதற்காக பூசை உதவுக்காரர் குருவானவரிடத்தில் அதை கொண்டு வருகிறார்.குருவானவர் இரண்டு சிமிழ் குமஞ்சான் கலவையை அந்த நெருப்புத் தூக்குச் சட்டியில் இடுகிறார். அதைப் பெற்றதும் தூபம் காட்டும் சங்கிலித் தூக்குக் கலசத்தை முன்னும் பின்னும் ஆட்டி அவர் அசைக்கிறார். நறுமணப் புகை உடனே அதனிலிருந்து வெளியேறி நாற்புறமும் வாசனையை கமழப் பரப்புகிறது. 

பூசை தொடங்கு முன்பே தங்களைத் தயார் படுத்தியதான காத்திருப்பின் காலத்திலிருந்த பாடகர்கள் “தேவஸ்துதி” பாடலைப் பாடத் தொடங்குகிறார்கள். தேவாலயத்திற்குள் ஆராதனை வணக்கத்திலிருந்த ஒவ்வொருத்தரும் அந்தப் பாடல்களைத் தாங்களும் காதால் கேட்டுக் கொண்டபடியே ஒத்ததாய் சேர்ந்து பாடிக்கொள்கிறார்கள். பாடலுடன் சேர்ந்து இணைந்து பயணிக்க, மகத்தான பியாணோ இசையும் திறக்கப்பட்டிருக்கிறது. 

தேவபக்திப் பாடலும் அதனோடு சேர்ந்த இசையும் தேவாலயத்தை நிறைக்கின்றன. திருப்பலிப் பூசை வழிப்பாட்டிலே குருவானவர் சொல்கிற ஜெபங்களின் சக்திமயமானது உயர்கிறது. அவர் சொல்லிய ஜெபங்களின் தொடர் ஜெபங்களை வணக்கத்தினர்களும் சொல்லி ‘ஆமென்’ என இறுதியில் பூரணப்படுத்தி நிறுத்துகிறார்கள்.  

ஞாயிற்று கிழமையானது கிறிஸ்தவர்களுக்கெல்லாம் ஒரு ஓய்வு நாளாக உண்டாகி இருப்பதாகவே திருச்சபை அதை நிச்சயப்படுத்தி இருக்கிறது. இந்நாளில் கட்டாயமாக ஆலயத்துக்குச் சென்று பூசை காண வேண்டும் என்பதும் கிறிஸ்தவ மக்களுக்கு வேத சட்டமாக உள்ளது. இந்த ஞாயிறானது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்த ஞாயிறாக கொண்டாடப்படுவதாலும் இந்நாள் எல்லோருக்கும் முக்கிய கடன் திருநாளாகவும் இருந்தததாலும் கட்டாயமாக எல்லா கிறிஸ்தவர்களுமே இந்த ஞாயிறில் பூசையில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று வழமையை விட கோயில் முழுக்க நிறைந்ததாகவே அங்கே கூடியிருந்தார்கள். இப்படி திருநாள்களுக்கெல்லாமே செல்வம் நிறைந்த இல்லங்களில் இருந்து வருகை தருகிற வசதியுள்ளவர்கள், எவர் கண்ணையும் கவர்ந்திடும் ஆடை அணிந்ததாகத்தான் வருவார்கள். அவர்களது சின்ன குழந்தைகள் அங்கே சுற்றிப் பறந்திடும் வண்ணத்துப் பூச்சிகள் போன்றும் கோயிலுக்குள் அங்குமிங்கும் ஓடித்திரிந்திடவே செய்வார்கள.; தின்றும் தீராமல் வீட்டிலே கிடக்கும் உணவு வகைகளினாலே அவர்களுக்கு சாப்பாடு என்கிற அந்த விஷயத்தைப் பற்றி என்னதான் ஒரு கவலை! அதைப்பற்றியதான ஏதும் ஒரு யோசனை இவர்களுக்கு சொல்லப்போனால் அப்படி இல்லை தானே? ஆனாலும் இவர்களை விட பெருந்தொகையானவர்கள் இங்கே நெஞ்சில் துன்பச் சரித்திரத்தை வைத்துக் கொண்டல்லவோ அதையெல்லாம் மனதால் கடவுளோடு கதைத்திட இங்கே வந்திருக்கிறார்கள். “ஏழ்மையே தொற்று நோயாக படர்ந்ததாய் வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் நிலையை கடவுளே நீர் மாற்றமடைய செய்திட மாட்டீரோ” என்கிறதாகத்தான் அவர்களிலும் ஒரு சிலர் மன்றாட்டம் செலுத்துகிறதாக வெளிப்படுகிறது. கோயிலுக்குள்ளே இவ் வேளை அங்கே இருந்து கொண்டிருக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு என்னதான் யோசனை மனதிலிருக்கும்? அவர்களுக்கென்றால் மனசுக்குள் இருந்து உயர்ந்து வருகிற நினைப்பு சாப்பாடாகத்தானே இருக்கும். 

பழம் சாப்பிடுவதே ஒரு வழக்கமில்லாத ஒரு ஏழை வீட்டுக்கு அருகே வாழும் வசதியான ஒரு பணக்கார கிறிஸ்தவ குடும்பம் விளைந்து பழுத்த ஒரு பெரிய சீப்பு யானை வாழைப்பழத்தையும், பெரிய கேக் துண்டையும் பலகாரங்களையும் பெருநாளுக்கென்று சந்தோஷமாக அவர்களுக்குக் கொடுத்திருந்ததால் அதனால் என்னதான் நடக்கும். 

அந்த வீட்டுப் பிள்ளைக்கு “நான் எப்போது இந்தப்பூசை முடிந்து வீட்டுக்குப் போவேன்! அங்கே அருமையான ​ேகக் துண்டுகள் எடுத்சே் சாப்பிடுவேன்! அந்த வாழைப்பழமும் தின்ன ஆகா நல்ல ருசியாக அது இருக்குமே!” என்ற தாய் தானே உள்ள யோசனைகளெல்லாம் அவனுக்கு இன்பமாக இருக்கும். இவ்வகை ஞாபகங்களில் நடமாடிக்கொண்டு பரமானந்தப் பரவசமாக அவையெல்லாம் அவனுக்கு இருந்தாலும் வயிற்றிலே அந்தப் பசியானது எழுந்து அவனுக்கு வலிக்கவும் கூட செய்திடுமே. 

நேரம் கடந்து நடுப்பூசை அளவுக்கு இப்போது வந்து விட்டது. தேவ அப்பத்தை இறைவன் ஆசிர்வதித்தருள வேண்டுமென்று குருவானவர் விண்ணை நோக்கிய பாவனையிலே அந்த அப்பத்தைக் கைகளிரண்டிலும் பிடித்தபடி “இதோ ஆண்டவரின் சரீரம்” என்று சொல்லி அதை மேலே உயர்த்துகிறார்; ஜெபிக்கிறார். இந்நேரம் எல்லோரும் தலை தாழ்த்தி வணங்கி பக்தியாகி சரணடைகிறார்கள். அது முடிந்து திராட்சை இரசம் உள்ள பாத்திரத்தையும் கைகளிலேந்தியபடி, மேலே அசைந்தியங்காமல் பிடித்தப்படி “இதோ என் இரத்தம்” என்று அவர் பக்தியோடு சொல்ல, எல்லோரும் அப்போது ‘தேவனுக்கு நன்றி” என்கிறார்கள்.  

இந்த வழிபாடு நிறைவுற்றதும் நீரோட்டமாய் ஒலித்திடும் பியானோ இசை பாடர்களுக்கு பாட்டை தொடங்கி நடத்திட முதலெடுப்புக் கொடுத்துத்துணை புரிகிறது. தேவ அப்பத்தின் மகிமைக்குரிய பாட்டு பாடகர்களின் வாயிலிருந்து இப்போது பிறக்கிறது. தேவ அப்பம் புசிப்பதற்கு தங்களைத் தயார் படுத்தி இருந்தவர்களெல்லாம் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நிரையாக ஒழுங்காக கிறாதியண்டைக்கு வர நடந்து வருகிறார்கள். 

குருவானவரும் சற்பிரசாதம் ஒளிக்கதிர்பரப்புகிற பாத்திரத்தை கைகளில் எடுத்துக் கொண்டு தேவ அப்பத்தை அங்கே வருகிறவர்களுக்கு பகிர்ந்தளிக்க அவர்களிடமாக வருகிறார். தேவ இரட்சியைப் பெற்று அன்போடு அனைவரிடமும் சேர்ந்து தேவ அன்பிலே வாழ்ந்திட சற்பிரசாதம் குருவானவரால் வழங்கப்படுகிறது. இந்நேரம் சகலரின் உடல் வெப்பமும் பறந்திடும் அளவுக்கு முடியை கலைக்கும் அளவிலே நல்ல காற்றும் தேவாலயப் பெருங்கதவுகளுக்குள்ளாலும் வீசிக் கொண்டிருக்கிறது. வியர்வையில் கரைந்த உடல்களெல்லாம் உள்ளே கடந்து போகும் காற்றால் இவ்வேளை சுகம் பெறுகிறார்கள். எவரின் பொறுமையையும் கலைத்திடாத அளவுக்கு குருவானவர் இப்போது சிறு பிரசங்கம் ஆற்றுவதற்கு ஆரம்பிக்கிறார்.  

இயேசுவின் உயிர்த் தெழுதலை ஞாபகப்படுத்தக் கூடியதான அந்த நிகழ்வை தன்பிர சங்கத்தில் இதமாக அவர் கூறுகிறார்.  
“அருமையான சகோதர சகோதரிகளே, இயேசு இந்த பூமியில் வாழ்ந்த காலம் அனைத்திலும் இரக்க முள்ளவராகவும், தயவுள்ளவராகவும், தாழ்மையானவராகவும் எல்லோருமே அணுகக் கூடியவராகவும் இருந்தார். பலவீனரும், ஒடுக்கப்பட்டவர்களும், எல்லாவிதமான ஜனங்களும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பணக்காரர், ஏழைகள், வல்லமை வாய்ந்தவர்கள், படு மோசமான பாவிகளும்கூட, அவரோடு கூட இருப்பதில் எவ்வித தயக்கத்தையும் உணரவில்லை.  

உண்மையிலேயே இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று கற்பித்தது மட்டுமல்லாமல், அவர்கள் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் காண்பித்தார். நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். அன்பான முன்மாதிரியைத்தான் கிறிஸ்தவர்களாகிய நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி எவரோடும் அன்பு பூண்டதாய் வாழ்ந்து எம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.  

இயேசுவின் மிக மேம்பட்ட வழிகாட்டலிலே கிறிஸ்தவர்களாகிய நாங்களும் அவற்றை பின் பற்றி வாழ வேண்டும். இயேசு இம் மனித குடும்பத்தின் பாவங்களைப் போக்கி ஈடேற்றம் பெற செய்வதற்காகவே இப்பூமியில் பிறந்தார். சிலுவை மரத்திலே இரத்தம் சிந்தி சகல பாடுகளையும் பட்டு எமக்காகவே அவர் தம் உயிரை விட்டார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்ற தேவ வாக்கியம் நிறைவேற மரித்து மூன்றாம் நாளிலே ஆத்தும சரீhத்தோடும் கல்லறையில் நின்று அவர் உயிர்த் தெழுந்தார்.  

மனித குலம் சாவிலிருந்து உயிர்த்தெழ இயேசுவின் சிலுவைப்பலியானது எம்மையும் சாவிலிருந்து மீட்டு உயிர்த்தெழு அருள்பாலித்திருக்கிறது. அன்பானவர்களே அப்போஸ்தலன் யோவான் சொன்னதை இவ்வேளை அதை நாங்களும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்வோம். இயேசு இந்த உலகத்தில் செய்த அனேக காரியங்களுமுண்டு என்று சொல்கிற அவர் மேலும் ஒரு விஷயத்தை சுவிசேஷத்திலே பதிவு செய்திருக்கிறார். இயேசுவைப்பற்றி அவர் பதிவு செய்திருக்கிற அந்த வார்த்தைகள். 

“அவர் செய்த வேறு அனேக காரியங்களான அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாததென்று எண்ணுகிறேன். ஆமென்” என்பதாகும். 

எனவே, சகோதர்களே எம் வாழ் நாளிலே இயேசு கூறிய அன்பை கடைப்பிடித்து அந்த அன்பிலே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எல்லோருடனும் அன்போடு சேர்ந்து வாழுவோம் என்ற பிரதிக்கினையை இந்த பூசைப் பயிலும் நீங்கள் மன்றாட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அன்போடு உங்களிடமாக கூறிக்கொண்டு இந்த பிரசங்கத்தை நிறைவாக்குகிறேன். பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் ஸ்தோதிரம் உண்டாகக்கடவது ஆமென்.”   என்று இதமாக கூறி தன் பிரசங்கத்தை நிறைவு செய்து விட்டு மிகுதிப் பூசைச் சடங்குகளை நிறை வேற்ற குருவானவர் பீடத்தடிக்குச் செல்கிறார். ஆறுதலாய் மிகுதிப் பூசைச் சடங்குகளையெல்லாம் அவர் நிறைவேற்றுகிறதான அளவிலே இயேசுவினுடைய முக்கிய கூற்றாகிய சமாதான செய்தியை சகலரிடத்தில் பகிர்வதற்கு இரண்டு மூன்று வார்த்தைகளை எல்லோருக்கும் அவர் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதற்காக பீடத்தடியிலே நின்ற படி வணக்கத்தினர்கள் இருந்த பக்கமாக அவர் திரும்புகிறார். 
“இயேசுவின் சமாதானத்தை நாங்களும் ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக் கொள்வோம்” என்று அந்தக் கூற்றும் செயலும் ஒன்றாக கலந்ததாக இருக்கும் அளவுக்கு அவர் இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்து கும்பிட்டபடி சமாதானத்தை அறிவிக்க இரு பக்கமாகவும் அவர் திரும்புவதற்கென்று முனைகிறார். 

அவரைப்போலவே வணக்கத்தினர்கள் எல்லோரும் இந் நேரமாக தாங்களும் சமாதான செய்தியை தங்கள் அருகாமை இருக்கைகளில் இருப்பவர்களுக்கு தெரிவிக்க கைகளை முதலில் கும்பிட்டுக் கொள்கிறார்கள். 

இந்த முறையில் தங்களின் இரு பக்கங்களில் உள்ளவர்களுக்கும் சமாதான அன்பை அவர்கள் தெரிவித்தாக வேண்டும். இதற்காக ஒரு பக்கம் அவர்களுக்குத் திரும்பியாகி விட்டது. கை கூப்பிய படி சமாதானம் அவர்களுக்குத் தெரிவித்தாகி விட்டது. மறு பக்கமாகவும் கூப்பிய கை மொட்டு சிறிதும் குலையாமல் திரும்புகிறார்கள். 

இந் நேரம் தான் - “டுமார்ர்ர்...” ஐயகோ இது என்ன கொடுமை அங்கே வீசிக்கொண்டிருந்த காற்றுக்குக் கூட இப்படியாக ஒன்று நடக்கும் என்பதை அறியாத ஒரு பெரும் சத்தம். கோயிலுக்குள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளெல்லாம் அந்த ஒரு நொடிக்குள்ளேயே சின்னா பின்னமாகி சிதைத்து தூக்கி எறியப்பட்ட பாதிப்புடன் சேர்ந்த கொடூரமானதான சத்தம். ஒருவரை இதற்குள்ளே எப்படித்தான் தேடினாலும் சதைத் துண்டுகளை கூட கண்டு பிடிக்க இயலாத சகதியாகத்தான் கோயில் முழுக்கவாக இரத்தம் இவ்வேளை கரைந்தோடிக்கொண்டிருக்கிறது. அப்படியே கரும்புகை பொத்திப் படர்ந்து உயிர்களைக் காவுக் கொண்ட அதிகாரம் கெக்கலிக்க வானத்துக்கு அப்பாலும் நான் செல்வேன் என்ற விதத்தில் மேலே மேலேயாய் உயர எழுந்து போய்க் கொண்டிருக்கிறது.

நீ.பி.அருளானந்தம் 
நாவலப்பிட்டி 

Comments