தீவிரச் செயற்களமொன்றுக்கான வாசலை இலங்கையில் திறக்க முனைகிறதா இந்தியா? | தினகரன் வாரமஞ்சரி

தீவிரச் செயற்களமொன்றுக்கான வாசலை இலங்கையில் திறக்க முனைகிறதா இந்தியா?

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கரின் அண்மைய இலங்கை விஜயம் பல (தரப்பினருக்கு) மான சேதிகளுக்கானதாக மாறியுள்ளதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்கட்சித்தலைவர், மலையகப் பிரதிநிதியான ஜீவன் தொண்டமான், தமிழ்த்தரப்பில் டக்ளஸ் தேவானந்தா, சம்பந்தன் எனப் பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார் ஜெயசங்கர். இதனூடாக இந்தியா ஒரு தீவிரச் செயற்களமொன்றுக்கான வாசலை இலங்கையில் திறக்க முனைகிறதா? அல்லது வழமையைப் போல தன்னுடைய உறவு நிலையைப் பேண முற்படுகிறதா?

எனினும் இதில் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒன்று புதிய அரசியலமைப்பை இலங்கை உருவாக்குவதைப்பற்றிப் பேசும் சூழ லில் இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாகிய மாகாணசபை முறைமையைக் குறித்தும் அதற்கான 13 ஆவது திருத்தத்தைக் குறித்தும் இலங்கை அரசுக்குக் கவனத்தை ஏற்படுத்துவது. அடுத்தது, சீன விரிவாக்கத்தை மட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவின் நெருக்கத்தையும் பங்களிப்புகளையும் பற்றிய தீர்மானங்களை எட்டுவது. இதை விட இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரம், இந்தியாவின் இலங்கைக்கான உதவிகள் போன்றவையும் இருக்கின்றன.

அப்படியென்றால், ஜெயசங்கரின் இந்தப் பயணம் ஒரு வகையில் இலங்கைக்குப் பல வகையிலும் அழுத்தம் கொடுக்கும் ஒன்றாக அமைந்துள்ளதா? அதுவும் அடுத்து வரும் மாதங்களில் ஜெனீவாவில் மனித உரிமைகள் விவகாரமாக இலங்கை நெருக்கடியைச் சந்திக்கவுள்ள சூழலில் இந்தப்  பயணம் நடந்திருப்பதால், அதையும் உள்ளடக்கியிருக்கிறதா? அதோடு இந்திய உதவிகளின் மூலமாக இலங்கையின் கிழக்குப் பிராந்தியமான திருகோணமலைத் துறைமுகத்தையும் அதனோடிணைந்த எண்ணெய்க்குதங்கள் உள்ளடங்கலானவற்றின் பிடிமானத்தை இந்தியா மேலும் இறுக்கிக் கொள்ள முயற்சிக்கிறதா? மேலும் அரசாங்கத்துக்கு அப்பாலான தரப்பினரைச் சந்தித்திருப்பதன் மூலமாக அரசாங்கத்துக்கு வெளியேயும் நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் முகமாக இருக்கிறதா? அத்துடன் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பலாலி சர்வதேச விமான  நிலையத்தின் செயற்பாடுகள் – இயங்கு நிலை குறித்தும் சிந்திக்கப்பட்டதா?
இதெல்லாவற்றுக்கும் வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இவற்றைப் பற்றி ஜெயசங்கர் பேசியுமிருக்கிறார். குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கான நியாயமான தீர்வைப் பற்றி இந்தியாவின் கரிசனைகள் தொடரும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த நியாயமான தீர்வு எது என்பது தெளிவற்றது. இந்தத் தெளிவற்ற குழப்ப நிலையின் காரணமாகத்தான் கடந்த காலத்தில் மாகாணசபையையும் இலங்கை இந்திய உடன்படிக்கையையும் ஏற்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பின்னாளில் அதை எதிர்த்து ஈழப்பிரகடனம் செய்ய வேண்டிவந்தது. புலிகள் இது போதாது, திருப்தியில்லை என்று மறுத்தனர். இலங்கை அரசோ இவ்வளவையும் கொடுக்க முடியாது என்று மறுக்கிறது.

இலங்கை அரசு மட்டுமல்ல, சிங்களத் தரப்பிலுள்ள ஜே.வி.பி மற்றும் ஐ.தே.க, சு.க போன்றவையும் இதை எதிர்த்தவை. இப்பொழுதும் எதிர்க்கின்றவை தான்.

ஆகவே திருப்திப்படக் கூடிய தீர்வு – பொருத்தமான தீர்வு என்று எதைக் குறிப்பிடுகிறார் ஜெயசங்கர்? மாகாணசபையை வலுப்படுத்துவதா? அப்படியென்றால், புதிய அரசியலமைப்பில் 13 ஐக் காப்பாற்ற வேண்டும். புதிய அரசியலமைப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இதெல்லாம் எந்தளவுக்குச் சாத்தியம்?

அப்படித்தான் அதிசயங்கள், ஆச்சரியங்கள் நிகழ்ந்தாலும் மேலும் இதற்கு இலங்கை எந்தளவுக்கு நெகிழ்ந்து கொடுக்கும் என்பதையும் ஜெயசங்கர் சொல்லவில்லை. ஆனால், ஜெயசங்கருக்கு இலங்கையைப் பற்றி நான்றாகவே தெரியும். இந்தியாவின் கை எந்தளவுக்கு நீளும் என்றும் தெரியும்.
அப்படியெனில் ஜெயசங்கரின் பயணமும் அவர் சொன்ன வார்த்தைகளும் கொண்டுள்ள பெறுமதி என்ன?

முக்கியமாக சீனாவின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்துவது இதில் கூடுதலாக வெற்றியளித்திருக்கக் கூடும். இந்தியாவுக்கு இப்பொழுது அவசியமாக வேண்டப்படுவதும் அதுதான். ஆனால், போட்டியாளரான சீனா இதற்கு எதிராட்டத்தை – அதற்கான வியூகத்தை வகுத்துக் கொண்டேயிருக்கும். இந்தியாவும் களைப்படையாமல் ஆடித்தான் ஆக வேண்டும். இதற்கு தனக்குத் தேவையான துரும்புகளை – காய்களை இந்தியா தேடிக் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த விஜயமும் இந்தச் சந்திப்பும் நடந்துள்ளதாகக் கருத முடியும்.

ஆனால், இதை அரசும் அரசுக்கு வெளியே இருக்கும் தரப்புகளும் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்ய முற்படுகின்றன. இதில் இரண்டு தரப்பின் வியாக்கியானப்படுத்தல்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று சஜித் பிரேமதாசவின் கூற்று. மாகாணசபை முறைமையை அரசு காப்பாற்ற வேண்டும் என்கிறார் சஜித். இதை அவரும் அவருடைய கட்சியும் அந்தக் கட்சி ஆட்சியிலிருந்தபோதிருந்த அரசாங்கமும் செய்திருக்கலாமே! மட்டுமல்ல, சஜித்தின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச இந்த மாகாண சபை முறையையும் இந்திய இலங்கை உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்தவர். தந்தை எதிர்த்தார் என்பதற்காக மகனும் அதே வழியில் நிற்பார். அல்லது இருவரையும் ஒன்றாக்கிப் பார்க்க முடியாது என்பது உண்மையே. ஆனாலும் நிலைமைக்கு ஏற்ற மாதிரிக் கதைக்காமல் தன்னுடைய – தனது கட்சியினுடைய நிலைப்பாடு இது என்று அவர் தெளிவுறக் கூற வேண்டும்.

இதெல்லாவற்றையும் விட சஜித் இப்பொழுது மாகாணசபை முறைமையில் திடீர்க்கரிசனை கொள்வதற்குக் காரணம், இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதோடு தான் இந்தியாவுடன் நெருங்கியிரு ப்பதாக உணர்த்துவதற்காக என்று கொள்ளப்படவும் முடியும்.

இதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மகிழ்ச்சியையும் நாம் நோக்க வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று சம்பந்தன் மகிழ்கிறார். இந்த மகிழ்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? ஏனென்றால், முன்பு இந்தியாவை நம்ப முடியாது என்றது தமிழ்த்தரப்பு. அதனால்தான் முன்னாள் இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்தியே பலியாக வேண்டியிருந்தது. இதே உணர்நிலை இன்னும் தமிழர்கள் பலரிடமும் உண்டு.
ஈழப்போராட்டத்தின் தோல்வியை இந்தியா மறைமுகமாக ஆதரித்தது என்ற கருத்தும் இவர்களிடமுண்டு. ஆனால், இப்பொழுது மறுபடியும் (இதையெல்லாம் கடந்தோ மறந்தோ தெரியாது) இந்தியா தீர்வுக்கு உதவும். அந்த நம்பிக்கை உண்டு. அதற்கான உத்தரவாதம் உண்டு. இந்தியாதான் உதவ வேண்டும் என்றால் அதன் அர்த்தம் என்ன?

இப்படி ஜெயசங்கரின் பய ணம் பல கோணங்களில் அவரவர் தரப்புகளால் வியாக்கியானப்படுத்தப்படுகிறது. அரசியல் நோக்கர்களும் தமக்குத் தெரிந்த கண்ணோட்டங்களின்  வழியே இதைக்குறித்துத் தமது கருதுகோள்களை முன்வைக்கிறார்கள்.
இதிலும் தமிழ்த் தரப்பு ஒரு விதமாகவும் சிங்களத் தரப்பு இன்னொரு விதமாகவும் இதை வியாக்கியானப்படுத்துவதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா கூடுதலான கரிசனையோடு இருக்கிறது என்கிறது தமிழ்த்தரப்பு. சிங்களத் தரப்போ, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இந்திய இலங்கைக் கடல் வலயம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக குறிப்பிடுகிறது.

உண்மையில் இலங்கை பல வல்லாதிக்கத் தரப்புகளின் ஆட்டக் களமாக ஆகிக் கொண்டிருக்கிறது. அதாவது பூகோள அரசியல் போட்டிகளின் ஆடுகளமாக. இதற்கு இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதற்கு கூடுதலான வாய்ப்பைக் கொடுப்பது இலங்கைச் சமூகங்களுக்கிடையில்  நிலவும் பகையும் முரண்களும் அவற்றின் விளைவாக உருவாகியிருக்கும் பிளவுகளும் அதனால் உண்டான பின்னடைவுகளுமாகும்.

இதை ஜெயசங்கரும் பயன்படுத்த விளைவார். சாம் சிங் சூனும் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பார். இந்தியாவும் சீனாவும் நமக்குள் இத்தனை விரைவாக வந்திறங்கிக் களமாடுவர் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால், கடந்த முப்பது ஆண்டுப் போருக்குள்தான் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகியிருந்தன. இந்தக் காலத்தில் நாட்டின் வளம் அனைத்தையும் போருக்குப் பயன்படுத்தினோம். போதாக்குறைக்குக் கடனும் பட்டோம். இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக இப்பொழுது நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மாற்று வழி என்ன என்று நீங்கள் கேட்கக் கூடும். அந்த மாற்று வழியும் நம்முடைய கைகளில்தான் உள்ளது.
வேறு வழியே இல்லை. பகையை மறப்பதும் நல்லிணக்கத்தில் கை கோர்ப்பதுமே உள்ள ஒரே வழியாகும். அந்த வழியே நம்மைப் பாதுகாக்கும் ஒரேயொரு வழி.

அதற்குப் பிறகு ஜெயசங்கர் வந்தாலென்ன ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் வந்தாலென்ன?

கருணாகரன்

Comments