அரசியல் சதுரங்க மேடையாக மாறிவரும் யாழ். பல்கலைக்கழகம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் சதுரங்க மேடையாக மாறிவரும் யாழ். பல்கலைக்கழகம்!

ஒரு சமூகத்தின் மாணவர்களை புத்திஜீவிகளாக வழிநடத்துவதில் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதுடன், ஒரு அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மிகக் கணிசமான பங்குகளை ஆற்றியிருக்கின்றன. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைத்து உலக நாடுகளும் பல பல்கலைக்கழகங்களை நிறுவி அறிவு சார்ந்த மாணவர்களுடாக ஒரு செயல்திறன் மிக்க சமூதாயத்தை உருவாக்கி வருகின்றன.

இலங்கையில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்க முடியும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது எமது தமிழ் மிதவாத அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளுக்கும், இழுபறிகளுக்கும் மத்தியில் நிறுவப்பட்ட வரலாற்றுப் பின்னணியை கொண்டு அமைந்ததன் காரணமோ என்னவோ அதன் வரலாறும் கல்விக்கும், தெளிவற்ற அரசியலுக்கும் இடையில் சிக்கி தவித்து வருகின்றது.

இலங்கையில் இன ரீதியான யுத்தம் ஆரம்பமாகிய காலம் தொட்டு யாழ் பல்கலைக்கழகம் ஆயுதம் தாங்கியவர்களால் குறிவைக்கப்பட்டது. இதன் காரணமாக பல உயிர்ப்பலிகளையும் இழப்புக்களையும் சந்தித்த வரலாற்றைக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

உலகநாடுகளுக்கிடையில் நடைபெற்றுவரும் யுத்தமென்றாலும் உள்நாட்டில் நடைபெறுகின்ற யுத்தமாக இருந்தாலும் பல்கலைக்கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற புரிந்துணர்வுடன் எழுதப்படாத ஒரு சட்டமாக உலக நாடுகளில் இருக்கின்றது. யுத்தத்தில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் உயர் கல்வி நிறுவனமாகிய பல்கலைக்கழகங்களின் மீது பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் செயற்பட்டனர். இதனை நாம் உலக வரலாற்றில் காண முடியும். ஆனால் 1987 இல் வடக்கு கிழக்கிற்கு அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் யாழ் பல்கலைக்கழகத்தினை ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 50 வருடங்கள் கொண்ட கல்வி பாரம்பரிய வளர்ச்சியில் தமிழ் பிரதேசங்களில் வேறு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டாலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாத்திரமே தமிழ் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கான வளர்ச்சிக்கான  அடையாளமாக உள்ளுரில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலும் பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையில் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழரசுக்கட்சியால் தமிழ் மக்களிடம் பெரும் நிதி திரட்டப்பட்டதுடன் திருகோணமலையில் பல ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டது ஆனால் இன்றுவரையில் அதற்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இலங்கை சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகமானது இன்று சகல பீடங்களையும் தன்னகத்தே கொண்டு அதன் செயற்பாடுகளின் ஊடாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

கல்வியில் தன்னை துறைசார் ரீதியாக வளர்த்துக்கொண்ட யாழ் பல்கலைக்கழகமானது தமிழ் சமூகத்திற்கும், இலங்கை சமூகத்திற்கும் நம்பிக்கை தரும் ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக பரிமாணம் அடைந்திருக்கவில்லை என்பதே கவலைதரும் விடயமாகும்.

போர்ச்சூழலுக்குள் சிக்கி சீரழிந்த யாழ் பல்கலைக்கழகம் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் முற்றுகையிடப்பட்டு இருந்த தருணத்தில், இப்போது முள்ளி வாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டமைக்காக போராடும் எந்த தமிழ் அரசியல் கட்சியும் இந்திய இராணுவத்தை அகற்ற முயற்சி எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. முறிந்த பனை நூலின் ஆசிரியர்களின் இருவரான பேராசிரியர், ரஜனி திரணகம மற்றும் கெ.சிறிதரன் ஆகியோர் இந்திய இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவத்தை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியிருந்தனர்.

பிரயோகக் கல்வியை மாத்திரம் கற்பிக்கும் விரிவரையாளர்களிடம் கற்று, அவற்றை அப்படியே வாந்தியேடுக்கும் மாணவர்கள் அரசியல் ரீதியான அறிவோ, வரலாற்று ரீதியிலான தேடல் கொண்ட கல்வியோ இல்லாத நிலையில் அரசியல் போராட்டங்களில் மாணவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு தமிழ் மிதவாத அரசியல்வாதிகளினால் பலியாடாக மாற்றப்படுகின்றார்கள்.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது அந்தந்த காலப்பகுதியில் ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் இருந்த சக்திகளுக்கு எதிரானதாக யாழ் பல்கலைகழக மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எழுத்துக்கள் மக்கள் ஆதரவான வடிவம் எடுக்கும் போதெல்லாம் ஆயுதம் கொண்டு நசுக்கப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்டதற்கு எதிராக போராடும் தமிழ் தேசிய கட்சிகளிற்கு எந்தவிதமான முற்போக்கு சிந்தனையும், பன்முகப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
காலத்துக்கு காலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுயமாக முன்னெடுக்கும் போராட்டங்களில் அழையா விருந்தினர்களாக உள்நுழையும் அரசியல்வாதிகள் அல்லது ஒற்றை கருத்துடைய சக்திகள் அவர்களின் போராட்டங்களையும், கல்வியையும் சீரழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளமை கடந்தகால வரலாறாக உள்ளது.

தமிழ் மக்களை வழிநடத்த முடியாமல் தமிழ் மக்களின் பின்னால் செல்லும் தமிழ் தலைமைகள் உணர்வு ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத் தீயில் குளிர்காய்ந்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வரலற்றில் தமிழ் தேசியம் என்ற ஒரே கருத்தை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் உள்வாங்கிய நிலையில் அதன் பின்னரான கால கட்டத்தில், பல மாற்று கருத்துக்கள் பரிமாறுவதற்கான தளம் இது அல்ல என ஒரே கருத்து மாத்திரமே என மாற்றப்பட்டதன் பின்னர் பல மாணவர்களின் உயிர்கள், விரிவுரையாளர்களின் உயிர்கள் ஆயுதமுனையில் பறிக்கப்பட்டது வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முற்போக்கு சிந்தனை மற்றும் பரந்துபட்ட கருத்துக்களையுடையவர்கள் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஓட, ஓட விரட்டப்பட்டனர், சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தனர். இதில் விரிவுரையாளர்கள், மாணவர்கள் அடங்குவர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த பலரும் பல விடுதலை போராட்ட இயக்கங்களில் இணைந்து போராடி உயிரை இழந்துள்ளனர். அவர்கள் யாவரும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வகையில் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

எமது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான குரல்கள் இந்த பல்கலைக் கழகத்திலிருந்து பலமாக எழுப்பப்படவில்லை. தமிழ் தேசியம் எனும் ஒற்றைச் சொல்லாடல் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் குரல்களை நசுக்கியுள்ளது.

வடக்கில் தமிழ் மிதவாத அரசியல் கட்சிகளுக்கு எப்போதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அல்லது அரசியல் போராட்டத்தின் தேவை வருகின்றதோ? அப்போதெல்லாம் யாழ் பல்கலைக்கழகத்தின் அப்பாவி மாணவர்கள் தேவைப்படுவார்கள். தமிழ் தேசியம் என உசுப்பேற்றப்படும் மாணவர்கள் எந்தவிதமான அரசியல் அறிவுமில்லாமல் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கிறோம். விக்கினேஸ்வரனுக்கு கறுப்பு உடையணிந்து பாதுகாப்பு கொடுக்கின்றவரை எந்தவிதமான அடிப்படை அரசியல் தாத்பரியமும் விளங்காமல் கிளம்பி விடுவார்கள்.

1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதந்திர மாணவர் அமைப்பின், மாணவத் தலைவர் தலைமையில் ஒரு குழுவினர் மிகப் பதட்டமான சூழ்நிலையிலும் தைரியமாக யாழ்ப்பாணம் வந்து உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தில் பதாதைகள், போராட்டங்கள் மூலம் இலங்கை இராணுவத்தின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்திருந்தனர். இந்த செயற்பாட்டை விரும்பாத பேரினவாத சக்திகள் பல்கலைக்கழக மாணவத் தலைவன் தயா பத்திரனவினை கொலை செய்தனர். இவரும் எமது இனத்திற்காக உயிர் விட்ட சகோதரப் போராளி.
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை போராட்டத்திற்காக உயிர்துறந்த மாணவர்கள் பேராசிரியர்களுக்கான நினைத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தமிழ் ஆராட்சி மாநாட்டில் உயிர் துறந்த பொது மக்களுக்காக யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்ட நினைத்தூபி போல், யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கில் உயிர் துறந்த அனைவரையும் நினைவு கூறும் முகமாக ஒரு முற்றவெளியில் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்.

ஏகபோகத்தை மறுதலித்து முற்போக்கு கருத்துக்களை உள்வாங்கி சகலரும் ஐக்கியப்பட்டு பயணிப்போம். எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலை கற்றறிந்தவர்களாக, தமிழ் மக்களின் போராட்ட வரலாறுகளை தெரிந்தவர்களாக இருப்பதுடன் தேடல் மிக்க மாணவ சமூதாயத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும். அத்துடன் சகல மட்டங்களிலும் வெளியிடப்படும் கருத்துக்களையும் உள்வாங்கி உண்மையான அரசியல் போராட்டங்களை செயற்படுத்த முன்வர வேண்டும் அவ்வாறு இல்லாதவிடத்து எமது முப்பது வருட போராட்டம் தமிழ் மக்களுக்கு அகதி வாழ்க்கையையும், அவலத்தையும், கண்ணீரையும் விட்டுச் சென்றுள்ளது! ஒற்றைக் கருத்துடைய சுயநல அரசியலும் எதிர்காலத்தில் அதே போன்று வெறும் அரசியல் சூனியத்தையே எமக்கு விட்டுச் செல்லும்.

மாணவர்கள் கல்வி கற்க உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அரசியல் சதுரங்க மேடையாக மாற்ற மாணவர்கள் அரசியல்வாதிகளை அனுமதிக்கக்  கூடாது.

எம்.ஜி.ரெட்ணகாந்தன்

Comments