இலங்கையின் நலனில் இந்தியாவின் கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் நலனில் இந்தியாவின் கரிசனை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் மூன்று நாள் உத்தியோகபூர்வ இலங்கை விஜயம் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், மீண்டும் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டதே இந்த முக்கியத்துவத்திற்குக் காரணமாகும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். எனவே, அவர் இந்தச் சந்திப்புகளின் மூலம் இலங்கைக்கு என்ன செய்தியைச் சொல்கிறார் என்பதே இப்போது அரசியல் ஆய்வாளர்களின் தேடலாக இருக்கிறது.

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்களும் கடந்த ஜனவரி ஆறாந்திகதி கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போது, இந்தியாவின் செய்தியை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவாகக் கூறியிருந்தார். அதில், இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், அரசாங்கத்திற்குள்ளேயே விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியமும் உணர்த்தப்பட்டதாகவும் ஒரு சிங்கள நாளிதழின் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆகவே, இதுவிடயத்தில் ஓர் ஆழமான அரசியல் கருத்துப் பரிமாற்றம் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எவ்வாறாயினும், இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் ஆணித்தரமாக உரைத்திருக்கிறார். அதேநேரம், ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது இலங்கையின் நலனுக்குச் சிறந்தது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்கு இலங்கை அரசின் அரப்பணிப்பும் அதில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தக்கூடிய சகல தரப்புகளையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை எட்டவும் இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாட்டுக்காகவும் இந்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இந்திய வெளிவிகார அமைச்சர் கூறியிருக்கின்றார்.

இலங்கையின் ஐக்கியம், ஸ்திரத்தன்மை, ஆள்புல ஒருமைப்பாட்டுக்காக இந்தியா அர்ப்பணிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் இலங்கையின் நலனிலும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதிலும் இந்திய அரசு கரிசனையுடனேயே இருக்கின்றது. அரசாங்கம் மாறிவிட்டது என்பதற்காக இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லை என்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதானது இலங்கையின் நலன் மேம்படுவதற்குக் காரணமாக அமையும் என்ற இந்திய வெளிவிவகார அமைச்சரின் கூற்று இங்கு நன்கு கவனிக்கத்தக்க தொன்றாகும். இதில் அப்படி கவனம் செலுத்துவதற்கு என்ன இருக்கிறது என்று சிந்திப்பவர்களும் இல்லை என்று சொல்ல முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை தற்போது சர்வதேச அரசியல் அரங்கில் ஒரு தனித்துவமான போக்கினைக் கடைப்பிடித்து வருகிறது. எனவே, பலம்பொருந்திய ஓர் அண்டைய நாட்டுடனான அந்நியோன்னியம் மிக முக்கியமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கருத்தானது பதற்றமடைந்து இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமாகாது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியா இராஜதந்திர மட்டத்தில் தெரிவிக்கும் கருத்துகளைச் சரியாகப் புரிந்துகொள்வதே இன்றியமையாதது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, இலங்கையின் ஐக்கியத்திற்கும் அதன் நலன்கள் மேம்படுவதற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் இந்தியா கரிசனையுடன் இருக்கின்றது என்பதையே இங்குப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அதேநேரம், சிறுபான்மை இனங்களுக்குச் சம உரிமை வழங்குவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கமே என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படையாகச் சொல்லியிருப்பதும் இங்குக் கூர்ந்து கவனிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை வைத்துக்கொண்டு சுயலாப அரசியல் நோக்கம் கருதிய எதிரணியினரின் கூற்றுகளைக் கருத்திற்கொள்ளாமல் தெளிவானதொரு முடிவையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும்!

Comments