முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்ப்பு!; கடல் கடந்த நாடுகளிலும் எதிரொலித்த பரபரப்பு! | தினகரன் வாரமஞ்சரி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்ப்பு!; கடல் கடந்த நாடுகளிலும் எதிரொலித்த பரபரப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்பவமானது நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மாத்திரமன்றி, தமிழர்கள் பரந்து வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தினால் கடந்த திங்கட்கிழமை வடக்கில் மாத்திரமன்றி, கிழக்கின் பல பிரதேசங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நினைவுத் தூபிக்குப் பதிலாகப் புதிய சிலை அமைத்துக் கொடுக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து, இப்பிரச்சினைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவித்தலின் பேரில் இடிக்கப்பட்டது. இரவோடு இரவாக இதனை இடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, விடயம் மாணவர்களுக்குத் தெரியவந்ததும் இச்செயலுக்கு எதிராக அவர்கள் ஒன்றுதிரண்டு விட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமன்றி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அரசியல்வாதி ஒருவரும் சம்பவ இடத்துக்குச் சென்றதால் நிலைமை பரபரப்படைந்தது. மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய விடாது பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியதும், மறுநாள் காலை மாணவர்கள் பலர் இச்செயலுக்கு எதிராக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைய பொலிஸார் தடை விதித்ததால், பிரதான நுழைவாயிலுக்கு வெளியிலேயே மாணவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. பல்கலைக்கழக மாணவர்களுடன் அரசியல்வாதிகள் சிலரும் இணைந்தமையால் இவ்விடயம் மேலும் வலுவடைந்தது. பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியிருந்ததுடன், சுகாதாரப் பிரிவினரும் அங்கே கூட்டம் கூட வேண்டாம் என்று எச்சரித்திருந்தனர்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதனால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்த போதும், எச்சரிக்கைகளையும் மீறி மாணவர்கள் சிலரும், அரசியல்வாதிகள் சிலரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதனால் நிலைமை அடுத்த கட்ட பரபரப்புக்குச் சென்றது.

இதனால் பல்கலைக்கழக துணைவேந்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மேலிடத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே நினைவுத் தூபியை உடைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், மேற்கொண்டு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் துணைவேந்தர் கூறியிருந்தார்.
துணைவேந்தரின் இக்கருத்தால் திருப்தியடையாத மாணவர்கள், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட விவகாரம் அரசியல் அரங்கத்திலும் பரபரப்பான பேசுபொருளாகியது. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு சார்பாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை அராஜகத்தின் வெளிப்பாடு என்று அரசியல் கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டன.

இந்த விவகாரமானது தென்னிலங்கை அரசியலிலும் பலமாக எதிரொலித்தது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்தமை சரியான நடவடிக்கையென்று அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலரே கருத்துக் கூறத் தலைப்பட்டனர். அமைச்சர்களின் கருத்தையடுத்து தென்னிலங்கை பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் இவ்விவகாரம் விவாதப் பொருளாகியது.

அதேசமயம் உள்நாட்டில் மாத்திரமன்றி, தமிழகத்திலிருந்தும் நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் காலம் இதுவென்பதனால் நினைவுத்தூபி விவகாரமானது சற்று பரபரப்பான விவகாரமாகவே அங்கு மாறியது. 

பல்கலைக்கழக தூபி இடிப்பு விவகாரம் தமிழகத்தின் அரசியல் களத்தில் உரத்து ஒலிக்கத் தொடங்கியது. தமிழகம் மாத்திரமன்றி புலம்பெயர்ந்து வாழ் தமிழர் அமைப்புக்கள் பலவும் தமது கண்டன அறிக்கைகளை வெளியிட்டன. குறிப்பாக ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது உள்ளிட்டவர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

சர்வதேச ரீதியிலான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்து சென்றது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை 11ஆம் திகதி நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

இதனை அமைப்பதற்கான அனுமதி அப்போதைய வடமாகாண முதலமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து அனுமதியைப் பெற்றுத் தருவதாக முதலமைச்சர் தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய அனுமதியை வழங்கியிராத போதும் தூபி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்ட சூழலில், இச்சிலையை நீக்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மாணவர்களின்  போராட்டத்துக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலும் வெற்றியளித்திருந்த நிலையில், மாணவர்களைச் சந்தித்த துணை வேந்தர், போராட்டத்தைக் கைவிடுமாறும் நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது மாத்திரமன்றி மாணவர்களுடன் உட்சென்ற துணைவேந்தர் புதிய தூபிக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். உபவேந்தரைப் பொறுத்தவரை இச்சம்பவமானது மனச்சங்கடமான விவகாரமாகவே போயிருந்தது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறிய துணைவேந்தர் மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றியமைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. மறுபக்கத்தில் குறித்த நினைவுத் தூபியை இடித்து அகற்றுமாறு தாம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியாயின் சிலை அகற்றலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற கேள்விகள் வலுத்துள்ளன.

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த அனைத்து போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமானது எனச் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்த போதும் ஏனைய தமிழ் உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு வழங்காமையால் உரிய நடவடிக்கையை எடுக்க முடியாது போனது எனக் கூறியிருந்தார்.

சரியான அனுமதியைப் பெற்று நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கு உரிய அழுத்தங்களை வழங்கத் தயாராக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மறுபக்கத்தில், தூபியை அகற்றுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போது தனக்குத் தெரிவித்திருந்தால் மேலிடத்தில் பேசி உரிய நடவடிக்கையை எடுத்திருக்க முடியும் என குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் கூறியிருந்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் இது விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில், அனைவரும் இணைந்து உரிய அனுமதியுடன் புதிய நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

அதேநேரம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மேலதிகமாக மேலும் இரண்டு தூபிகள் காணப்படுகின்றன. மாவீரர் நினைவுத் தூபி மற்றும் பொங்கு தமிழ் நினைவுத் தூபி என்பன அங்கு காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகம் மாத்திரமன்றி ருஹுனு பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற பலவிதமான நினைவுத் தூபிகள் காணப்படுகின்றன.

குறிப்பாக தென்னிலங்கையில் மாணவர்களின் பின்னணியில் இடதுசாரி அரசியல் தொடர்பு உள்ளதாக கடந்த காலத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் ஒரு நினைவுத் தூபி  இடித்தழிக்கப்பட்டமைதான் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியமைக்கான காரணம் என்றே கூற வேண்டும்.

பி.ஹர்ஷன்

Comments