பறவைகளின் ஆச்சரியமும் பாதுகாப்பும் மிகுந்த இனப்பெருக்க செயற்பாடுகள் | தினகரன் வாரமஞ்சரி

பறவைகளின் ஆச்சரியமும் பாதுகாப்பும் மிகுந்த இனப்பெருக்க செயற்பாடுகள்

உலகில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களதும் இருப்புக்கும் நீடித்த நிலைப்புக்கும் இனப்பெருக்க செயற்பாடு இன்றியமையாததாகும். அதற்கேற்ப ஒவ்வொரு உயிரினமும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் பண்பையும் எதிர்பார்ப்பையும் இயல்பாகவே கொண்டுள்ளன. இது உயிரினங்களின் இருப்புக்கான ஆதார சக்தியாகும்.  இப்பின்புலத்தில் எல்லா உயிரினங்களும் இனப்பெருக்க செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியனவாக உள்ளன. என்றாலும்  ஒவ்வொரு உயிரினத்துக்கும் இனப்பெருக்க முறையானது வேறுபட்டதாகவும் உள்ளது. 

பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பண்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் இச்செயற்பாடு மிகுந்த நுணுக்கத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டவையாகும். அவை கூடமைக்கும் ஒழுங்கு, அதற்கான மூலப்பொருட்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன மிகவும் நுணுக்கமான திட்டமிடல்களுடன் கூடியவை. இவை பறவைக்கு பறவை வித்தியாசமானவை. ஆனால் பறவைகளின் இச்செயற்பாடுகள் அற்புதங்கள் நிறைந்தவை. ஆச்சரியமானவை. இருந்தும் இவற்றைப் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்வதில்லை. ஆனால் பறவைகளின் வாழ்வியலை அவதானிக்கையில் இந்த உண்மைகள் தெரியவரும்.  குறிப்பாக அவற்றின் நடத்தைகளையும் செயற்பாடுகளையும் நோக்கும் போது அவை எவ்வளவு தூரம் திட்டமிடலுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் செயற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவாகப் பறவைகள் வருடாவருடம் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் உயிரினமல்ல. சில பறவைகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் பண்பைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான பறவைகளுக்கு அதற்கான பருவ நிலையும், காலமும் ஒத்திசைந்து வர வேண்டும். அப்போது தான் அவை இனப்பெருக்கத்திற்கு தயாராகும்.

ஏனெனில் பறவைகளால் மனிதனைப் போன்று உணவை உற்பத்தி செய்து அல்லது உணவை சேமித்து வைத்து உண்ண முடியாது. ஆனால் அவற்றுக்கு சக்தி தேவை மிக அதிகம். அதனை ஈடுசெய்ய அவை பகல் வேளையில் உணவுக்கான முயற்சியில் ஈடுபடும். ஏனெனில் அவற்றுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும்  இரை கிடைக்காமையே அதற்கான காரணமாகும்.

என்றாலும் தென் மேல் பருவபெயர்ச்சி மற்றும் வடகீழ் பருவபெயர்ச்சி மழை காலநிலைகளின் போது பூச்சிகளதும் வண்டுகளதும் பெருக்கம் அதிகரித்து காணப்படும். அவை பறவைகளின் உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடியனவாக இருக்கும். அத்தோடு தானியங்களை மாத்திரம் உணவாகக் கொள்ளும் சிட்டுக்குருவி போன்ற பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தம் புரதத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊண் உண்ணும். அதற்கு வெட்டுக்கிளிகள், பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் என்பன பெரிதும் உதவும். அத்தோடு மழைக் காலநிலையின் போது மரஞ்செடிகளும், தாவரங்களும், புல்பூண்டுகளும் செழித்து வளர்ந்து காணப்படும். இவை பறவைகள் கூடுகள் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கக்கூடியனவாக இருக்கும்.

உணவு கிடைக்கபெறுவதும் கூடுகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கப்பெறுவதும் உறுதியாகும் போது பறவைகளின் உடலில் இனப்பெருக்கத்திற்கான ஹோர்மோன் இயல்பாகவே சுரக்கும். இவ்வாறான சூழலில் அவற்றில் இரண்டு வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். ஒன்று பெரும்பாலான ஆண் பறவைகளின் இறகுகளில் கடும் மஞ்சள், ஊதா, சிவப்பு உள்ளிட்ட அடர் வண்ணங்கள்  வெளிப்படும். குறிப்பாக ஆண் - பெண் வேறுபாடு தென் படாத பறவைகளில் கூட இனப்பெருக்க காலத்தில் இவ்வாறான மாற்றங்களை அவதானிக்கலாம். அடுத்து இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள ஆண் பறவைகள் நன்கு குரலெடுத்து ஓசை எழுப்பும். இதன் ஊடாக தம் எல்லைக்கும் அப்பாலுள்ள பெண் பறவை கவரப்பட்டு ஆண் பறவை இருக்குமிடத்திற்கு வந்து சேரும். இது இனப்பெருக்கத்திற்கு இணைப்பறவையைக் கவர்வதற்கான ஆண் பறவையின் உத்தியாகும். இவற்றின் விளைவாக பறவைகளின் இனவிருத்தி உடலுறுப்புகள் செயலூக்கம் பெறும்.

ஆனாலும் பறவைகள் இனப்பெருக்க செயற்பாடுகளில் ஈடுபடத் தயாராக முன்னர், தம் வாழ்வுக்கான கூடு அமைப்பதற்குரிய மூலப்பொருள் கிடைக்கப்பெறும் வசதி,  தமக்கும்  தம் குஞ்சுகளுக்கும் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி, அந்த உணவை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு வழங்குவதற்கான வசதி, தமக்கோ தம் முட்டைகளுக்கோ குஞ்சுகளுக்கோ பாம்பு, ஊர்வன உள்ளிட்ட ஏனைய எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாத இடம், எதிரிகள் நெருங்க முடியாத பாதுகாப்பான இடம் என்பவற்றில் கவனம் செலுத்திய படியே பறவைகள் கூடமைப்பதற்கான இடத்தைத் தெரிவு செய்யும்' என்று பறவையியல் நிபுணர் எம். அரவிந்த் தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரம், தமிழ்நாடு 'காக்கைக்கூடு சுற்றுச்சூழல் அமைப்பினர், அண்மையில் ஏற்பாடு செய்திருந்த பறவைகள் தொடர்பான இணைய வழி செயலமர்வில் விஷேட வளவாளராகக் கலந்து கொண்ட  சுற்றுச்சூழலியல் எழுத்தாளரும் பறவைகள் அவதானிப்பாளருமான கோவை சதாசிவம்,  'ஆண் தூக்கணாங்குருவி தம் கூட்டில் 80 வீதத்தை அமைத்துவிட்டு இணைப்பறவையை வரவழைத்து கூடு பொருத்தமாக உள்ளதா? எனக் கலந்துரையாடும். இச்சந்தர்ப்பத்தில் பெண் பறவை கூட்டினுள் சென்று அதன் அமைப்புக்களை அவதானிப்பதோடு எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாத இடமா? காற்று வீசும் போது முட்டைக்கும் கூட்டுக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்பது  தொடர்பிலும் கவனம் செலுத்தும். இச்சமயம் கூடு அமைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கில்  பெண் பறவை திருப்தி அடையுமாயின் எஞ்சிய பகுதியை ஆண் பறவை ஒரு சில நாட்களுக்குள் நிர்மாணித்து முடிக்கும். பலமாகக் காற்று வீசும் போது கூடு வேகமாக அசையுமாயின் முட்டைகள் ஒன்றுடன் ஒன்று உராய்வடைந்து சேதமடையலாம். அதனைத் தவிர்க்கும் வகையில் சேற்று மணலை கொண்டு வந்து கூட்டினுள் ஒரிடத்திலன்றி ஆங்காங்கே வைத்து கூட்டைச் சமநிலைப்படுத்தும். கூட்டினுள் சேற்று மணல் அரண் போன்று காணப்படும். மின்மினி பூச்சிகளைப் பிடித்துவந்து அந்த அரணில் ஒட்டியபடி வைக்கும். அப்பூச்சிகள் இரவில் ஔிரும். இது பாம்பு போன்ற எதிரிகளை திசை திருப்பிவிட தூக்கணாங்குருவி கையாளும் ஒரு உத்தி' என்றார்.

ஆனாலும்  'நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடு தொடர்பில் பெண்பறவை திருப்தியடையாவிட்டால் ஆண் பறவை அக்கூட்டை  நிர்மாணிக்கும் பணியை கைவிடுவதோடு அவ்வருடம் முழுவதும் ஆண் பறவை இனப்பெருக்க செயற்பாட்டிலும் ஈடுபடாது' என்றும் தெரிவிக்கின்றார் கோவை சதாசிவம்.

இவை இவ்வாறிருக்க, பாருகழுகுகள் போன்ற பெரிய கழுகுகள் செங்குத்தாக அமைந்துள்ள மலைகளிலும் பாறைப் பிளவுகளிலும் தான் கூடுகளை அமைக்கும். ஏனெனில் தமக்கோ, தம் முட்டை, குஞ்சுகளுக்கோ எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடே அதுவாகும்.

'ஆந்தைகள் மரப்பொந்துகளிலும் குகைகளிலும் தம் எச்சங்களை நிரப்பி கூடமைக்கும். ஆந்தையின் எச்சம் அதிக துர்வாடை மிக்கது. அதனைக் கொண்டு கூடமைத்து முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதன் நோக்கமானது, பாம்பு போன்ற எதிரிகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதேயாகும். துர்வாடை காரணமாக பாம்பு போன்ற ஊர்வன அவ்விடத்தை நெருங்காது. இதன்படி ஆந்தையானது தம் எச்சத்தையே தம் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான அரணாகப் பாவித்துக் கொள்கின்றது' என்கிறார் பறவையியல் நிபுணர் ரவிந்திரன் நடராஜன்.  இதேவேளை, கூடு அமைக்காது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஒரு பறவையே குயிலாகும். அது கூடு கட்டும் அளவுக்கு இனப்பெருக்க காலம் கிடையாது. அது  ஒரு முட்டையிட்டு மற்றொரு முட்டையிட பல வாரங்கள் இடை வெளி இருக்கும். அதனால் முட்டையிடவும் அம்முட்டையை அடை காக்கவும் காகம் போன்ற வேறுபறவைகளின் கூடுகளை குயில் தேடிக் கொள்கின்றது. பெண் காகம் முட்டையிட்டிருக்கிறதா? அடைகாக்கின்றதா? என்பதை ஆண் குயில் நோட்டமிட்டு அவதானித்து, கூட்டில் அடைகாக்கும் பெண் காகத்துடன் சேட்டை  செய்து அதனை சீண்டும். இதனால் அடை காக்கும் பெண் காகம் கோபமடைந்து ஆண் குயிலைத் தூரத்தத் தொடங்கும்.
ஆண் குயிலின் இந்த சேட்டை பெண் குயில் காகத்தின் கூட்டினுள் சென்று முட்டையிட்டு வெளியேறும் வரை நீடிக்கும். அதன் பின்னர் காகம் குயிலின் முட்டையின் வேறுபாட்டை அறியாது தம் முட்டையெனக் கருதி அடைகாத்து குஞ்சு பொரிக்கும். குயிலின் குஞ்சு ஆணாயின் காகத்திற்கு சந்தேகம் ஏற்டாது.

குயில் குஞ்சும் காகக் குஞ்சின் நிறத்திலேயே காணப்படும். ஆனால் பெண் குஞ்சாயின் நிற வேறுபாடு தென்படும். அதன் விளைவாக அக்குஞ்சை  தாய்க் காகம் விரட்டத் தொடங்கிவிடும். இருந்தும் அக்குஞ்சுகள் செல்லாது. ஏனெனில் அவற்றின் தாய் காகமே. இதன் விளைவாக சில குயில் குஞ்சுகள் உயிரிழக்கவும் கூட நேரிடும்' என்கிறனர் பறவையியல் நிபுணர்கள்.

அது மாத்திரமல்லாமல் சில பறவைகள் மரங்களின் நுனியில் கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். மேலும் சில பறவைகள் குளவிக்கூடுகளுக்கும் தேன்கூட்டுக்கும் அருகில் கூடுகளை அமைக்கும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கை செயற்பாடுகளின் அடிப்படை நோக்கம் பாம்பு போன்ற எதிரிகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதேயாகும்.

இவ்வாறு ஒவ்வொரு பறவையும் தம்மையும் தம் முட்டைகளையும் குஞ்சுகளையும் எதிரிகிளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தியபடி கூடுகளை அமைத்து முட்டையிட்டு இனப்பெருக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்த நடவடிக்கைகள் முற்றிலும் ஆச்சரியமிக்கவை. அற்புதங்கள் நிறைந்தவை என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார்

Comments