கிழக்கு முனையம் மீது இந்தியாவின் கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு முனையம் மீது இந்தியாவின் கரிசனை

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்வழியான சரக்குப் போக்குவரத்தில் இலங்கையின் அமைவிடமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. குறிப்பாக சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் கொழும்புத் துறைமுகம் இதற்குப் பொருமளவில் பங்காற்றி வருகிறது.

இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கு நீண்ட காலமாகவே சில வெளிநாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கொழும்புத் துறைமுகத்தில் ஏற்கனவே சீனாவின் கூட்டாண்மை இருக்கும் நிலையில் இந்தியாவும் தனக்கான கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை சமீப காலமாக அதிகளவில் காணக் கூடியதாகவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயம் இதற்கான பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இதுவரை எந்தவிதமான உறுதியான நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூகோள அமைவிடம், நவீன இயந்திரங்களுடான காலத்துக்குரிய சேவை, போட்டித் தன்மையான கட்டணங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தெற்காசியப் பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்தின் கேந்திர நிலையமாக கொழும்புத் துறைமுகம் விளங்குகிறது. இதனாலேயே பல நாடுகள் கொழும்புத் துறைமுகத்தில் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் அதிகரித்து வருகின்ற கொள்கலன் கையாளல் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் புதிய தெற்குத் துறைமுகம் 2012ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இது 18 மீற்றர் ஆழத்துடன், 285 ஹெக்டெயர் விஸ்தீரணம் கொண்டதாகும். இதில் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு முனையங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் ‘ஜெயா கொள்கலன் முனையம்’ துறைமுக அதிகார சபையிடமும், ‘சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்’ அரச தனியார் பங்குடைமையாகவும் காணப்பட்டன. இவ்வாறான நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியில் கொழும்பு தெற்கு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. அது அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் தென் முனையம் அரச தனியார் பங்குடைமையின் கீழ் ‘சைனா மேர்சன்ட் ஹோல்டிங்ஸ் இன்டர்நஷனல்’ நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் தெற்கு முனையம் ‘கொழும்பு இன்டர்நஷனல் கென்டெய்னர் டேர்மினல்’ எனப் பெயரிடப்பட்டு 2014ஆம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. ஜெயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு முனையம் என்பன துறைமுக அதிகார சபையினால் கையாளப்படுகின்றன.

இந்த நிலையிலேயே கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் இந்தியாவின் உதவியும் நாடப்பட்டது. அன்றைய காலப் பகுதியில் உதவி என்பதற்கு அப்பால் இந்தியாவின் அழுத்தம் நல்லாட்சி அரசுக்குக் கொடுக்கப்பட்டது என்றே கூற வேண்டும்.
 
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்தார் என்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தன. எனினும், தான் அவ்வாறு எதனையும் உறுதியளிக்கவில்லையென்றும், பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவே இதனை வழங்கினார் என்றும் இலங்கை அரசியல் களத்தில் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
 
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் 'பிக் பிரதர்' போன்று அன்றைய காலத்தில் இருந்தே செயற்படும் இந்தியா அவ்வப்போது தனது அழுத்தத்தை இலங்கைக்குக் கொடுக்கத் தவறியதில்லை.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் முழுமையாக சீனாவின் வசம் சென்றிருப்பதால் இலங்கையின் துறைமுக விடயத்தில் தனது செல்வாக்கொன்றும் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருந்தது. இதன் வெளிப்பாடாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெறும் முயற்சி அமைந்திருந்தது.

இலங்கையில் அதிகரித்துள்ள சீனாவின் முதலீடுகள் காரணமாக அதிருப்தி கொண்டுள்ள இந்தியா, சீனாவையும் பகைக்காமல் இலங்கையுடனான நீண்ட கால உறவுகளையும் பகைத்துக் கொள்ளாமல் மந்த கதியிலான போக்கில் காய்நகர்த்தல்களை நீண்ட காலமாகவே மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் சீனாவுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்பட்டாலும், கணிசமான முதலீடுகள் காணப்படுகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய ஒயில் நிறுவனத்துக்கு திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகள் பல வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இது மாத்திரமன்றி, திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு அப்பகுதியில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா முயற்சிகளை எடுத்திருந்தது.

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கும், திருகோணமலையில் விசேட பொருளாதார வலயமொன்றை அமைப்பதற்கும் கடந்த காலங்களில் இந்தியா முயற்சித்திருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் இவை தடைப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விவகாரமானது தற்போது தென்னிலங்கை அரசியலில் கூடுதலான  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு முனையத்தின் முதற்கட்ட அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் புதிய கொள்கலன் பாரந்தூக்கிகள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கிடையில் துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள ஜெயா கொள்கலன் முனையத்தை புனரமைக்கவிருப்பதால் அங்குள்ள கொள்கலன்களையும் கிழக்கு முனையத்துக்குப் பொருத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டது. பின்னர் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், கிழக்கு முனையத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாது என்றும் அதனை தொடர்ந்தும் துறைமுக அதிகார சபையின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து துறைமுக ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்தன.

இது தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கிழக்கு முனையம் யாருக்கும் வழங்கப்படாது எனக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

அண்மையில் அதுவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் வழங்கப்படாது எனக் கூறியிருந்தார். இதனை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவருடைய விஜயத்தின் முக்கிய நோக்கம் துறைமுக விவகாரம் என்றே அவ்வேளையில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடன் தொடர்புபட்டிருப்பதால் பங்காளராக இருப்பதில் இந்தியாவுக்கு நன்மைகள் உள்ளன. எனவே இதன் அபிவிருத்தி குறித்து இலங்கையுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன், இதன் உரிமையானது இலங்கையிடமே இருக்கும் என ஜெய்சங்கர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.

மறுபக்கத்தில், துறைமுகப் பணியாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன்னர்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்திருந்த வேளையில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது எனக் கூறியுள்ளார்.

நாட்டின் இறையாண்மை அல்லது சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் எந்தவொரு முதலீட்டையும் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிராந்திய புவிசார் அரசியல் காரணிகள், நாட்டின் இறையாண்மை, தேசிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டே கிழக்கு முனைய வளர்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி விளக்கிக் கூறியுள்ளார்.

கிழக்கு முனைய மறு ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66 வீதம் பங்களிப்புச் செய்கிறது.
இதனை விட ஒன்பது வீதம் பங்களாதேஷூம் மற்றும் மீதமுள்ளவையில் பல நாடுகளும் மறு ஏற்றுமதி நடவடிக்கையை செய்கின்றன.
51 வீத உரிமையுடன் இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49 வீதம் இந்தியா மற்றும் பிற பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது. இதுகுறித்து எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. இந்த முனையத்தின் செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது எந்தவொரு தரப்பினரையும் பகைத்துக் கொள்ளாமல் விடயங்களை நகர்த்திச் செலவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது.

எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெற்று அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட விடயங்களால் உள்ளூர் மக்கள் நன்மை அடைய வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும்.
ஏனெனில், இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு பாரிய கட்டுமானப் பணிகள் சில வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் பணியாற்றுவதற்கு அந்தக் கம்பனிகளின் நாட்டைச் சேர்ந்தவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.  

தொழில்நுட்ப ரீதியான விடயங்களுக்கு அவர்கள் அவ்வாறு அழைத்து வரப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களை நம்பியிருந்தால் உள்ளூர் வேலைவாய்ப்பு தொடர்பாக கேள்விகள் எழக் கூடும். இதுபோன்ற விடயங்களையும் கவனத்தில் கொண்டு ஏனைய நாடுகளின் முதலீடுகளுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் இரு தரப்புக்கும் பயன் ஏற்படும் விதத்தில் செயற்படுவது சிறந்ததாக அமையும்.

Comments