துரைத்தன போக்கை துடைத்தெறியுங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

துரைத்தன போக்கை துடைத்தெறியுங்கள்!

கிராமத்துடன் கலந்துரையாடிக் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் செயற்றிட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுபற்றி அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தி யிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதில் முக்கியமாக, அலுவலகத்திற்குள் கட்டுண்டு கிடக்காமல், கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுடன் அளவளாவி அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தித் தீர்வைப் பெற்றுக்ெகாடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருக்கிறார். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டுமென்றும், வெளிநாட்டு விவசாயிகளின் கரங்களுக்குச் செல்லும் பணத்தை நமது நாட்டு விவசாயிகளின் கரங்களுக்குப் பெற்றுக்ெகாடுக்கும் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்கின்றன. 

பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கொழும்பைக் கவனிப்பதைப்போன்று கிராமங்களைக் கவனிப்பதில்லை என்ற சுலோகம் மேலோங்கி அஃது ஓர் இளை​ஞர் கிளர்ச்சியையே நாட்டில் உருவாக்கிவிட்டிருந்த யுகமொன்று நாட்டில் இருந்தது. அந்தக் கிளர்ச்சியை அரசாங்கம் இரும்புக்கரங்கொண்டு அடக்கியிருந்தாலும் கொழும்புக்கும் ஏனைய கிராமங்களுக்குமான இடைவெளி இல்லாமற்போகவில்லை. அதனால்தான், அலுவலகத்தில் அடைபட்டுக்கிடக்காமல், கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளிடம் கேட்டுக்ெகாண்டிருக்கிறார். 

கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லும் திட்டத்தை ஜனாதிபதியே அண்மையில் அப்புத்தளை பகுதிக்கு விஜயம் செய்து ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்தார். அங்கு மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு உடனடியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் களத்திலிருந்தே தீர்வினைப் பெற்றுக்ெகாடுத்தார்.

நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றையும் ஜனாதிபதி அங்கு உருவாக்கினார். அந்தக் கிராமத்தில் வாழும் சிலர், முப்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை நகருக்ேக பல ஆண்டுகளாகச் செல்லவில்லை என்றும் அதற்குக் காரணம் போக்குவரத்து வசதியின்மையே என்றும் ஜனாதிபதியிடம் கிராம மக்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் ஒவ்வொரு மாவட்டத்திற்குள் தம்மை வரையறுத்துக்ெகாண்டுள்ளனர். எனினும், சரியான நிலப் பிரதேசம் வரையறுக்கப்படாததால், யாருக்கு யார் சேவை செய்வது என்பது இன்னமும் ஒரு சிக்கல் நிறைந்த விடயமாகவே காணப்படுகிறது.

அதனால், அபிவிருத்தியிலும் தடங்கல்கள் ஏற்படுகின்றன. கிராமங்களின் பிரச்சினைகள் குறித்து அலுவலகத்திலிருந்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், ஒவ்வொரு கிராமத்திலும் வெவ்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குவார்கள். ஒரு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையென்றால், வேறு கிராமத்தில் வெள்ள நீர் பிரச்சினையாக இருக்கும். ஆகவேதான், கிராமங்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதற்குக் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி.

அதனாலேயே கிராமத்துடன் கலந்துரையாடல் என்ற செயற்றிட்டத்தைத் தொடக்கி வைத்திருக்கிறார்.

ஓர் அபிவிருத்திச் செயற்றிட்டத்திற்கு அடிக்கல் நாட்டும்போது அரசியல்வாதிகளுடன் அரச அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். பின்னர் அந்தச் செயற்றிட்டத்திற்கு என்னவானது என்று தேடிப்பார்ப்பதில்லை. சிலவேளை, அஃது அடிக்கல் நாட்டப்பட்டதோடு நின்றுகூடப்போயிருக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, ஆரம்பிக்கப்பட்ட எந்தத் திட்டமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளினுடையதேயன்றி அரசியல்வாதிகளினுடையதன்று. இதனைப் புரிந்துகொண்டால், நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளும் எந்தத் தங்குத் தடையுமின்றி முன்னெடுக்கப்படும். அப்படி முன்னெடுக்கப்பட்டால், அரசாங்கத்தின் மீதும் குறைசொல்லக் காரணமிருக்காது. இதனை அரச அதிகாரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அரச அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பொதுமக்களிடம் தங்களின் துரைத்தனத்தைக் (bureaucracy) காண்பிக்கிறார்கள்.

இந்தத் துரைத்தனம் தவிர்க்கப்பட்டாலே நாட்டில் அரைவாசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும். அது மாத்திரமன்றி அந்தச் செயற்றிட்டத்தின் மூலம் இடம்பெறக் கூடிய ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்ட முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

அரச அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வெளிநாட்டு நிதி உதவியின்கீழும் உள்ளூர் முதலீடுகளின் மூலமும் முன்னெடுக்கப்பட்ட சுமார் 800அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இஃது எவ்வாறு அவ்வாறு நடக்க முடியும்? அஃது முற்றிலும் அரச  அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் ஏற்படும் குறைபாடுகள் என்று சொல்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்நாட்டின் சனத்தொகையில் நூற்றுக்கு 75 சதவீதமானவர்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள். ஆகவே, கிராமிய மக்கள் மீது கரிசனை செலுத்த வேண்டியது நியாயமானதாகும். சில கிராமங்களில் வாழ்பவர்கள் ஆகக்குறைந்த அடிப்படை வசதிகளின்றி வாழ்கிறார்கள். எனவே, கிராமிய மக்களின் வாழ்தாரத்தையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நேரில் சென்று அறிந்து தீர்த்துவைக்க வேண்டியது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்!

Comments