எந்த அரசில்தான் குறைகள் இல்லை? | தினகரன் வாரமஞ்சரி

எந்த அரசில்தான் குறைகள் இல்லை?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் இதுவரை காலம் இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்களைவிட இந்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை பாராட்டிற்குரியது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் எங்களுடைய அண்மை நாடான இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பல்வேறு விடயங்களில் எமக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர். 

இவ்வாறு குறிப்பிடுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன். தினகரன் வாரஞ்சரியுடன் தன்னுடைய கருத்துக்கனை தொடர்ந்து பகிர்ந்த அவர்......

இன்றைய அரசாங்கத்திலும் ஒரு சில குறைபாடுகள் இருக்கின்றன. எந்த ஒரு அரசாங்கத்திலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. நாங்கள் பாரிய நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் பல குறைபாடுகள் இருந்த காரணத்தினாலேயே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது.

ஆனால் அரசாங்கத்தின் குறைகளை இனம் கண்டு அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக நான் கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பார்த்திருக்கின்றேன்.
இந்திய அரசாங்கம் எங்களுக்கு பெற்றுக் கொடுத்த சுவசெரிய (1990) அவசர சேவை இன்று பல வழிகளிலும் எமக்கு உதவியாக இருக்கின்றது. இன்றைய இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் இந்த அவசர சேவையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் 13வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாண சபைகள் முறையையும் அதனுடைய அதிகாரங்களையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய அரசாங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்று அதற்கான அழுத்தத்தை மோடி அரசா ங்கம் இலங்கைக்கு கொடுத்து வருவது அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது எனவே தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்கள் மீது கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

விசேடமாக மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கையில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதைக் காணமுடிகின்றது. குறிப்பாக இலங்கையின் பொருளாதார முன்னேற்றம். சிறுபான்மை மக்களுடைய விடயங்கள் இந்திய அரசாங்கத்தின் மூலமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம். மலையக பகுதிகளுக்கு 15 ஆயிரம் வீடமைப்பு திட்டம்.

மலையக கல்வி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்திக்கான நிதி அந்த வகையில் புஸல்லாவை பாடசாலை அபிவிருத்தி. அது தவிர மலையக பகுதிகளில் மேலும் 9 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி இலங்கை மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் என பல்வேறு உதவிகளை எங்களுடைய கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றது.

வட மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி பொலனறுவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மும்மொழி பாடசாலை அத்துடன் இலங்கையில் அமைந்துள்ள அநேகமான கல்வியியல் கல்லூரிகளை கணனி மயமாக்குவதற்கான நிதிஉதவி என பல்வேறு விடயங்களையும் குறிப்பிட முடியும்.

அது தவிர இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதி உதவியுடன் ஹட்டன் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை என்பனவற்றை முக்கிய விடயங்களாகக் கருத முடியும். அது மட்டுமல்லாமல் மோடி மலையக பகுதிகளுக்கு வருகை தந்து நேரடியாக இந்த மக்களை சந்தித்தது வரலாற்று சிறப்புமிக்கது.

டன்சினன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான வீடமைப்பு திட்டத்தை பிரதமர் மோடி கணொளி மூலமாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன்போது அவர் பேசுகையில் இலங்கையில் இருக்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவின் வேர்களாக இருந்தாலும் இந்த நாட்டிற்கு வருகை தந்து விருட்சமாக வளர்ந்துள்ளதாகவும், அவர்கள் இரு நாடுகளையும் இணைப்பது மட்டுமல்லாமல் இந்திய பாரம்பரியத்தையும் கலை கலாசாரத்தையும் பாதுகாத்து வருகின்ற ஒரு அணியினராக உள்ளதாகவும் குறிப்பட்டார்.

இதன் மூலமாக அவர்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காண முடிகின்றது. ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் எங்கள் மீது பாராமுகமாக இருந்தாலும் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. அதுவும் மோடியின் ஆட்சியில் எங்கள் மீது அதிக அக்கறை செலுத்துவதை காணமுடிகின்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள கிளங்கன் வைத்தியசாலையில் பல குறைபாடுகள் இருப்பதை நானும் நன்கு அறிவேன். அந்த குறைபாடுகள் அனைத்தும் நிர்வாக ரீதியிலான குறைபாடுகளாகவே இருக்கின்றன. மேலும் இந்த வைத்தியசாலை மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற காரணத்தாலேயே குறைபாடுகள் உள்ளன. இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அதனை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிர்வகித்தால் மாத்திரமே சரியான முறையில் பராமரிக்க முடியும்.

எனவே அயல்நாடான இந்தியாவின் அனுச ரணை எமக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெ னில் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஏனைய அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
எதிர்காலத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை நாட்டிற்கும் எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கும் விசேடமாக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் தன்னுடைய பங்களிப்பை பல  வழிகளிலும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

இன்று இலங்கை அரசாங்கமும் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பேணிவருவதை காணமுடிகின்றது. ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றார்கள். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பின் பொழுதும் பல காத்திரமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நான் முனவைத்த  கோரிக்கையை  அவர் ஏற்றுக் கொண்டார். அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பணிப்புரை வழங்கினார்.

இந்திய அரசாங்கம் பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி எனப் பல்வேறு விடயங்களிலும் தனது பங்களிப்பைச் செய்து வருகின்றது.

இன்று உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  எங்களுடைய நாட்டிற்கு உடனடியாக உதவி செய்வதற்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வந்துள்ளது. இது இன்றைய நிலையில் மிகவும் இன்றியமையாத ஒரு உதவியாகும். இப்படி பல வழிகளிலும் இந்திய அரசாங்கம் செய்துவருகின்ற உதவிகளை நாம் மறந்து செயற்பட முடியாது.

நுவரெலியா தினகரன் நிருபர்

Comments