தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையே எக்காலமுமே தீராத முரண்பாடுகள்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையே எக்காலமுமே தீராத முரண்பாடுகள்!

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு மறைமுக நோக்கமாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுகின்ற விடயத்திலுள்ள போட்டாபோட்டியின் போது யாழ் மாநகரசபை மற்றும் மலையகத்தின் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆட்சி மாற்றங்களில் யாழ் மாநகரசபையின் மேயர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் நாட்டில் சமீப நாட்களாக மிகவும் பரபரப்பாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மேயராக இருந்த ஆர்னோல்ட் மாநகர சபையில் கொண்டு வந்த வரவுசெலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மேயர் பதவிக்கு நடந்த போட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை கைநழுவ விட்டிருந்தது.

தமிழர் பிரதேசங்களைப் பொறுத்த வரை முக்கியமானதாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தின் மாநகர சபையின் ஆட்சியதிகாரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றம் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பி நிற்கின்றது என்றே கூற வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபையில் ஆட்சியமைத்தது. யாழ் மாநகர மேயராக அப்போது மாகாணசபை உறுப்பினராகவிருந்த ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேயர் பதவிக்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்காக ஆர்னோல்டினால் கொண்டு வரப்பட்ட யாழ் மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டது.
நாட்டின் உள்ளூராட்சி மன்ற சட்டத்துக்கு அமைய வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் மேயர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவர் பதவி விலகியதாகக் கருதப்பட்டு, அப்பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆர்னோல்ட் மீண்டும் அப்பதவிக்கு நிறுத்தப்பட, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மறுபுறத்தில் களமிறங்கினார்.

இந்தப் பலப்பரீட்சையில் மணிவண்ணன் வெற்றி பெற்று மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன சார்பில் தலா ஒரு உறுப்பினர் என 20 மாநகரசபை உறுப்பினர்கள் ஆர்னோல்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
மறுபுறத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் 10 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 பேர் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் யாழ் மாநகர புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பதவி மாற்றமானது ஒரு சாதாரண அரசியல் சதுரங்கம் போன்று காணப்பட்டாலும், இதன் பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையில் கொண்டிருக்கும் உள்முரண்பாடுகள் வெளிப்படையாகவே நன்கு தெரிகின்றன. தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையீனமே இதற்கான உண்மையான காரணமாகும்.

குறிப்பாக  யாழ் மேயராகவிருந்த(தமிழரசுக் கட்சி) ஆர்னோல்ட் இரண்டு தடவைகள் கொண்டு வந்த வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அப்பதவிக்கு ஏன் அவரை நிறுத்தினார்கள் என்ற கேள்வி இங்கு பலமாக எழுகிறது. இந்த முடிவை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் மனம் விரும்பி எடுத்ததா அல்லது ஆர்னோல்ட் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அக்கட்சியின் சிலர் செயற்பட்டனரா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.

வரவுசெலவுத் தோற்கடிப்பு மற்றும் மணிவண்ணன் வெற்றி பெற்றமை போன்றவற்றை வைத்துப் பார்க்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ஆர்னோல்ட் மீண்டும் மேயராக வருவதை விட, மணிவண்ணன் வருவதை மறைமுகமாக விரும்பியுள்ளார்கள் போன்று தெரிகிறது. இதற்கு என்ன காரணம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
மறுபுறத்தில், நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து மணிவண்ணன் ஓரங்கட்டப்பட்டார். இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு நிறைந்தவராகக் காணப்பட்ட மணிவண்ணன், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரால் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

கட்சியின் தலைமைக்கு அவர் கட்டுப்படவில்லை, தேர்தலின் போது தனித்து செயற்பட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மணிவண்ணன் மீது கஜேந்திரர்கள் முன்வைத்துள்ளார்கள். கட்சியிலிருந்து மணிவண்ணனை விலக்குவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
எனினும், கட்சியிலிருந்து தான் விலகப் போவதில்லையென மணிவண்ணன் கூறியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே யாழ் மாநகரசபையின் மேயர் பதவிக்கு நடந்த போட்டியில் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் மணிவண்ணன் வெற்றி பெற்றிருந்தார்.
கஜேந்திரர்களால் மணிவண்ணனுக்குத் தடை போடப்பட்டிருந்த போதும், நடைபெற்ற மேயர் தெரிவின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஒருசிலர் விருப்பம் இல்லாத போதும், அவருக்கான வாக்கை அளித்திருந்தனர்.

ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்று மணிவண்ணன் வெற்றியடைந்ததால் அவருக்கு எதிராக சேறுபூசும் வகையிலான வெறுப்புக் கருத்துகளை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஒரு தரப்பினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து மணிவண்ணன் விலகி விட்டதாகவும், துரோகிகளுடன் கைகோர்த்து விட்டதாகவும் தனிப்பட்ட ரீதியிலான சேறுபூசல்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், மக்களின் நலன் சார்ந்தே மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி முடிவெடுத்ததாக ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மக்கள் நலன் சார்ந்தே தாம் தொடர்ந்தும் சிந்தித்து செயற்பட்டு வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக மாநகரசபையின் ஊடாக மக்களுக்கு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இம்முடிவை தமது கட்சி எடுத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

எதுவாக இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு எதிரான மற்றைய கட்சிகள் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பது என்பது அரசியலில் ஒரு சாதாரண விடயமாகும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது தமக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் மணிவண்ணனை ஆதரிப்போம் என்ற முடிவுக்கு ஈ,பி.டி.பி வந்திருக்க முடியும்.  மறுபுறத்தில் தமக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லையென்று தெரிந்தும் ஏன் ஆர்னோல்டை தமிழரசுக் கட்சி களமிறக்கியது என்பதும் நோக்கப்பட வேண்டும்.
இதில் பார்க்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் யாழ் மாநகரசபையின் ஆயுளுக்கு இன்னமும் ஒரு வருட காலமே மீதமுள்ளது. இதுவரை காலமும் மேயராகவிருந்த ஆர்னோல்ட் முன்னெடுத்த நடவடிக்கைகள் சரியாக இருந்தால், இம்முறை வரவுசெலவுத் திட்டம் ஏன் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறதல்லவா?
 
யாழ் மாநகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக் கழிவகற்றல், நகர் திட்டமிடல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்படாமை மற்றும் மேயர் பதவியில் இருப்பவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்களுக்கான வசதிகளை மாத்திரம் அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டமை போன்றவையே ஆர்னோல்ட் தோற்கடிக்கப்படக் காரணம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். 

இந்த நிலையில் புதிய மேயராகப் பதவியேற்றிருக்கும் மணிவண்ணனுக்கு எஞ்சியிருக்கும் ஓராண்டு காலம் மிக மிக சவால் மிக்கதாக அமையப் போகிறது.

பல முனைகளிலிருந்து தொடுக்கப்படக் கூடிய எதிர்ப்புக்களைச் சமாளித்து சிறந்த திட்டங்களைக் கொண்ட மேயர் என்பதை நிலைநிறுத்துவதற்கு கடுமையான முயற்சிகளை அவர் எடுக்க வேண்டியதாக இருக்கும்.

முதலில் சிறந்ததொரு வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்து, அதனை நிறைவேற்றிய பின்னர் அதிலுள்ள விடயங்களை நடைமுறைச் சாத்தியமான வகையில் செயற்பாட்டுக்குக் கொண்டு வருதல் என தொடர்ச்சியான சவால்கள் அவர் முன்னால் காணப்படுகின்றன.

இதற்கும் அப்பால் தனது சொந்தக் கட்சிக்குள் இருந்தே மேற்கொள்ளப்படும் குழிபறிப்புகளுக்கு அவர் எவ்வாறு முகங்கொடுத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பி.ஹர்ஷன்

 

Comments