உழைப்பின் மகிமையை பாதுகாக்கும், சமூகமொன்றுக்கான கல்வி முறைமை | தினகரன் வாரமஞ்சரி

உழைப்பின் மகிமையை பாதுகாக்கும், சமூகமொன்றுக்கான கல்வி முறைமை

"புதிய இயல்பு நிலையின்" கீழ் உழைப்பின் மகிமையை பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷதெரிவித்தார்.

விரைவான அபிவிருத்திக்காகவும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடையவும் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நீர்கொழும்பிலுள்ள 16ஆவது பெனடிக்ட் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டப்படிப்புகளை பதிவு செய்வதற்கான ஆரம்ப விழாவில் (15) கலந்துகொண்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

21 ஆம் நூற்றாண்டின் சிரேஷ்ட அறிஞர்களில் ஒருவரான திருத் தந்தை புனித 16ஆவது பெனடிக்ட் ஆண்டகைக்கு கௌரவம் செலுத்தும் வகையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் எண்ணக்கருவின் அடிப்படையில் பி.சி.ஐ உயர்கல்வி நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பி.சி.ஐ நிறுவனம் மினுவங்கொட வீதி, போலவலானவிலுள்ள இலங்கை ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 17,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடநெறிகளை இங்கு பயின்றுள்ளனர்.

பல்கலைக்கழக கல்வியின் தரத்தை சிறந்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் "ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக" மாற்றுவதன் அவசியத்தையும், தொழில்நுட்ப அறிவு நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டுதலின் கீழ் தொழில்நுட்ப அறிவையும் சிறந்த விழுமியங்களையும் சரியான சிந்தனையையும் கொண்ட ஒரு தலைமுறையை எதிர்காலத்திற்கு வழங்கி பி.சி.ஐ வளாகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

பி.சி.ஐ வளாகத்திற்கு ஜனாதிபதி வழங்கிய அனுசரணையை பாராட்டி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

Comments