யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து தரைமட்டம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து தரைமட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.  

யாழ்.பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்தக் பணியை வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுத்துள்ளது.  

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுத்தூபி ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.  

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.  

இருந்த போதிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் நிறைவுசெய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.  இந்நிலையில் நினைவுத் தூபி நேற்று முன்தினம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.  

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பல்கலை மாணவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைகழகத்தை சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான விசேட அதிரடி படையினர், பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் பல்கலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

சுமித்தி தங்கராசா   

Comments